ADDED : ஜூலை 25, 2026 05:58 AM
அந்தியூர்:அந்தியூர் தோட்டக்கலை உதவி இயக்குனர் நந்தினி விடுத்த செய்திக்
குறிப்பில்
கூறியிருப்பதாவது:
பயிர் காப்பீடு திட்டத்தில் நடப்பு காரீப்
பருவத்தில் தோட்டக்கலை பயிர்களை பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்
கூட்டுறவு சங்கங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள்
காப்பீடு செய்யலாம்.இயற்கை சீற்றங்களால் பயிர் இழப்பில் இருந்து
விவசாயிகள் நலன், வாழ்வாதாரம் உறுதிப்படுத்தப்படும். 'எல்நினோ'
நிகழ்வால் தென்மேற்கு பருவமழை, இயல்பைவிட குறையும் என
எதிர்பார்க்கப்படுகிறது. குறுவை, மானாவாரி பயிர்கள் பாதிக்கும்
வாய்ப்புள்ளது.
இதை கருத்தில் கொண்டு விவசாயிகள், வாழை, மரவள்ளி,
வெங்காயம், உருளை கிழங்கு, மஞ்சள் பயிர்களுக்கு பிரதம மந்திரி பயிர்
காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்யலாம்.
தேசிய பயிர் காப்பீடு
இணைய தளத்தில் கடந்த ஜூன், 25 முதல் காப்பீடு செய்யப்படுகிறது.
காரீப் பருவ வெங்காயம், உருளை பயிர்களுக்கு ஆக., 31க்குள் காப்பீடு
செய்ய வேண்டும்.
மகசூல் இழப்பு, விதைப்பு, நடவு செய்ய இயலாத நிலை,
விதைப்பு, நடவு பொய்த்தல், பகுதி சார்ந்த மற்றும் பயிர் வளர்ச்சி கால இடர்
நிகழ்வுகளால் ஏற்படும் இழப்பு, அறுவடைக்கு பின் ஏற்படும்
இழப்புக்காக காப்பீடு செய்யப்படுகிறது.
அறிவிக்கை
செய்யப்பட்ட பயிர்களுக்கு கடன் பெறும் விவசாயிகளுக்கு அந்தந்த
தொடக்க வேளாண் கடன் கூட்டுறவு சங்கம் அல்லது தேசிய வங்கியில்
காப்பீடு செய்து கொள்ளலாம். மற்ற விவசாயிகள், இ-சேவை மையங்களில்
அல்லது தேசிய பயிர் காப்பீடு இணைய தளமான https://pmfby.gov.in ல் உள்ள
'விவசாயிகள் கார்னர்' வாயிலாக பதிவு செய்யலாம்.
இறுதி தேதி
நீட்டிக்கப்படாது. விண்ணப்பத்துடன், வி.ஏ.ஓ., வழங்கிய அடங்கல்,
விதைப்பு அறிக்கை, வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல்
இணைத்து, கட்டண தொகையை செலுத்திய ரசீதையும் பதிவேற்ற வேண்டும்.
கூடுதல் விபரத்துக்கு வட்டார தோட்டக்கலை அலுவலர், உதவி
தோட்டக்கலை அலுவலர், வங்கி கிளைகளை அணுகலாம். இவ்வாறு
தெரிவித்துள்ளார்.
