/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நீர் பாசன வசதி கேட்டு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
/
நீர் பாசன வசதி கேட்டு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
நீர் பாசன வசதி கேட்டு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
நீர் பாசன வசதி கேட்டு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
ADDED : மே 15, 2025 01:48 AM
புன்செய்புளியம்பட்டி, பவானிசாகர் பொதுப்பணித்துறை அலுவலகம் முன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், நிறுவனர் ஈசன் முருகசாமி தலைமையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, எட்டு கிராமங்களை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஊர்வலமாக சென்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை கட்டுமான பணிக்காக, விவசாய நிலங்களை வழங்கிய எட்டு கிராம விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, நீர் பாசன வசதி செய்து தரக்கோரி விவசாயிகள் கோஷமிட்டனர். மதியம், 3:00 மணி வரை போராட்டம் தொடர்ந்த நிலையில், பொதுப்பணித்துறை அலுவலகம் முன் திடீரென ஷாமியானா அமைத்து, விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி கூறியதாவது:
பவானிசாகர் அணை கட்டுவதற்கு, நிலம் வழங்கிய விவசாயிகள் தற்போது புதுப்பீர் கடவு, பட்ரமங்கலம், பசுவபாளையம், ராஜன் நகர், காந்தி நகர், வடவள்ளி உள்ளிட்ட எட்டு கிராமங்களில் வசித்து வருகின்றனர். அணை கட்ட நிலம் வழங்கியவர்களுக்கு, மாற்று இடம் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவர்களது வாழ்வாதாரத்திற்கு தண்ணீர் இதுவரை வழங்கப்படவில்லை.
ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட விவசாயிகளின் பாசனத்திற்கும், குடிநீருக்கும் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணைக்கு, நிலம் வழங்கிய மக்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றனர். பவானிசாகர் அணை கட்டி, 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் கோரிக்கை நிறைவேறவில்லை. ஆகவே மக்களின் உரிமையான, பாசன நீரை வழங்க திட்டம் நிறைவேற்ற வேண்டும் என, தமிழக அரசை வலியுறுத்தும் விதமாக காத்திருப்பு போராட்டம் நடத்துகிறோம். இவ்வாறு கூறினார்.
காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்க நிர்வாகிகளுடன், செயற்பொறியாளர் அருள் அழகன், பொதுப்பணித்துறை திட்ட வடிவமைப்பு பொறியாளர் ரவி, சத்தியமங்கலம் தாசில்தார் ஜமுனா ராணி, பவானிசாகர் ரேஞ்சர் சதாம் உசேன் ஆகியோர் பேச்சு
வார்த்தை நடத்தினர். அதில், மத்திய அரசின் பர்வேஸ் செயலி மூலம், திட்ட வடிவமைப்பு பொறியாளர் நிலத்தை அளவீடு செய்து, கொத்தமங்கலம் நீரேற்று நிலையம் மூலம் மேற்படி பகுதிகளுக்கு நீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும். நீர்வளத்துறை தலைமை பொறியாளரிடம், நீர் பாசன வசதி பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வரும், 15 நாட்களுக்குள் தேதி அறிவிக்கப்படும் என, உறுதியளித்ததை தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு மாலை, 5:00 மணிக்கு கலைந்து சென்றனர்.