/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு மாநகர தி.மு.க., விரைவில் இரண்டாக பிரிப்பு சட்டசபை கூட்டத்தொடருக்கு பின் அறிவிப்பு?
/
ஈரோடு மாநகர தி.மு.க., விரைவில் இரண்டாக பிரிப்பு சட்டசபை கூட்டத்தொடருக்கு பின் அறிவிப்பு?
ஈரோடு மாநகர தி.மு.க., விரைவில் இரண்டாக பிரிப்பு சட்டசபை கூட்டத்தொடருக்கு பின் அறிவிப்பு?
ஈரோடு மாநகர தி.மு.க., விரைவில் இரண்டாக பிரிப்பு சட்டசபை கூட்டத்தொடருக்கு பின் அறிவிப்பு?
ADDED : ஏப் 27, 2025 04:40 AM
ஈரோடு: ஈரோடு மாநகரை தி.மு.க.,வில் இரண்டாக பிரித்து செயலர் உட்பட பிற பதவிகளை பிடிக்க, பகுதி செயலாளர்கள் சென்னை சென்று அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகளை சந்தித்து திரும்பியுள்ளனர்.
ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளராக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி உள்ளார். இந்த மாவட்டத்தின் கீழ் ஈரோடு மாநகர செயலராக சுப்பிரமணியம் உள்ளார். எட்டு பகுதி செயலர்கள், வார்டு, கிளை நிர்வாகிகள் செயல்படுகின்றனர். மாநகராட்சி பகுதியில் ஈரோடு கிழக்கு, மேற்கு என, 2 சட்டசபை தொகுதி வருவதால், மாநகரை தி.மு.க.,வை நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிக்க, பல ஆண்டாக பேசி வருகின்றனர்.மாநகராட்சி நிர்வாகம், மாநகர செயலர் மீதான அதிருப்தி உட்பட பல காரணத்தை, கட்சியினர் அடுக்குகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம், மாநகர பகுதியில் உள்ள எட்டு பகுதி செயலர், பிற நிர்வாகிகள் சென்னை சென்று அமைச்சர்கள் முத்துசாமி, நேரு, உதயநிதி, அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி போன்றோரை சந்தித்து, தங்கள் கோரிக்கைக்கு அழுத்தம் கொடுத்து வந்துள்ளனர்.
இதுபற்றி தி.மு.க., மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:
ஈரோடு மாநகர செயலரின் கீழ், எட்டு பகுதி செயலர் உட்பட நுாற்றுக்கணக்கான பதவிகள் உள்ளன. மேயராக அவரது மனைவியே உள்ளதாலும், டாஸ்மாக் முதல், சாயக்கழிவு பிரச்னை, வரி வசூல், ஏலம், டெண்டர், பணி நியமனம் என அனைத்தும் ஒரே இடத்தில் குவிகிறது. மாநகர செயலர் கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர். பகுதி செயலாளர்கள், 8 பேரில், 1 செட்டியார், 1 முதலியார், 1 வன்னியர் தவிர மற்ற ஐந்து பேரும் கவுண்டர்கள். மாநகர பகுதியில் கவுண்டர்களுக்கு இணையாக முதலியார் உள்ளதால், மாநகரை இரண்டாக பிரித்து, 2 மாநகர செயலரை நியமித்து, ஒன்றை முதலியார் சமூகத்துக்கு வழங்க கோரி வருகின்றனர். மறுபுறம் எம்.எல்.ஏ., பதவியையும் குறிவைத்து, மாநகர செயலர் பதவியில் ஒன்றை தங்களுக்கு வழங்க தனிப்பட்ட நபர்களாக பலரும் முயல்கின்றனர்.
முதலியார் சமூகத்தை சேர்ந்த எம்.எல்.ஏ., சந்திரகுமார், கவுண்டர் சமூகத்தை சேர்ந்த திண்டல் குமாரசாமி, வி.சி.நடராஜன், குறிஞ்சி தண்டபாணி என பலரும் இதற்காக காய் நகர்த்தி வருகின்றனர்.
இதில் சந்திரகுமார் மட்டும் எம்.எல்.ஏ.,வாகவும், தி.மு.க.,வில் சார்பு அணியான கொள்கை பரப்பு இணை செயலராக உள்ளார். இது பிரதான கட்சி பொறுப்பு இல்லை என்பதால், அவருக்கு வழங்க ஒரு பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.
மறுபுறம், மாநகர செயலர் பொறுப்பை கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர்களே வைத்து கொள்ள வேண்டும் என்றும், முதலியார் கை ஓங்கினால் எம்.எல்.ஏ., சீட் பெறுவதில் பிரச்னை எழும் என முட்டுக்கட்டை போடுகின்றனர். இருப்பினும் நிர்வாக வசதி, தெற்கு மாவட்ட தி.மு.க.,வை விரிவாக்கவும், கூடுதலாக சில நுாறு பேருக்கு நிர்வாக பொறுப்பு வழங்கவும், இரண்டாக பிரிக்க தீவிரம் காட்டப்படுகிறது. சட்டசபை கூட்டத்தொடருக்கு பின், அறிவிப்பு வரலாம். இவ்வாறு கூறினர்.