/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாவட்ட புறநகர் பகுதியில் தொடரும் மழை
/
மாவட்ட புறநகர் பகுதியில் தொடரும் மழை
ADDED : மே 24, 2024 06:43 AM
ஈரோடு மாவட்டத்தின் புறநகர பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் ஏரி, குளம், குட்டைகள் நிரம்பியுள்ளன. நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக குண்டேரிபள்ளத்தில், 124 மி.மீ., மழை பெய்தது. இதேபோல் ஈரோடு-15.20, மொடக்குறிச்சி-1.10, பெருந்துறை-15, பவானி-7.90, கவுந்தப்பாடி-32.40, அம்மாபேட்டை-26.80, வரட்டுபள்ளம்-54.60,கோபி-99.40, எலந்தகுட்டை மேடு-53.60, கொடிவேரி-69, நம்பியூர்-56, சத்தி-56, பவானிசாகர்-66.40, தாளவாடியில்-24.50 மி.மீ., மழை பதிவானது.
நிரம்பிய 100 ஏக்கர் குளம்
நம்பியூர் அருகே எலத்துாரில், 100 ஏக்கர் பரப்பிலான எலத்துார் குளம் உள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன் குளம் நிரம்பியது. அதன் பிறகு போதிய மழையின்றி வறண்டு காணப்பட்டது. கடந்த, 2019ல் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் குளம் துார் வாரப்பட்டது. கடந்த மூன்று நாட்களாக பெய்த தொடர் மழையால் குளம் நிரம்ப தொடங்கியது. இந்நிலையில் குளம் நிரம்பி உபரி நீர் வெளியேறுவதால், மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அருவிகளில் கொட்டிய வெள்ளம்
கடம்பூர் மலையில் மூன்று நாட்களாக தொடர் மழை பெய்கிறது. இதனால் கடம்பூர் செல்லும் வழியில் தன்னாசியப்பன் கோவில், மல்லியம்மன் கோவில், இரட்டை பாலம், இடுக்குபாறை உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் அருவி போல் கொட்டியது. நேற்று முன்தினம் நள்ளிரவில் மல்லியம்மன்துர்கம் மலைப்பகுதியில் பலத்த மழை கொட்டியது. இதனால் மல்லியம்மன் கோவில் அருகில் திடீர் அருவியை மூழ்கடித்து வெள்ளம் கொட்டியது. நேற்று காலை படிப்படியாக நீரின் அளவு குறைந்தது.
தரைப்பாலம் மூழ்கியது
கடம்பூர் மலையில் நேற்று முன்தினம் மாலை முதல் கன மழை பெய்தது. இதனால் காடகநல்லி, நகலுார், பெரிய உள்ளே பாளையம், கரளையம், பசுவனாபுரம், இருட்டிபாளையம் பகுதி பள்ளங்கள் நிரம்பி, கடைசியாக குரும்பூர் பள்ளம், சர்க்கரை பள்ளம் வழியாக செல்கிறது. இதனால் நகலுார் செல்லும் வழியில் உள்ள கச்சம்பள்ளத்தில், தரைப்பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் சென்றது. இதனால் காடக நல்லி, உள்ளேபாளையம் பகுதிகளுக்கு செல்ல வேண்டிய மக்கள் தவித்தனர். வெள்ளம் வடிந்த பின், 3 மணி நேரம் காத்திருந்து கடந்து சென்றனர். குன்றி செல்லும் வழியில் மாமரத்துபள்ளத்தில் இரண்டாவது நாளாக தரைப்பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் சென்றது.
சாலையில் உருண்ட பாறை
கன மழையால் கே.என்.பாளையத்திலிருந்து கடம்பூர் செல்லும் சாலையில், இடுக்கு பாறை என்ற இடத்தில், சாலையோரமிருந்த இரண்டு பாறைகள் மண் சரிந்து நடு ரோட்டில் விழுந்தது. அப்போது கடம்பூரிலிருந்து சத்தி நோக்கி அரசு பஸ் வந்தது. பாறைகள் சாலையில் கிடந்ததால் பஸ் ஓரம் கட்டப்பட்டது. இதுகுறித்து கடம்பூர் போலீசாருக்கு தகவல் தரப்பட்டது. ஜே.சி.பி., இயந்திரம் மூலம் ஒரு மணி நேரம் போராடி பாறைகள் அகற்றப்பட்டன. இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஒரே நாளில் 13 அடி நீர்மட்டம் உயர்வு
டி.என்.பாளையம் அடுத்த கொங்கர்பாளையத்தில் உள்ள குண்டேரிப்பள்ளம் அணை, 42 அடி உயரம் கொண்டது. அடர்ந்த வனப்பகுதியில் பெய்யும் மழை நீர் பிரதான வரத்தாக உள்ளது. நேற்று முன்தினம், 22.22 அடியாக நீர்மட்டம் இருந்தது. நேற்று முன்தினம் இரவு குண்டேரிப்பள்ளம் அணைப்பகுதியில், 124 மி.மீ., மழை கொட்டி தீர்த்தது. இதனால் அணைக்கு, 563 கன அடி நீர் நேற்று வரத்தானது. காலை, 8:௦௦ மணி நிலவரப்படி அணை நீர்மட்டம், 36.10 அடியாக உயர்ந்தது. கனமழையால் ஒரே நாளில், 13.88 அடி நீர்மட்டம் உயர்ந்தது.
- நிருபர் குழு -