/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
டெல்லிக்கு சென்று முதல்வர்கள் போராடும் நிலை: தி.மு.க., பரப்புரை கூட்டத்தில் அமைச்சர் நேரு வருத்தம்
/
டெல்லிக்கு சென்று முதல்வர்கள் போராடும் நிலை: தி.மு.க., பரப்புரை கூட்டத்தில் அமைச்சர் நேரு வருத்தம்
டெல்லிக்கு சென்று முதல்வர்கள் போராடும் நிலை: தி.மு.க., பரப்புரை கூட்டத்தில் அமைச்சர் நேரு வருத்தம்
டெல்லிக்கு சென்று முதல்வர்கள் போராடும் நிலை: தி.மு.க., பரப்புரை கூட்டத்தில் அமைச்சர் நேரு வருத்தம்
ADDED : பிப் 18, 2024 10:22 AM
பெருந்துறை: 'உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல், பாசிசம் வீழட்டும்; இந்தியா வெல்லட்டும்' என்ற தலைப்பில், திருப்பூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் பரப்புரை கூட்டம், பெருந்துறை அருகே சரளையில் நேற்று நடந்தது. ராஜ்யசபா எம்.பி., அந்தியூர் செல்வராஜ் தலைமை வகித்தார். அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் மற்றும் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் நேரு பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் கயல்விழி செல்வராஜ், ''திருவள்ளுவரையே காவி சாயம் பூசி ஒரு சாமியாரக்க பா.ஜ., முயல்கிறது. இந்தியையும், சமஸ்கிருதத்தையும் வளர்க்க முனைகிறது. வருமானத்துறை, அமலாக்கத் துறை, சி.பிஐ., சோதனை என பயமுறுத்தி, பா.ஜ.,வில் பிற கட்சியினரை சேர்த்து வருகின்றனர்,'' என்றார்.
அமைச்சர் சாமிநாதன் பேசுகையில், ''மோடி ஆட்சி மீண்டும் வந்தால் உரிமைகளை இழந்து விடுவோம். ஜனநாயகத்தின் மீது மக்கள் நம்பிக்கையை இழந்து வருகிறார்கள். மத்திய அரசு, 20 ஆயிரம் கோடி ரூபாயை நிறுத்தி வைத்துள்ளது. நிறுத்தப்பட்ட நிதி வந்தால் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி விடுவோம் என்ற காழ்ப்புணர்ச்சியில் மத்திய அரசு நிதியை நிறுத்தி வைத்துள்ளது,'' என்றார்.
அமைச்சர் நேரு பேசுகையில், ''இதுவரை இல்லாத வகையில் இந்த முறை மத்திய அரசு, தமிழக அரசை மிரட்டுகிறது. சென்னை, துாத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு தமிழக அரசு நிதியை வைத்தே கொடுத்தது. இன்று முதல்வர்களே டெல்லி சென்று போராட வேண்டிய நிலையுள்ளது. அமைச்சர்களை தினந்தோறும், மத்திய அரசு மிரட்டுகிறது. அமைச்சர்கள் குறித்து பொய் தகவல்களை பரப்புகின்றனர். ஆளுநர்களை வைத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்படாமல் செய்கின்றனர். பா.ஜ.,வினருக்கே தெரியும். தமிழகத்தில் வெற்றி பெற முடியாது. அதனால்தான் தி.மு.க.,வினர் எளிதாக வெற்றி பெற்று விடக் கூடாது என நெருக்கடி தருகின்றனர்,'' என்றார்.
கூட்டத்தில் எம்.எல்.ஏ.,க்கள் திருப்பூர் செல்வராஜ், அந்தியூர் வெங்கடாசலம், பெருந்துறை தெற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் சாமி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.