/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
உடல் நலம் பாதித்த யானை; பால் குடிக்க பரிதவித்த குட்டி
/
உடல் நலம் பாதித்த யானை; பால் குடிக்க பரிதவித்த குட்டி
உடல் நலம் பாதித்த யானை; பால் குடிக்க பரிதவித்த குட்டி
உடல் நலம் பாதித்த யானை; பால் குடிக்க பரிதவித்த குட்டி
ADDED : மார் 04, 2024 11:42 PM

சத்தியமங்கலம் : ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனச்சரகங்களில் யானை, புலி உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. சத்தி அருகே பண்ணாரியம்மன் கோவில் அருகில் உள்ள வனப்பகுதியில், நேற்று முன்தினம் இரவு ஒரு யானை பிளிறும் சத்தம் கேட்டது.
ரோந்து சென்ற வனத்துறையினர், சத்தம் வந்த இடத்திற்கு சென்று பார்த்தனர். ஒரு பெண் யானை சோர்வாக படுத்து கிடந்தது. அருகில் சில மாதமே ஆன குட்டியும் காணப்பட்டது.
இதையடுத்து, சத்தி புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையிலான மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டனர். யானைக்கு குளூக்கோஸ் மற்றும் ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்டது.
இரண்டு மாதங்களே ஆன பெண் குட்டி யானை, தாயிடம் பால் குடிக்க முடியாமல் தவித்தது. இதனால் யானைக்கு தொடர் சிகிச்சை அளிப்பதில் இடையூறு ஏற்பட்டது. இதனால் அருகிலேயே ஒரு குழி வெட்டி, அதற்குள் குட்டி யானையை இறக்கினர்; பின் புட்டிப்பால் வழங்கினர்.
அதே சமயம், யானையை பார்ப்பதற்காக மற்ற யானைகள் அதே பகுதியில் பிளிறியபடி முகாமிட்டுள்ளன. அந்த யானைகளை பட்டாசு வெடித்து விரட்டி விட்டு, யானைக்கு தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அந்த இடத்துக்கு மக்கள் வருவதை தடுக்கும் வகையில், யானை அருகில் மக்கள் செல்லாதபடி, வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

