ADDED : செப் 06, 2025 01:57 AM
ஈரோடு, : ஈரோடு மாநகராட்சி, 21வது வார்டுக்கு உட்பட்ட கொங்குநகர் மூன்றாவது வீதியில் ஏராளமான வணிக நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதனால் இப்பகுதி சாக்கடைகளில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி விடுவதாக மக்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து அண்ணா தியேட்டர் அருகில் உள்ள மூன்று ரோடு சந்திப்பில் சாக்கடையை அகலப்படுத்தி, தரைப்பாலம் கட்டும் பணியை மாநகராட்சி சார்பில் நடந்து வருகிறது. இதற்காக அங்குள்ள பாதை அடைக்கப்பட்டு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பெரியவலசில் இருந்து சம்பத்நகர், கலெக்டர் அலுவலகம், நசியனுார் செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாற்றுப்பாதையை பயன்படுத்தும் போது, பெரியவலசு நால்ரோடு, மாணிக்கம்பாளையம் ரோடு, முனிசிபல் காலனி உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கடந்த, 20 நாட்களுக்கும் மேலாக பணி நடப்பதால், வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். மேம்பாட்டு பணியை விரைந்து முடிக்க கோரிக்கை எழுந்துள்ளது.