/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தலைமை அறிவித்தால் இடைத்தேர்தலில் அ.தி.மு.க., போட்டி
/
தலைமை அறிவித்தால் இடைத்தேர்தலில் அ.தி.மு.க., போட்டி
தலைமை அறிவித்தால் இடைத்தேர்தலில் அ.தி.மு.க., போட்டி
தலைமை அறிவித்தால் இடைத்தேர்தலில் அ.தி.மு.க., போட்டி
ADDED : ஜன 08, 2025 07:09 AM
ஈரோடு: ''ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், அ.தி.மு.க., தலைமை அறிவித்தால் போட்டியிடுவோம்,'' என்று மாநகர் மாவட்ட செயலாளர் ராமலிங்கம் தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில், 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி கட்சியாக இருந்த த.மா.கா., போட்டியிட்டது. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட யுவராஜா, 8,523 ஓட்டில் தோல்வியை தழுவினார். அடுத்து, 2023 இடைத்தேர்தலில் அ.தி.மு.க.,வே நேரடியாக களமிறங்கியது. முன்னாள் எம்.எல்.ஏ., தென்னரசு போட்டியிட்டு, 66,233 ஓட்டில் தோல்வியடைந்தார்.
இத்தேர்தலில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் தேர்தல் பணி செய்து, தி.மு.க., தேர்தல் வியூகங்களுக்கு அவ்வப்போது பதிலடி கொடுத்தனர். இந்நிலையில் சமீபத்தில் நடந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க., போட்டியிடாமல் பின்வாங்கியது.தற்போது ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த சட்டசபை தேர்தலுக்கு, 14 மாதங்களே உள்ள நிலையில், இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டுமா என்ற கேள்வி அ.தி.மு.க.,வினர் மத்தியில் எழுந்துள்ளது.
அதேநேரம் முன்னாள் எம்.எல்.ஏ., தென்னரசு, பகுதி செயலாளர் மனோகரன், முன்னாள் மேயர் மல்லிகா போன்றோர், போட்டியிட ஆலோசனை செய்து வருகின்றனர். அவர்கள் அனைவரும், 'இடைத்தேர்தலில் போட்டியிட்டால், 2026 சட்டசபை தேர்தலிலும், இதே தொகுதியில் எங்களுக்கு வாய்ப்பு தர வேண்டும். அதை உறுதிப்படுத்தினால் நிற்க தயார்' என்ற வேண்டுகோளை முன்வைப்பதாக தெரிகிறது.
கொங்கு மண்டலத்தில் குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் தனி செல்வாக்கு உள்ளதால், இடைத்தேர்தலை கட்சி தவிர்க்காது என்றே அ.தி.மு.க.,வினர் எதிர்பார்க்கின்றனர். இதுபற்றி ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் ராமலிங்கம் கூறுகையில், '' இதுபற்றி, நான் கருத்து கூற இயலாது. அதேநேரம், கட்சி தலைமை போட்டியிட அறிவித்தால் வேட்பாளரை நிறுத்தி, தேர்தலை சந்திப்போம்,'' என்றார்.