/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
போலி நகை கொடுத்து ஏமாற்றிய தம்பதி கைது
/
போலி நகை கொடுத்து ஏமாற்றிய தம்பதி கைது
ADDED : டிச 23, 2024 09:28 AM
கோபி: கோபி அருகே அரசூரை சேர்ந்தவர் தவமணி, 46; சத்தி சாலையில் துணிக்கடை நடத்தி வருகிறார். மாக்கிணாங்கோம்பையை சேர்ந்தவர் பிருந்தா, 29; இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பிருந்தா தனது குடும்ப செலவுக்காக, அடிக்கடி தவமணியிடம் பணம் வாங்கினார். இந்த வகையில், 15 லட்சம் ரூபாய் வரை பெற்றுள்ளார். அதேசமயம் பணத்தை திருப்பி கொடுக்கும் வரை, 53 பவுன் நகைகளை வைத்திருக்குமாறு தவமணியிடம் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் பணத்தேவை இருந்ததால், அவர் கொடுத்த நகையுடன் தவமணி சென்று, பணத்தை திருப்பி கேட்டார். அதற்கு பிருந்தா நகைகளை, வங்கியில் அடமானம் வைத்து பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளார். கடத்துாரில் ஒரு வங்கியில் நகைகளை அடமானம் வைத்தபோது, அனைத்தும் போலி என்பது தெரியவந்தது.
இதுகுறித்து தவமணி கேட்டதற்கு, பணத்தை திருப்பி தந்து விடுவதாக கூறிய பிருந்தா, காலம் தாழ்த்தி வந்தார். இந்நிலையில் பணத்தை கேட்ட தவமணிக்கு, பிருந்தாவும், அவரது கணவர் ஆனந்தனும், கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். தவமணி கொடுத்த புகாரின்படி, தம்பதியரை கடத்துார் போலீசார் நேற்று கைது செய்தனர்.

