/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கடைசி ஆடி வெள்ளியை முன்னிட்டு கோவில்களில் திரண்ட பக்தர்கள்
/
கடைசி ஆடி வெள்ளியை முன்னிட்டு கோவில்களில் திரண்ட பக்தர்கள்
கடைசி ஆடி வெள்ளியை முன்னிட்டு கோவில்களில் திரண்ட பக்தர்கள்
கடைசி ஆடி வெள்ளியை முன்னிட்டு கோவில்களில் திரண்ட பக்தர்கள்
ADDED : ஆக 16, 2025 02:06 AM
ஈரோடு, கடைசி ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு அலங்காரம் செய்து, பூஜைகள் நடந்தன.
ஈரோடு பெரிய மாரியம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர் என பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின் தங்ககாப்பு அலங்காரத்தில் பெரிய மாரியம்மன் அருள்பாலித்தார். பூஜையில் பங்கேற்ற பெண்கள், நெய் விளக்கு ஏற்றி வழிபட்டனர்.
திருமணமான பெண்கள் விரதமிருந்து, மாங்கல்ய பூஜை செய்து அம்மனை வழிபட்டனர். இதேபோல், பெரிய மாரியம்மனின் வகையறா கோவில்களான நடு மாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோயில்களிலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. தவிர, மாநகரில் உள்ள கொங்காலம்மன், சூரம்பட்டி மாரியம்மன், கள்ளுக்கடை மேடு பத்ரகாளியம்மன் உள்ளிட்ட கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.* கோபி அருகே, பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில், நேற்று காலை முதல், ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அம்மன் சன்னதி எதிரேயுள்ள, 60 அடி குண்டத்தில் பக்தர்கள் மிளகு கலந்த உப்பு கற்களை துாவியும், தீபமேற்றியும் வழிபட்டு சென்றனர். இதேபோல், கோபி சாரதா மாரியம்மன், மொடச்சூர் தான்தோன்றியம்மன், அளுக்குளி செல்லாண்டியம்மன் கோவிலில், திரளான பக்தர்கள் நேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
* அந்தியூர், பத்ரகாளியம்மன் கோவிலில் கடைசி ஆடி வெள்ளியை முன்னிட்டு, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். ஏராளமானோர் அம்மனை தரிசித்து சென்றனர்.
* புன்செய்புளியம்பட்டி மாரியம்மன், ஊத்துக்குளியம்மன், பிளேக் மாரியம்மன், காமாட்சியம்மன், ஆதிபராசக்தி அம்மன், சவுடேஸ்வரியம்மன் கோவில்களில் அபிஷேக, ஆராதனைகளுடன் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. மாரியம்மன், பிளேக் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலையில் பிளேக் மாரியம்மன், காமாட்சியம்மன் கோவில் வளாகத்தில்,108 திருவிளக்கு பூஜை நடந்தது. ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.