sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 18, 2025 ,மார்கழி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

செய்திகள் சில வரி்களில்... ஈரோடு

/

செய்திகள் சில வரி்களில்... ஈரோடு

செய்திகள் சில வரி்களில்... ஈரோடு

செய்திகள் சில வரி்களில்... ஈரோடு


ADDED : பிப் 09, 2024 11:04 AM

Google News

ADDED : பிப் 09, 2024 11:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூரில் விஷம் குடித்த

கல்லுாரி மாணவி மரணம்

அந்தியூர், தவிட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் பானு, 19; நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், தனியார் கல்லுாரி முதலாமாண்டு கேட்டரிங் மாணவி.

கடந்த, 1ம் தேதி கல்லுாரிக்கு முடிந்து வீட்டிற்கு வந்தவர், உடல்நிலை சரியில்லை கூறியுள்ளார். அந்தியூரில் தனியார் மருத்துவமனைக்கு, பெற்றோர் அழைத்து சென்றனர். மேல் சிகிச்சைக்காக, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். டாக்டர்கள் பரிசோதனையில் எலி பேஸ்ட்டை தின்று விட்டதும், உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, மாணவி பானு இறந்து விட்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து அந்தியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

800க்கும் மேற்பட்ட மாடுகள் வரத்து

ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டு சந்தை நேற்று நடந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாடுகள் வரத்தானது. 5,000 ரூபாய் முதல், 25,000 ரூபாய் மதிப்பில், 80 கன்றுகள், 25,000 ரூபாய் முதல், 65,000 ரூபாய் மதிப்பில், 300 எருமை மாடுகள், 25,000 ரூபாய் முதல், 80,000 ரூபாய் மதிப்பில், 350 பசு மாடுகள், 80,000 ரூபாய்க்கு மேலான விலையில், 50க்கும் மேற்பட்ட கலப்பின மாடுகள் விற்பனைக்கு அழைத்து வந்திருந்தனர்.

தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, மஹராஷ்டிரா மாநில வியாபாரிகள், விவசாயிகள் மாடுகளை வாங்கி சென்றனர். கோடை காலம் துவங்குவதால், மாடுகளை விற்பனை செய்ய பலரும் ஆர்வம் காட்டினர். பிற மாநில வியாபாரிகள் அதிகமாக மாடுகளை வாங்கி சென்றனர். வரத்தான மாடுகளில், 90 சதவீதம் விற்பனையானது.

மாவட்ட தீயணைப்புஅலுவலர் இடமாற்றம்

ஈரோடு மாவட்ட தீயணைப்பு அலுவலராக (டி.எப்.ஓ.,) பணியாற்றிய புளுகாண்டி, கோவை மாவட்ட தீயணைப்பு அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டார். பெரம்பலுார் மாவட்ட தீயணைப்பு அலுவலராக பணியாற்றிய அம்பிகா, ஈரோட்டுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் டி.ஜி.பி., அபாஷ் குமார் பிறப்பித்துள்ளார்.

சைபர் கிரைம் போலீசார்மக்களுக்கு எச்சரிக்கை

ஈரோடு மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வாட்ஸ் ஆப், பேஸ் புக், இன்ஸ்டாகிராம், டெலிகிராம் ஆகியவற்றில் வரும் விளம்பரத்தில், பகுதி நேர வேலை தொடர்பான செய்திகளை, மக்கள் நம்ப வேண்டாம். பெண்கள் தங்கள் போட்டோக்களை பதிவேற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும். குற்றவாளிகள் போட்டோக்களை மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்போவதாக மிரட்டி பணம் பறிக்க கூடும். மொபைல் போன்களில் வரும் லிங்க்குகளை கிளிக் செய்ய வேண்டாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

லாரி டிரைவர் வீட்டில்நகை, பணம் திருட்டு

-அம்மாபேட்டை அருகே நெருஞ்சிப்பேட்டை, அம்மாசை, மணியக்கார வீதியை சேர்ந்தவர் மாரியப்பன், 48, லாரி டிரைவர். இவரின் மனைவி ரேவதி, 43; மாரியப்பன் வேலைக்கு வெளியூர் சென்று விட்டு, 15 நாட்களுக்கு ஒரு முறையே வீட்டுக்கு வருவார். நேற்று முன்தினம் இரவு மாரியப்பன் வந்தார். சிறிது நேரத்தில் மனைவியை அழைத்துக் கொண்டு, ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். வீட்டு சாவியை மறைவான இடத்தில் வைத்து சென்றனர். ஒன்றரை மணி நேரம் கழித்து வந்தபோது, வீட்டின் பூட்டில் சாவியை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த, 22 ஆயிரம் ரூபாய், அரை பவுன் தங்க காசு, மொபைல்போன் திருட்டு போனது தெரிய வந்தது. மாரியப்பன் புகாரின்படி அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

