/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு-திருப்பூர் மாவட்டத்தில் மெல்ல அழிந்து வரும் கைத்தறி-நெசவுத்தொழில்
/
ஈரோடு-திருப்பூர் மாவட்டத்தில் மெல்ல அழிந்து வரும் கைத்தறி-நெசவுத்தொழில்
ஈரோடு-திருப்பூர் மாவட்டத்தில் மெல்ல அழிந்து வரும் கைத்தறி-நெசவுத்தொழில்
ஈரோடு-திருப்பூர் மாவட்டத்தில் மெல்ல அழிந்து வரும் கைத்தறி-நெசவுத்தொழில்
ADDED : அக் 21, 2024 07:22 AM
ஈரோடு: ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் அதிகரித்து வரும் பின்னலாடை தொழில் நிறுவனங்களால், கைத்தறி, நெசவுத்தொழில் மெல்ல அழிந்து வருவதாக, கைத்தறி நெசவாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் பவானி, ஜம்பை, ஆப்பக்கூடல், மயிலம்பாடி, நம்பியூர், பவானிசாகர், சென்னிமலை, விஜயமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், 12 ஆண்டுகளுக்கு முன் வரை, 30 ஆயிரம் கைத்தறி நெசவாளர்கள் நேரடியாக, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் மறைமுகமாகவும் இருந்தனர். இவர்கள் புகழ்பெற்ற பவானி ஜமக்காளம், சென்னிமலை, விஜயமங்கலம் பகுதிகளில் காட்டன் போர்வை ரகம், நம்பியூர், பவானிசாகர் சுற்றுவட்டார கிராமங்களில், புடவை ரகங்களும் கைத்தறி மூலம் நெசவு செய்து விற்பனை செய்து வந்தனர்.
தற்போது ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் அதிகரித்து வரும் பின்னலாடை தொழில் நிறுவனங்களால், கைத்தறி, நெசவுத்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. காட்டன் போர்வை, ஜமக்காளம், புடவை குறைந்த அளவிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் மட்டும், 180க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. விசைத்தறிகளின் வருகையால், கைத்தறி தொழில் கடும் பாதிப்புக்கு உள்ளாகின. நேரடியாக, மறைமுகமாக, 80- ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர் இருந்த நிலையில், 30 ஆயிரத்துக்கும் குறைவாகவே தற்போது உள்ளனர்.இதுகுறித்து கைத்தறி நெசவாளர்கள் கூறியதாவது:
கைத்தறியில் காட்டன் நுால்களை பயன்படுத்தி நெசவு செய்து வருகிறோம். இதற்கு கடும் உழைப்பை செலுத்த வேண்டி இருக்கும். நாள் முழுவதும் நெய்தாலும், 300 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை உற்பத்தி செய்யும் பீஸ்களின் அடிப்படையில் கூலி கிடைக்கும். 800 ரூபாய் சம்பாதிக்க இரண்டு போர்வை தயாரிக்க வேண்டும். கைத்தறியில் செய்யப்படும் போர்வை, புடவை நீண்ட நாள் உழைக்க கூடியவை. ஆனால், இவ்வற்றுக்கு சந்தையில் போதிய விலை கிடைப்பதில்லை.
காட்டன் போர்வை தயாரிக்க பயன்படுத்தும் காட்டன் நுால் ஒரு கிலோ, 450 ரூபாய் ஆகிறது. ஆனால், விசைத்தறிக்கு பயன்படுத்தப்படும் ஓயி நுால் ரகங்கள், காட்டன் மற்றும் பாலியஸ்டர் கழிவு பஞ்சில் தயாரிக்கப்படுவதால் ஒரு கிலோ, 100 ரூபாய்க்கு கிடைக்கிறது. கைத்தறியில் நெய்யப்படும் போர்வை, 400 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை ஆகிறது. ஆனால், விசைத்தறியில் நெய்யும் போர்வையை, 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை மார்க்கெட்டில் வாங்க முடியும். கைத்தறி ரகங்களான போர்வை, புடவைகளை விசைத்தறியில் நெய்யக்கூடாது என்று தடை உத்தரவு உள்ளது. இதை மீறி விசைத்தறியில் தயாரித்து குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக கைத்தறி நெசவு தொழிலாளர் பலர் தொழிலை விட்டு வேறு பணிக்கு சென்று விட்டனர்.
அதுமட்டுமின்றி ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் பின்னலாடை மில், கார்மெண்ட்ஸ் ஆடை உற்பத்தி நிறுவனங்களின் பணிக்கு, ஏராளமான கைத்தறி நெசவு தொழிலாளர்கள் சென்று விட்டனர். கிராமங்களில் வீடுகளுக்கே வாகனங்கள் வருவதால் மிக எளிதாக வேலைக்கு சென்று சம்பாதிக்க முடிகிறது. இவ்வாறு கூறினர்.
ஈரோடு மாவட்டத்தில் மெல்ல அழிந்து வரும் கைத்தறி நெசவுத்தொழிலை மீட்க, அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படுமா என கைத்தறி நெசவுத்தொழிலாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.