/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நடப்பாண்டு காட்டன் நுாலில் இலவச சேலை தயாரிப்பு
/
நடப்பாண்டு காட்டன் நுாலில் இலவச சேலை தயாரிப்பு
ADDED : ஆக 22, 2024 03:37 AM
ஈரோடு: இலவச வேட்டி, சேலை திட்டத்தில் நடப்பாண்டு இலவச சேலையை காட்டன் நுாலிலும், வேட்டியை பாலியஸ்டர் காட்டனிலும் உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும், பொங்கல் பண்டிகையின்போது ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலை ஆகியவை காட்டன் நுாலில் உற்பத்தி செய்யப்படும். இந்தாண்டு பாலியஸ்டர் நுாலில் இலவச சேலை மேற்கொள்ள அரசு உத்தேசித்த நிலையில், விசைத்தறியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். காட்டன் நுாலில் ஒரு நாளைக்கு, 4.20 லட்சம் சேலையும், பாலியஸ்டர் நுாலில் ஒரு நாளைக்கு, 1.20 லட்சம் சேலை மட்டுமே உற்பத்தி செய்ய இயலும். தவிர, அனைத்து விசைத்தறியிலும் அதனை ஓட்ட இயலாது என்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் கைத்தறித்துறை அமைச்சர் காந்தி தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. அமைச்சர் சாமிநாதன் முன்னிலை வகித்தார். அதிகாரிகள், தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சுரேஷ், அமைப்பு செயலாளர் கந்தவேல், நுால் உற்பத்தியாளர்கள், சைசிங் அமைப்பினர், ஒப்பந்ததாரர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டம் குறித்து, விசைத்தறியாளர்கள் கூறியதாவது:கூட்டத்தில், இந்தாண்டு இலவச சேலையை காட்டன் நுாலில் உற்பத்தி செய்ய முடிவானது. இதற்கான நுால் ஓரிரு நாளில் கூட்டுறவு நுாற்பாலையில் இருந்து, விசைத்தறி கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கி பணியை துவங்கவும் உத்தேசித்துள்ளனர். நுாலுக்கான டெண்டரும், சில நாட்களில் இறுதி செய்ய உள்ளனர். இலவச வேட்டிக்கு '40'ஸ் பாலியஸ்டர் காட்டன் நுால் (65 சதவீதம் பாலியஸ்டர், 35 சதவீதம் காட்டன்) வழங்க திட்டமிட்டுள்ளனர். இப்பணி விரைவாக துவங்க உள்ளது. மேலும் அடுத்த ஆண்டுகளில், இலவச சேலை பாலியஸ்டரில் உற்பத்தி செய்யும் வகையில் திட்டமிடப்படும் என்றும், அதற்கேற்ப விசைத்தறிகளை தயார் செய்து கொள்ளவும் கேட்டு கொண்டுள்ளனர். மேலும் பாலியஸ்டர் நுால் வழங்கும் பட்சத்தில் அடுத்தாண்டு ஏப்., - மே மாதமே டெண்டரை இறுதி செய்து, முன்னதாகவே நுாலை வழங்கி, உற்பத்தியை துவங்கவும் யோசனை தெரிவிக்கப்பட்டது. இதையும் அரசு தரப்பில் ஏற்றுள்ளனர். நெசவாளர்களுக்கான கூலி உயர்வு பற்றி கோரிக்கை எழுப்பப்பட்டது. அரசு தரப்பில் பரிசீலித்து கூறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இவ்வாறு கூறினர்.