துப்புரவு ஆய்வாளருக்கு ஆதரவாக

அந்தியூர் பேரூராட்சி மக்கள் மனு

அந்தியூர் துப்புரவு ஆய்வாளருக்கு ஆதரவாக, பொதுமக்கள் ஒன்று திரண்டு, அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாதென்று, தலைமை எழுத்தரிடம் மனு கொடுத்தனர்.

அந்தியூர் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் குணசேகரன், 47; இவர் மீது பேரூராட்சி ஒன்றாவது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் சரஸ்வதி நேற்று முன்தினம், செயல் அலுவலர் மற்றும் அந்தியூர் போலீசில் புகார் கொடுத்தார்.

அதில், 'தனது வார்டில் துப்புரவு பணி செய்யாதது குறித்தகு கேட்டபோது, தரக்குறைவாக குணசேகரன் பேசினார்' என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் அந்தியூர் பேரூராட்சியை சேர்ந்த. 30க்கும் மேற்பட்ட மக்கள், நுாற்றுக்கும் மேற்பட்டோரிடம் கையெழுத்து பெற்று, பேரூராட்சி தலைமை எழுத்தர் தாமரையிடம், நேற்று மனு வழங்கினர்.

அதில், ' துப்புரவு ஆய்வாளர் குணசேகரன் மீது, தரக்குறைவாக பேசியதாக கொடுத்த புகார் தவறானது. ஒன்றாவது வார்டு கவுன்சிலர் சரஸ்வதி, துப்புரவு ஆய்வாளரை ஆளும்கட்சிக்கு கைக்கூலியாக செயல்படுகிறார் என்றும் வாட்ஸ் ஆப்பில் குற்றச்சாட்டு பரப்பி வருகிறார். தவறான புகார் கொடுத்த கவுன்சிலர் மனு மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது' என்று தெரிவித்துள்ளனர்.

பாரதிதாசன் கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கவுந்தப்பாடி, எல்லீஸ்பேட்டையில் உள்ள பாரதிதாசன் கலை அறிவியல் கல்லுாரியில், மன மேலாண்மை கலை என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

கல்லுாரி தாளாளர் பெரியசாமி தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் சுரேஷ்பாபு வரவேற்றார். கல்லுாரி பொருளாளர் முருகன், இணை செயலர்கள் வசந்தி சத்யன், பரிமளா ராஜா, முதன்மை செயலர் நரேன் ராஜா, நிர்வாக அலுவலர் அருள்குமரன் வாழ்த்துரை வழங்கினர். பல் மருத்துவர் டாக்டர் கவிதா கருணாகரன் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில், 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

மருத்துவ நிதி வழங்கிய அமைச்சர் உதயநிதி

ஈரோடு மாவட்டத்தில் அரசு விழாவில் பங்கேற்க, தி.மு.க., இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி வந்தார். அவருக்கு தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணியினர், நிர்வாகிகள் வரவேற்பு வழங்கினர். பின் கட்சி நிர்வாகிகளுக்கு மருத்துவ உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் அமைச்சர் முத்துசாமி முன்னிலையில், இளைஞரணி துணை செயலாளர் பிரகாஷ் ஏற்பாட்டில், கிளாம்பாடி பேரூர் இளைஞரணி அமைப்பாளர் தர்மராஜ் விபத்தால் கால் அறுவை சிகிச்சை செய்திருந்தார்.

அவருக்கு மருத்துவ உதவித்தொகையாக ஒரு லட்சம் ரூபாய்; ஈரோடு கோட்டை இளைஞரணி துணை அமைப்பாளர் நடராஜ், சிறுநீரக பாதிப்புக்கு சிகிச்சை பெறுவதால் அவருக்கு, 50,000 ரூபாய் என, 1.50 லட்சம் ரூபாய் ரொக்கத்தை அமைச்சர் உதயநிதி வழங்கினார்.

ஆவின் அடர் தீவன விலையை

குறைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட அமைப்பின் செயற்குழு கூட்டம், மாவட்ட தலைவர் குமாரசாமி தலைமையில் ஈரோட்டில் நடந்தது. மாநில தலைவர் ரத்தினசாமி, பொருளாளர் வரதராஜன் முன்னிலை வகித்தனர்.

