/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காங்கேயம் அருகே விபத்தில் கறிக்கடை உரிமையாளர் பலி
/
காங்கேயம் அருகே விபத்தில் கறிக்கடை உரிமையாளர் பலி
ADDED : ஜூன் 06, 2025 01:05 AM
காங்கேயம், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ஷேக் அப்துல் காதர், 84; கறிக்கடை நடத்தி வந்தார். பக்ரீத் பண்டிகையை ஒட்டி, மூலனுார் அருகே கன்னிவாடி சந்தையில் ஆடு வாங்குவதற்கு, மகன்கள் அமானுல்லா, 55, காதர்ஷா, 52, இவர்களது நண்பர் சபிக் அகமது, 53, இவரது மகன் அப்துல்லா, 13, ஆகியோருடன், வேகன்-ஆர் காரில் சந்தைக்கு வந்தனர். ஆடுகளை வாங்கி ஆட்டோவில் ஏற்றிவிட்டு பின்னால் காரில்
சென்றனர்.
காங்கேயம்-திருப்பூர் ரோடு படியூர் அருகே மதியம், 2:00 மணியளவில் சென்றனர். அப்போது எதிரே வந்த லாரி எதிர்பாராதவிதமாக கார் மீது மோதியது. இதில் ஐந்து பேரும் பலத்த காயம் அடைந்தனர். அப்பகுதி மக்கள் மீட்டு, காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவ பரிசோதனையில் ஷேக் அப்துல் காதர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. மற்ற நான்கு பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக லாரி டிரைவர் விஷ்ணு வரதன், 32, மீது காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.