ADDED : ஜூலை 15, 2026 05:42 AM
ஈரோடு;ஈரோடு திருமகன் ஈ.வெ.ரா., சாலையில், தாலுகா அலுவலக வளாகத்தின் முன்புறம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கூடுதல் வணிக வளாக கட்டடம் உள்ளது.
கட்டடத்தை மகளிர் சுய உதவி குழுவினர் வாடகைக்கு எடுத்து, பொருட்களை விற்பனை செய்தல், கண்காட்சி நடத்தி வருகின்றனர். இதற்கு பெண் பொறுப்பாளர் ஒருவர் உள்ளார்.கடைக்கு கண்ணாடியால் ஆன கதவு உள்ளது. நேற்று காலை, 9:15 மணியளவில் மர்ம நபர் கடையின் முன்புற கண்ணாடி கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்றார். 9:30 மணியளவில் கடையை திறக்க வந்த பெண் பொறுப்பாளர், கடைக்குள் ஆசாமி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அங்கிருந்தவர்களிடம் தெரிவித்தார். அவர்கள் அறிவுரைப்படி கதவின் கைப்பிடி இரண்டையும் சேர்த்து சங்கிலியால் கட்டி பூட்டினார். தகவலறிந்து மக்கள் கடை முன் கூடிய நிலையில், தப்பி செல்ல முயன்றார். ஆனால் மக்கள் கடைக்குள்ளேயே இருக்கும் வகையில் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு டவுன் போலீசார் சென்று விசாரித்தனர். ஈரோடு ராசாம்பாளையத்தை சேர்ந்த சரவணன், 37, என தெரியவந்தது. மொத்தம் மூன்று பேர் வந்ததாக தெரிவித்தார். அவர் மீது குற்ற வழக்கு இருப்பதும் தெரிய வந்தது.அவரை பைக்கில் ஏற்றி டவுன் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். அங்கு விசாரணை நடத்தியதில், மூன்று மாதமாக சரவணன், சற்று மன நலம் பாதிக்கப்பட்டு, அடிக்கடி வீட்டை விட்டு வெளியே செல்வதும், வீட்டுக்கு வருவதுமாக இருந்துள்ளார். அவரது தாயார் பாப்பாளிடம் விசாரணை நடத்தப்பட்டது. மன நலம் பாதித்து சிகிச்சை பெறுவதும் தெரியவந்தது. போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
