ADDED : அக் 25, 2026 07:04 AM

சத்தியமங்கலம்:தாளவாடி மலை பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல், தொடர்ந்து மழை பெய்ததால் காட்டாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு சிக்கள்ளி, தலமலை, பாலபடுகை உள்ளிட்ட பல கிராமங்களில் உள்ள தரை பாலங்களை மூழ்கடித்தபடி வெள்ள நீர் சென்றது.
மதியம் 3;00 மணிக்கு பிறகு நீர் வடிந்தது. பையனபுரம் -சிமிட்டஹள்ளி செல்லும் வழியில், சாலையோரம் இருந்த மரம் முறிந்து, போக்குவரத்து தடைபட்டது. இதே போல் முதியனுார், தாளவாடி பகுதிகளிலும் மரங்கள் முறிந்து விழுந்தன. கடம்பூரை அடுத்த குன்றி, எக்கத்தூர், உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது. மழையால் மலை கிராம மக்கள் வீட்டிலேயே முடங்கினர்.
சத்தியமங்கலம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள சாக்கடைகள் நிரம்பி மழை நீரும், சாக்கடை நீரும் கலந்து சாலையில் வழிந்தோடியது. நகராட்சி ஊழியர்கள் சாக்கடை அடைப்பை சரி செய்தனர். நேற்று மாலை முதல் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.
* பனையம்பள்ளி, நல்லுார், புங்கம்பள்ளி, தேசிபாளையம், விண்ணப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கன மழையாக கொட்டி தீர்த்தது. மழைநீர் மண்ணுடன் கலந்து, செந்நிறத்தில் மாறி வடிகால், சிறு ஓடைகள் மற்றும் பள்ளங்களில் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் பு.புளியம்பட்டி அண்ணாநகர் வீடுகளில் மழைநீர் புகுந்தது. ஊருக்குள் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்ததால் மக்கள் அவதிக்கு ஆளாகினர். விவசாயிகளுக்கு ஐப்பசி மாத உழவு செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது.
நல்லுார் பஞ்., எரங்காட்டுப்பாளையத்தில், தாழ்வான பகுதியில் மழைநீர் சூழ்ந்து, வெளியேற வழியில்லாமல் வீடுகளுக்குள் புகுந்தது. அப்பகுதி மக்கள் தெரிவித்த தகவலின்படி, நல்லுார் பஞ்., செயலர் சம்பத் தலைமையில், ஊழியர்கள் தேங்கிய மழைநீரை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினர்.
* கோபியில் நேற்று முன்தினம் இரவு முதல், விடிய விடிய மழை பெய்தது. நாகர்பாளையம் சாலையில் உள்ள சீத்தம்மாள் காலனியின், முதல் மற்றும் இரண்டாம் வீதிகளில் மழைநீர் சூழ்ந்து நின்றது. இதனால் போக்குவரத்து பாதித்தது. கோபி நகராட்சி மற்றும் கலிங்கியம் பஞ்சாயத்து பணியாளர்கள், மழைநீர் வெளியேற வழி செய்தனர். அதன்பின் வாகன போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது.
இதேபோல், மொடச்சூர் வாரச்சந்தை வளாகத்தில் மழைநீர் புகுந்து, குட்டையாக தேங்கி நின்றது. இதனால் வியாபாரிகள் பக்கெட் கொண்டு, மழை நீரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மழையளவு விபரம்
பவானிசாகர் அணையில் அதிகபட்சமாக 54.20 மி.மீ., மழை பெய்தது. மொடக்குறிச்சி-2.20, கொடுமுடி-6.20, பவானி-30.60, கவுந்தப்பாடி-25, அம்மாபேட்டை-19, வரட்டுபள்ளம் அணை-36.30, கோபி-8.20, எலந்தகுட்டை மேடு-3.40, கொடிவேரி அணை-11.20, குண்டேரிபள்ளம் அணை-19, நம்பியூர்-5, சத்தி-20, தாளவாடி-12.20 மி.மீ., மழை பெய்தது.
