ஓடைகளில் கழிவுநீர் கலப்பு விவகாரம் ஆய்வு அதிரடி; அடுத்த கட்டம் 'கப்சிப்'
ஓடைகளில் கழிவுநீர் கலப்பு விவகாரம் ஆய்வு அதிரடி; அடுத்த கட்டம் 'கப்சிப்'
ADDED : ஜூன் 15, 2026 04:11 AM

ஈரோடு:ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில் சாய, சலவை ஆலை கழிவுநீர் நேற்று முன்தினம் காலை முதல் மதியம் வரை, பல மணி நேரம் வெள்ளை நுரையுடன் ஓடியது.
இதுகுறித்து நமது நாளிதழில் செய்தி வந்தது. இதன் எதிரொலியாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள், பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து மாசுக்கட்டுபாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ராஜ்குமார் கூறியதாவது: ஓடை கழிவுநீர் மாதிரி எடுத்து சோதனை செய்த போது, 850க்கும் குறைவாகவே டி.டி.எஸ்., அளவு இருந்தது. ஆனாலும் கழிவுநீரை ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம். ஓடை கரையை ஒட்டியுள்ள ஆலைகளில் இரண்டு நாட்கள் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளோம். முதல் நாளான இன்றே (நேற்று), 16 ஆலைகளில் ஆய்வு நடந்துள்ளது. இப்பணி நாளையும் (இன்று) தொடரும். இது தொடர்பான ஆய்வறிக்கை கலெக்டரிடம் சமர்ப்பிக்கப்படும். சுத்தரிகரிக்கப்படாத கழிவுநீரை ஆலைகள் வெளியேற்றி இருந்தால், அவர் அனுமதியுடன் சம்பந்தப்பட்ட ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஓடையில் சாய கழிவுநீர் கலப்பது தொடர்பாக மக்கள் உடனுக்குடன் தகவல் அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
