ADDED : அக் 24, 2024 01:24 AM
ஆகாயத்தாமரையால் நீர்வரத்து தடை
ஈரோடு, அக். 24-
கருவில்பாறை வலசில் உள்ள எல்லப்பாளையம் ஏரிக்கு, தண்ணீர் வரும் பிரதான வாய்க்காலில் முள் செடிகள், ஆகாயத்தாமரை உள்ளிட்டவைகளால், நீர்வரத்து தடைப்பட்டுள்ளது.
ஈரோடு மாநகராட்சி, 10வது வார்டுக்கு உட்பட்ட கருவில்பாறை வலசு பகுதியில், 26.65 ஏக்கர் பரப்பளவில் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு, நசியனுாரில் இருந்து வரும் கீழ்பவானி கிளை வாய்க்கால் மூலமாக வரும் தண்ணீர், கங்காபுரம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வரும் கசிவு நீர், மழை ஆகியவை முக்கிய நீர் வரத்துகளாக உள்ளன. இந்த ஏரி கருவில்பாறை வலசு, வில்லரசம்பட்டி, ராசாம்பாளையம், எஸ்.எஸ்.பி. நகர், மாணிக்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளின் முக்கிய நிலத்தடி நீராதாரமாக உள்ளது. ஏரியில் தற்போது, 7.90 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. சமீபத்திய தொடர் மழை காரணமாக, ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஏரியின் மேற்கு பகுதியில் அதன் நீர்வரத்து வாய்க்கால் அமைந்துள்ள எல்லப்பாளையம் பாலம் பகுதியில், வாய்க்கால் தெரியாத அளவுக்கு முள் செடிகள் புதர்போல் மண்டியுள்ளது. மேலும், ஆகாயத்தாமரைகள் படர்ந்து நீர்வரத்து தடைபட்டுள்ளது. எனவே, ஏரிக்கு தடையின்றி நீர்வரத்து கிடைக்கும் வகையில், நீர்வழி பாதையை சுத்தம் செய்ய வேண்டும் என அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

