/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
செத்து மிதந்த மீன்கள்; சாய ஆலைக்கு கெடு
/
செத்து மிதந்த மீன்கள்; சாய ஆலைக்கு கெடு
ADDED : ஜன 05, 2026 05:47 AM

ஈரோடு: ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே காலிங்கராயன் வாய்க்காலில், நேற்று காலை, ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. அதிர்ச்சியடைந்த அப்பகுதி விவசாயிகள், அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ராஜ்குமார் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, தண்ணீர் மாதிரிகளை சேகரித்து சென்றனர்.
காலிங்கராயன் மதகு பாசன சபை தலைவர் சேதுராஜ் கூறியதாவது:
காலிங்கராயன் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பது தொடர்கதையாகி வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதலே, வாய்க்காலில் மீன்கள் இறக்க ஆரம்பித்து விட்டன. அதன் தொடர்ச்சியாக நேற்று காலை, அதிக மீன்கள் இறந்து மிதந்தன. இரு நாட்களாக மழை பெய்ததை பயன்படுத்தி, வாய்க்கால் கரையோர ஆலைகள் கழிவுநீரை வெளியேற்றியதே மீன்கள் இறப்புக்கு காரணம்.
இதை அதிகாரிகளிடமும் தெரிவித்துள்ளோம். அடுத்த, 72 மணி நேரத்துக்குள், சட்ட விரோத கழிவுநீர் வெளியேற்றும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், சம்பந்தப்பட்ட ஆலைகளை நாங்களே கண்டறிந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

