UPDATED : நவ 13, 2026 07:45 PM
ADDED : நவ 13, 2026 07:02 PM
ஈரோடு: ஈரோடு மாவட்டம், வெள்ளோட்டில் பறவைகள் சரணாலயம் உள்ளது. மாவட்ட வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சரணாலயத்தில் உள்ள குளத்துக்கு கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீரின் கசிவுநீர் வரத்தாகும்.
இங்கு மஞ்சள் மூக்கு நாரை, கரண்டி வாயன், கூழைக்கடா, நத்தை குத்தி நாரை, வெள்ளை அரிவால் மூக்கன், நீர் காகம், சாம்பல் இருவாச்சி உட்பட, ஆஸ்திரேலியா மற்றும் பல்வேறு நாட்டு பறவைகள், 100க்கும் மேற்பட்டவை வரத்தாகும். இந்தாண்டு கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படாத நிலையில், பறவைகள் சீசன் துவங்கியுள்ளது.
இது குறித்து, மாவட்ட வன அலுவலர் பிரபா கூறியதாவது:
பருவமழை காலமான நவம்பர் மாதம் துவங்கி பிப்ரவரி மாதம் இறுதிவரை பறவைகள் வரும் சீசனாகும். நடப்பாண்டில் கடந்த மாதங்களில் போதிய மழையின்றியும், கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்காததாலும், குளத்தில் நீர்மட்டம் குறைந்தது. ஒரு மாதமாக பெய்யும் பருவமழையால் குளத்துக்கு ஓரளவு நீர் வரத்தாகி, போதிய தண்ணீர் உள்ளது. தற்போது சீசன் துவங்கி, பல பறவைகள் வந்து கொண்டிருக்கின்றன. வரும் நாட்களில் வரத்து மேலும் அதிகரிக்கும்.
இவ்வாறு கூறினார்.
