/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொண்டத்து காளியம்மன் கோவிலில் குண்டம் விழா
/
கொண்டத்து காளியம்மன் கோவிலில் குண்டம் விழா
ADDED : ஜன 12, 2024 01:31 PM
கோபி: பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில், 20 ஆயிரம் பக்தர்கள், தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கோபி தாலுகா பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் நடப்பாண்டு குண்டம் விழா, நேற்று காலை நடந்தது. இதற்காக அம்மன் சன்னதி எதிரே, 60 அடி நீள குண்டம் தயார் செய்யப்பட்டது. ஐந்து டன் விறகுகள் மூலம், நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு நெருப்பு மூட்டினர். வீரமக்கள் அடங்கிய குழுவினர், நேற்று காலை, 6:00 மணிக்கு குண்டத்தை தயார் செய்தனர். நேற்று காலை, 6:15 மணிக்கு, குண்டத்தின் முன் சிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருளினார்.
காலை, 6:40 மணிக்கு, திருக்கொடி தீபம் ஏற்றப்பட்டு, குண்டத்துக்கு சிறப்பு பூஜை நடந்தது. தலைமை பூசாரி ராமானந்தம் குண்டம் முன் நின்று, எலுமிச்சம்பழம், வாழைப்பழம் மற்றும் செவ்வந்தி பூக்களை அள்ளி வீசினார். அதை அங்கு கூடியிருந்த பக்தர்கள் லாவகமாக பிடித்தனர்.
பின் குண்டத்தில் இருந்த நெருப்பை, இரு கைகளால் அள்ளி வீசி, 7:00 மணிக்கு முதலில் குண்டம் இறங்கி துவக்கி வைத்தார். அவரை தொடர்ந்து, வீரமக்கள், முக்கியஸ்தர்கள், போலீசார், ஊர்க்காவல் படையினர், தீயணைப்பு வீரர்கள், பக்தர்கள் என வரிசையாக குண்டம் இறங்கினர்.
பலர் குழந்தைகளை கழுத்து பகுதியில் சுமந்தும், தீச்சட்டியை கையில் ஏந்தியும், கையில் வேப்பிலையுடனும் தீ மிதித்தனர். காலை, 11:00 மணி வரை தொடர்ந்த நிகழ்வில், 20 ஆயிரம் பக்தர்கள் தீ
மிதித்தனர்.