/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
போதையால் கோபி தொழிலாளி கொலை: 4 பேர் கைது
/
போதையால் கோபி தொழிலாளி கொலை: 4 பேர் கைது
ADDED : நவ 21, 2025 01:28 AM
சத்தியமங்கலம், போதையால் ஏற்பட்ட தகராறில், கேர்மாளம் மலை கிராமத்தில், கோபியை சேர்ந்த தொழிலாளி கொன்று புதைக்கப்பட்ட சம்பவத்தில், விவசாயி உள்பட நான்கு பேர் கும்பலை, போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் தாளவாடி தாலுகா, ஆசனுாரை அடுத்த கேர்மாளம் மலை கிராமத்தில் உள்ள உள்ள சி.கே.பாளையத்தில் கடந்த, 16ம் தேதி ஒரு இடத்தில் கடும் துர்நாற்றம் வீசியது. அப்பகுதியில் ஆடு மேய்த்தவர்கள் சென்று பார்த்தபோது, அரைகுறையாக புதைக்கப்பட்ட சடலம் தென்பட்டது. அவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசனுார் போலீசார் மறுநாள் சென்றனர்.
தோண்டி பார்த்ததில் ஆண் சடலம் என்பது தெரிய வந்தது. சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்ட பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவர்கள், உடற்கூறு பரிசோதனை செய்தனர். இதில் இறந்து போனவருக்கு, 45 வயது இருக்கும். தலையில் படுகாயம் இருந்ததும், கொலை செய்யப்பட்டு, 15 நாட்கள் இருக்கலாம் என்பதும் தெரிய வந்தது. ஆசனுார் போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளையும், கொலை செய்யப்பட்டவர் யார் என்பது குறித்தும் விசாரித்தனர்.
இதில், கோபி அருகே கொண்டையம்பாளையத்தை சேர்ந்த கூலி தொழிலாளி செல்வம், 42, என்பது உறுதி செய்யப்பட்டது. திருமணமாகாத செல்வம், கடந்த சில மாதங்களாக கேர்மாளம் மலை கிராமங்களில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். மது குடிக்கும் பழக்கம் இருந்ததால், இது தொடர்பான தகராறில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் கேர்மாளம் பகுதியில் நிலத்தை குத்தகைக்கு விவசாயம் செய்து வந்த கடம்பூர், காடகநல்லியை சேர்ந்த பொம்மன் என்பவரை பிடித்து விசாரித்தனர். இதில் செல்வத்தை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இது தொடர்பாக போலீசார் கூறியதாவது:
இறந்து போன செல்வம் மற்றும் அவரது ஊரை சேர்ந்தவர்கள் சதீஷ், 37, ரமேஷ், 47; இவர்கள் மூவரும், பொம்மன் நிலத்தில் வேலை செய்துள்ளனர். இவர்களுடன் பொம்மன், 48, இவரது மச்சான் கேர்மாளத்தை சேர்ந்த மாதேவன், 40, ஆகியோர், கர்நாடக மாநிலம் உடையர்பாளையத்துக்கு மது குடிக்க கடந்த மாதம் அக்.,20ம் தேதி மாலை சென்றுள்ளனர். போதை தலைக்கேறிய நிலையில் ரமேஷ் மற்றும் சதீசை, செல்வம் தகாத வார்த்தை பேசியுள்ளார். இதனால் மூவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. ஆனாலும் ஐந்து பேரும் கேர்மாளம் தோட்டத்துக்கு திரும்பியுள்ளனர். அங்கு வந்து மீண்டும் மது அருந்தியபோது, மறுபடியும் மூவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ரமேஷ் கட்டையாலும், சதீஷ் கல்லாலும் தலையில் தாக்கியதில் செல்வம் இறந்து விட்டார். இதையறிந்த இருவரும், செல்வம் இறந்து விட்டதாக பொம்மனிடம் கூறிவிட்டு மறுநாள் காலை சென்று விட்டனர். அதிர்ச்சி அடைந்த பொம்மனும், மாதேவனும், செல்வத்தின் உடலை புதைத்து விட்டு தலைமறைவாகினர். நான்கு பேரும் கைது செய்யப்பட்டு, ஈரோடு மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வாறு போலீசார் கூறினர்.

