ADDED : அக் 16, 2026 06:53 AM
ஈரோடு:கீழ்பவானி பாசன பயனாளிகள் நலச்சங்க தலைவர் நல்லசாமி, ஈரோட்டில் கூறியதாவது: காளிங்கராயன் பாசன விவசாயிகள், காளிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்தனர்.
இம்மனுவை நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார். இந்நிலையில் கீழ்பவானி பாசன விவசாயிகளும், கீழ்பவானி வாய்க்காலிலும் தண்ணீர் திறக்க வேண்டி உள்ளதால், தங்கள் மனுவையும் இணைத்து விசாரிக்க மனுதாக்கல் செய்தனர். இந்நிலையில் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி, காளிங்கராயன், கொடிவேரி பாசனம் என, மூன்று பாசன வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டியுள்ளது. இதனால் மூன்று பாசன விவசாயிகளின் கருத்தையும் கேட்டறிந்த பின்னரே, நீதிமன்றம் ஆணை பிறப்பிக்க இயலும். இரு வார காலத்துக்குள் அனைத்து பாசன விவசாயிகளிடமும் கருத்துக்களை கேட்க வேண்டும் என நீர்வளத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். அனைவரது கருத்தையும் கேட்டு நீர் திறப்பை உறுதி செய்ய வேண்டும். இருக்கும் நீரை வைத்து, தேவை அடிப்படையில் பாசனங்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு கூறினார்.
