ADDED : அக் 25, 2026 07:04 AM
ஈரோடு:நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை, நிலச்சரிவு, சாலைகள் துண்டிப்பால் அங்கு பல பகுதிக்கு பஸ் இயக்கமும், சுற்றுலா பயணிகள் வருகை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. ஊட்டிக்கு செல்லும் பல்வேறு வழிகளிலும் அம்மாவட்ட மக்கள் தவிர, மற்றவர்களை அனுமதிக்கவில்லை.
அதேபோல, ஈரோடு மாவட்ட கலெக்டர் கந்தசாமி வெளியிட்ட அறிக்கையில், 'ஈரோடு மாவட்டத்தில் இருந்து ஊட்டிக்கு இன்றும் (25), நாளையும் (26) சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும்,'' என கேட்டு கொண்டுள்ளார். அதற்கேற்ப, ஈரோட்டில் இருந்து ஊட்டி, கோத்தகிரி, கூடலுார், குன்னுார் உட்பட பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்பட்ட அரசு பஸ்கள் நேற்று மதியம் முதல் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுபற்றி, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
ஈரோட்டில் இருந்து தினமும், 20 பஸ்கள் ஊட்டி, கூடலுார், குன்னுார் உட்பட பல்வேறு பகுதிக்கு இயக்கப்படுகிறது. அம்மாவட்டத்தில் நிலச்சரிவு, சாலைகள் துண்டிப்பு உள்ளிட்ட காரணத்தால் அந்த பஸ்கள் இயக்கப்படவில்லை. ஈரோடு - மேட்டுப்பாளையம் இடையே மட்டும் பஸ்கள் இயக்கப்படுகிறது. நேற்று முதல், மூன்று நாட்களுக்கு ஊட்டிக்கு அரசு பஸ்களை இயக்கக்கூடாது என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. நிலைமை சீரான பின் இயக்கப்படும்.
இவ்வாறு கூறினர்.
