/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மர்ம விலங்கின் கால் தடம்; சிறுத்தையா என சந்தேகம்
/
மர்ம விலங்கின் கால் தடம்; சிறுத்தையா என சந்தேகம்
ADDED : அக் 16, 2024 07:08 AM
சென்னிமலை: சென்னிமலை அருகே சில்லாங்காட்டுவலசு, குட்டக்காட்டு தோட்டத்தை சேர்ந்த விவசாயி குமாரசாமி, 58; இவரது தோட்டம் சென்னிமலை வனப்பகுதியை ஒட்டி உள்ளது.
அங்குள்ள தனது தோட்டத்தில், பட்டி அமைத்து, 25 வெள்ளாடு வளர்த்து வருகிறார். கடந்த ஆறு மாதத்தில் பட்டியில் இருந்து ஏழு ஆடுகள் காணாமல் போயுள்ளன. வெறி நாய் ஆட்டை கொன்று இழுத்து சென்றிருக்கும் என நினைத்திருந்தனர். இரு நாட்களாக சென்னிமலை பகுதியில் அடைமழை பெய்து வருவதால் குமாரசாமி ஆட்டுப்பட்டி அருகில் உள்ள பாதையில் ஈரப்பதம் ஏற்பட்டுள்ளது. நேற்று காலை தோட்டத்துக்கு அவர் சென்றபோது, ஆட்டுப்பட்டி அருகே நீண்ட துாரத்துக்கு மர்ம விலங்கு கால் தடம் பதிவாகி இருந்தது. பெரிய அளவில் இருந்ததால், சென்னிமலை வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் ஆய்வு செய்தனர்.
சில மாதங்களுக்கு முன் வாய்ப்பாடி வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக பேசப்பட்டது. அப்போது முதலே சென்னிமலை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக மக்கள் அச்சத்தில் உள்ளனர். தற்போது மர்ம விலங்கு குறித்து கண்டறிந்து, வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.