ADDED : மே 31, 2024 03:18 AM
பூவரசி மாரியம்மன்
கோவில் தீ மிதி விழா
சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தை அடுத்த கோட்டமாளம் அருகே சுஜில்கரை மலை கிராமத்தில், பூவரசி மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு நடப்பாண்டு தீ மிதி விழா நேற்று முன்தினம் நடந்தது.
நுாற்றுக்கணக்கான மக்கள் ஆட்டுக்கிடா பலியிட்டும், பொங்கல் வைத்தும் வழிபட்டனர். நேற்று காலை கம்பம் பிடுங்கப்பட்டது. அதை தொடர்ந்து அம்மன் திருவீதியுலா, மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. விழாவில் கோட்டமாளம், சுஜில்கரை, செலுமி தொட்டி, திங்களூர், காடட்டி உள்ளிட்ட மலை கிராமங்களை சேர்ந்த, 500க்கும் மேற்பட்டோர் கலந்து
கொண்டனர்.
ரூ.2.40 லட்சத்துக்கு
சூரியகாந்தி விதை ஏலம்
காங்கேயம்,-
வெள்ளகோவில் அரசு ஒழுங்குமுறை விற்பனை கூட மையத்தில், சூரியகாந்தி விதை ஏலம் நேற்று நடந்தது. ஏலத்துக்கு, 107 மூட்டைகளில், 5,260 கிலோ விதை வரத்தானது. ஒரு கிலோ அதிகபட்சம், 47.74 ரூபாய், குறைந்தபட்சம், 38.74 ரூபாய்க்கும் விற்பனையானது. மொத்தம், 2.40 லட்சம் ரூபாய்க்கு விற்றது.
ஈரோடு கால்நடை சந்தையில்
90 சதவீத மாடுகள் விற்பனை
ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 5,000 ரூபாய் மதிப்பில், 70 கன்றுகள், 25,000 ரூபாய் முதல், 65,000 ரூபாய் மதிப்பில், 300 எருமை மாடுகள், 25,000 ரூபாய் முதல், 80,000 ரூபாய் மதிப்பில், 350 பசு மாடுகள், 70,000 ரூபாய்க்கு மேலான விலையில், நுாற்றுக்கும் மேற்பட்ட கலப்பின மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மஹராஷ்டிரா மாநில வியாபாரிகள், விவசாயிகள் மாடுகளை வாங்கி சென்றனர். லோக்சபா தேர்தல் துவங்கிய பின், மாடுகள் விற்பனை மந்தமாக இருந்த நிலையில், பல வாரங்களுக்குப்பின், 90 சதவீத மாடுகள் விற்றன. கோடை முடிந்து, பருவமழை துவங்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள், வியாபாரிகள் அதிகமாக மாடுகளை வாங்கி சென்றனர்.
பூசாரிகள் எதிர்பார்ப்பு
திருப்பூர், மே 31-
தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் கிராம கோவில் பூசாரிகள் பேரவை, பூ கட்டுவோர் பேரவை மற்றும் அருள் வாக்கு பேரவை சார்பில், கொங்கு மண்டல பொதுக்குழு கூட்டம் பெருமாநல்லுாரில் நடந்தது.
மாநகர மாவட்ட தலைவர் திருச்செல்வம் தலைமை வகித்தார். ஈரோடு மாவட்ட பூசாரிகள் பேரவை இணை அமைப்பார் மணியன் வரவேற்றார். கோவை இந்தரேஷ்வர மடாலயம் ஸ்ரீ ராஜ தேவேந்திர சுவாமிகள், மாநில பொதுச்செயலாளர் சோமசுந்தரம், மாநில இணை பொதுச்செயலாளர் விஜயகுமார், மண்டல அமைப்பு செயலாளர் குமரவேல், சிவகுரு, சிவ ஸ்ரீ சிவமந்திர சுவாமிகள் உள்பட பலர்
பங்கேற்றனர்.
அங்கேரிபாளையம் பட்டத்தரசியம்மன் கோவில் அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ளதாக கூறி, இடிக்க உள்ள தமிழக அரசின் முடிவை மாற்றி கொள்ள வேண்டும். கோவில்களில் நடக்கும் திருவிழாக்களின் போது, அந்தந்த பகுதியில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும். தி.மு.க., அரசு தனது வாக்குறுதிபடி, அனைத்து கிராம கோவில் பூசாரிகளுக்கும் மாத ஊக்க தொகையாக, 5 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.