ADDED : நவ 03, 2026 05:56 AM
ஈரோடு: கரூர் மண்மங்கலம் வடக்கு ஆத்துார் காந்தி நகரை சேர்ந்தவர் கோபிநாத், 28; தீபாவளி பண்டிகைக்காக துணி எடுக்க, தனது உறவினருடன் ஈரோட்டுக்கு வந்தார்.
பிறகு சிவகிரி அம்மன் கோவில் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு பைக்கில் நேற்று முன்தினம் மாலை சென்றார். மொடக்குறிச்சி நால்ரோடு பகுதியில் நான்கு வாலிபர்கள் வழிமறித்து, தங்களை ஒயின்ஷாப்பில் விடுமாறு கூறி தகராறு செய்தனர். தகாத வார்த்தை பேசி கொலை மிரட்டல் விடுக்கவே, அப்பகுதி மக்கள் பார்த்து நான்கு பேரையும் சுற்றி வளைத்து பிடித்து, மொடக்குறிச்சி போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் ஈரோடு வீரப்பன்சத்திரம் சூளை வசந்த்குமார், 26; ராமநாதபுரம் அக்ரஹாரம் ஜெகன் காலனி அமரன், 25; கள்ளகுறிச்சி சங்கராபுரம் இளைஞர்குப்பத்தை சேர்ந்த திருப்பதி, 21, ஐயப்பன், 21, என தெரிய வந்தது. நான்கு பேரும் டைட்டானிக் டான்ஸ் குரூப் நடன கலைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விசாரணைக்குப் பிறகு நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.
