UPDATED : அக் 30, 2026 06:31 AM
ADDED : அக் 30, 2026 06:17 AM

சென்னிமலை:சென்னிமலை டவுன் பஸ் ஸ்டாண்ட் அருகில், கொத்தங்காடு இரண்டாவது வீதி வழியாக நேற்று முன்தினம் இரவு ஜல்லிக்கற்கள் ஏற்றி சென்ற ஒரு டிப்பர் லாரி, சாலையோர மின் கம்பத்தின் மீது மோதியது.
இதில் கம்பம் உடைந்த நிலையில், கான்கிரீட் கம்பி பலத்தால் விழாமல் தப்பியது. இந்த விபத்தால் நகரின் ஒரு சில பகுதிகளில் மின் வினியோகம் தடைபட்டது. மின்வாரிய ஊழியர்கள் நேற்று காலை முதல் மாலை வரை சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். சேதமடைந்த கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய கம்பத்தை நட்டு மின் கம்பிகளை இணைக்கும் பணியை முழுமையாக முடித்தனர். இதனால் மாலையில் மின் வினியோகம் சீரானது. விபத்தை ஏற்படுத்திய லாரியை மின்வாரிய அதிகாரிகள் பிடித்தனர். மின் கம்பம் சேதமானது, துறைக்கு ஏற்பட்ட இழப்பீட்டுக்காக லாரி உரிமையாளருக்கு, மின்வாரிய தரப்பில் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.
