/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கால மாற்றத்துக்கு ஏற்ப பயிர் சாகுபடி அவசியம்'
/
கால மாற்றத்துக்கு ஏற்ப பயிர் சாகுபடி அவசியம்'
ADDED : நவ 01, 2025 12:44 AM
காங்கேயம், காங்கேயம் ஒன்றியம், ஆலம்பாடி, தாமரைநாச்சியார் மண்டபத்தில், வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் வனத்துறை சார்பில், திருப்பூர் மாவட்ட அளவிலான விவசாயிகள் கருத்தரங்கு நடந்தது. வேளாண் உதவி இயக்குனர் வசந்தாமணி வரவேற்றார்.
திருப்பூர் மாவட்ட வேளாண் துறை இணை இயக்குனர் சுந்தரவடிவேலு, தலைமை தாங்கினார். பொங்கலுார் வேளாண்மை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி கலையரசன் பேசியதாவது:
விவசாயிகள், காலநிலை மாற்றம் அறிந்து சாகுபடி மேற்கொள்ள வேண்டும். காங்கயம் வட்டாரத்தில் மானாவாரி பயிராக சோளம், பெருமளவில் பயிரிடப்படுகிறது. தென்னை சாகுபடியிலும் விவசாயிகள் ஈடுபடுகின்றனர். தென்னைக்கு, தேவைக்கு மிகுதியாக நீர் பாய்ச்சுவதன் வாயிலாக, நீர் விரயம், இடுபொருள் செலவு, விவசாய தொழிலாளர்களுக்கான சம்பளம் உள்ளிட்ட உற்பத்தி செலவினங்கள் அதிகரிக்கும். அந்தந்த காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப, எவ்வளவு தண்ணீர், உரம் பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்து சாகுபடி செய்யும் போது, செலவினம் வெகுவாக குறையும்; வருவாய் பெருகும். இவ்வாறு, அவர் பேசினார்.வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை விற்பனை குழு முதன்மை செயலாளர் சண்முகசுந்தரம் பேசுகையில், 'இயற்கை விவசாயத்தில் மேற்கொள்ளப்படும் பயிர்களுக்கு, சந்தை வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. விற்பனை சார்ந்த தொழில்நுட்பம், உழவர் சேவை மையம் மற்றும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்'' என்றார்.
விவசாயிகளுக்கு, வேளாண் துறை சார்பில் பனை விதைகள், தோட்டக்கலை துறை சார்பில் காய்கறி விதை தொகுப்பு வழங்கப்பட்டது. பசுமை ஆலோசகர் ஸ்ரீயஷ்வந்தினி நன்றி கூறினார். ஏற்பாடுகளை, வேளாண் அலுவலர் ரேவதி மற்றும் 'அட்மா' அலுவலர்கள் செய்திருந்தனர்.