ஆவின் நிர்வாகம் அடர் தீவனத்தின் உயர்த்தப்பட்ட விலையை குறைக்க வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் நிலம், நீர், காற்று மாசுபாடு குறித்தான வழக்குகளில் உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் தங்கள் தீர்ப்புகளில் குறிப்பிட்டுள்ள உத்தரவுகளை மாவட்ட நிர்வாகமும், மாசுகட்டுப்பாட்டு வாரியமும் அமலாக்க வேண்டும்.

சத்தியமங்கலம், பவானி ஆற்றின் கரை ஓரத்தில் பாதாள சாக்கடை கழிவுகளை சுத்திகரிக்க, சுத்திகரிப்பு நிலையம் கட்டுவதை கைவிட்டுவிட்டு, வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். பவானிசாகர் அணை மேல்பகுதி மற்றும் கீழ் பகுதியில் ஆற்றின் கரையோரம் செயல்பட்டு வரும் ஆலைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட பிரதிநிதிகள் லோகநாதன், பழனிசாமி, அரச்சலுார் செல்வம், ஆதவன் உட்பட பலர் பங்கேற்றனர்.

மின் கட்டண முரண்பாட்டை களைய

அரிசி ஆலை உரிமையாளர்கள் மனு

ஈரோட்டுக்கு வந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதியிடம், தமிழ்நாடு அரசி ஆலை உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் துளசிமணி, கவுரவ ஆலோசகர் ஜெகதீசன் உள்ளிட்டோர் வழங்கிய மனுவில் கூறியதாவது:

தற்போது மின்வாரியம் அறிவித்த, மின் கட்டண அறிவிப்பு தமிழக அரிசி ஆலைகளை பிற மாநிலங்களுக்கு மாற்றும் நிலையை ஏற்படுத்தி உள்ளது.

மின்சார நிலக்கட்டணம், 112 கே.வி., வரை மின் சக்தி உபயோகிப்பாளர்களுக்கு, 1 கே.வி.,க்கு, 35 ரூபாயாக இருந்த மாதாந்திர நிலை கட்டணம் தற்போது, 154 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது பிற மாநில உற்பத்தி விலையுடன் போட்டி போட முடியாத நிலைக்கு ஆலைகளை தள்ளிவிட்டது. இதனால், 150 கே.வி., வரை மின்சார தேவையுள்ள தொழிற்சாலைகள் கடுமையாக பாதிக்கிறது.

அரிசி ஆலைகள் காலை, மாலை, 6:00 முதல், 10:00 மணி வரையிலான, 8 மணி நேரத்துக்கான மின்சார பயன்பாட்டுக்கு, 15 சதவீதம் உயர்த்தி ஒரு யூனிட், 7.65 ரூபாயில் இருந்து, 8.80 ரூபாயாக வசூலிப்பதை தவிர்க்க வேண்டும். ஆண்டு தோறும், 6 சதவீத மின் கட்டணம் உயர்த்தப்படும் என்ற திட்டம், தமிழக தொழில்களை நசுக்கிவிடும். தேவை அடிப்படையில் கட்டணத்தை உயர்த்த வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

சின்ன காளியம்மன்

பண்டிகை நிறைவு

தாராபுரம், தென்தாரையில் உள்ள சின்ன காளியம்மன் கோவில் பண்டிகை, கடந்த ஜன., 30ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. கடந்த, 6ம் தேதி இரவு, அமராவதி ஆற்றில் இருந்து அம்மன் கரகம் அழைத்து வரப்பட்டது. நேற்று காலை மற்றும் மாலை, அம்மனுக்கு விசேஷ பூஜை, ஆராதனை நடந்தது. இதையடுத்து நேற்றிரவு, அம்மன் கரகம், அமராவதி ஆற்றுக்கு வழி அனுப்பி வைக்கப்பட்டது. பண்டிகையை ஒட்டி, இன்று மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்னதானம் வழங்கப்படுகிறது.

