/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.40 லட்சம் திருடிய ஈரோடு தம்பதிக்கு 'கம்பி'
/
ரூ.40 லட்சம் திருடிய ஈரோடு தம்பதிக்கு 'கம்பி'
ADDED : செப் 08, 2025 03:39 AM

ஈரோடு: உதவி செய்வது போல நடித்து, 40 லட்சம் ரூபாயை திருடிய தம்பதியை, ஈரோடு போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு, மூலப்பாளையம், ரைஸ் மில் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஆனந்த், 50. அதே பகுதியில் பேன்சி ஸ்டோர் வைத்துள்ளார். புதிதாக ஈரோடு கே.கே.நகர் லட்சுமி கார்டன் பகுதியில் வீடு கட்டியுள்ளார்.
புதுமனை புகுவிழா மற்றும் வீடு மாற்றம் செய்வது உள்ளிட்ட செலவுகளுக்காக, 40 லட்சம் ரூபாயை வீட்டில் வைத்திருந்தார். பீரோவில் வைத்திருந்த பணத்தை கடந்த, 2ம் தேதி காணவில்லை. அதிர்ச்சியடைந்த ஆனந்த், ஈரோடு தாலுகா போலீசில் புகாரளித்தார்.
அப்பகுதி 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், ஆனந்த் வீட்டருகே வசிக்கும், தனியார் பஸ் டிரைவர் மோகன்குமார், 50, அவரது மனைவி வள்ளி, 47, அடிக்கடி ஆனந்த் வீட்டுக்கு வந்து உதவி செய்தது தெரிந்தது.
சந்தேகத்தின் படி, இருவரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், பணத்தை திருடியதை ஒப்புக் கொண்டனர். பணத்தை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.