நாய்கள் கடித்து ஆடு பலிசத்தியமங்கலம் அருகே வரதம்பாளையத்தில், கலாமணி என்பவருக்கு சொந்தமான ஆட்டுப்பட்டி உள்ளது. நேற்று காலை அவர் பட்டிக்கு, ஆடுகளை மேய்ச்சலுக்கு விட சென்றார். அப்போது ஒரு ஆடு அடையாளம் தெரியாத விலங்கால் கடித்து குதறப்பட்டும், மற்றொரு ஆடு ரத்தக்காயத்துடனும் துடித்தபடி இருந்தது. அவர் தகவலின்படி சத்தி வனத்துறையினர் சென்று, காலடி தடங்களை ஆய்வு செய்தனர். இதில் தெருநாய்களின் காலடி தடம் பதிவாகி இருந்தது. பின்பு அப்பகுதி 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்ததில், தெருநாய்கள் ஆடுகளை கடித்தது உறுதி செய்யப்பட்டது.

கோபியில் 'குட்கா' விற்றபெட்டிக்கடைக்கு 'சீல்'

கோபி அருகே ஒத்தக்குதிரை பகுதியில், கோபி போலீசார் நேற்று மாலை ரோந்து சென்றனர். அப்போது லோகநாதன், 34, என்பவரின் பெட்டிக்கடையில், புகையிலை பொருட்கள், விற்பனை செய்ததை கண்டுபிடித்தனர். இதனால் கடையை பூட்டி சீல் வைத்தனர். அதேபோல் கோபியில், பானுமதி, 50, என்ற பெண்ணின் பெட்டிக்கடையில், புகையிலை பொருள் விற்பனைக்கு வைத்திருந்ததாக, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

விபத்தில் தொழிலாளி பலிகாங்கேயம், களிமேடு வக்கீல் விதியை சேர்ந்தவர் மணி, 70; கூலி தொழிலாளியான இவர் நேற்று காலை, டி.வி.எஸ்., - எக்ஸ்.எல்., மொபட்டில் சென்றார். காங்கேயம்-கோவை சாலையில், கே.ஆர். பெட்ரோல் பங்க் அருகில் சாலையை கடந்தார். அப்போது காங்கேயம், முஸ்லிம் வீதியை சேர்ந்த ஹர்ஷத், 19, ஓட்டி வந்த டூவீலர், மொபட் மீது மோதியதில், மணி பலத்த காயம் அடைந்தார். மேல் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

தாராபுரத்தில் பிரதமர் காப்பீடு

திட்ட முகாமில் குவிந்த மக்கள்

திருப்பூர் மாவட்ட பா.ஜ., சார்பில், பிரதமர் காப்பீட்டு திட்ட முகாம், தாராபுரத்தில் வசந்தா ரோட்டில், நேற்று காலை நடந்தது. நகர தலைவர் சதீஷ் தலைமை வகித்தார். நகர பொது செயலாளர் செல்வன் முன்னிலையில், மாவட்ட தலைவர் மங்களம் ரவி முகாமை துவக்கி வைத்தார்.

முகாமில் தொடக்கத்தில் மக்கள் கூட்டம் கணிசமாக இருந்தது. நேரம் செல்ல செல்ல அதிகப்படியான மக்கள் வரிசையில் நின்று, ஆதார் அட்டை, ஸ்மார்ட் கார்டு ஆகியவற்றைத் தந்து காப்பீட்டு திட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இதேபோல் நாளை முதல், சின்ன காளியம்மன் கோவில், உப்புத்துறை பாளையம் மற்றும் காந்திபுரம் பகுதிகளில், காலை, 10:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை, காப்பீட்டு திட்ட முகாம் நடக்கும் என்று, பா.ஜ., நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசை கண்டித்து

கம்யூ., ஆர்ப்பாட்டம்

ஈரோட்டில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டக்குழு சார்பில் மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சி கோட்பாட்டை சீர்குலைக்கும் பா.ஜ., அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மாவட்ட செயலாளர் ரகுராமன் தலைமை வகித்தார். மத்திய அரசு, மாநில உரிமைகள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும். எதிர் கட்சிகள் ஆளும் மாநில அரசுகளான தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், டில்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு நிதி ஒதுக்காமல் பாரபட்சம் செய்யக்கூடாது. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், டில்லி போன்ற மாநில கவர்னர்களின் மோசமான நடவடிக்கைகளை கைவிட வலியுறுத்தினர்.

ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ., இளங்கோவன், காங்., முன்னாள் மாவட்ட தலைவர் ரவி, ராஜேஷ்ராஜப்பா, பிற கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

கஞ்சா வியாபாரத்தில் கொலை முயற்சி

மதுரை வாலிபரை வளைத்த போலீஸ்

ஈரோட்டில் நள்ளிரவில், வாலிபரை கொல்ல முயன்ற சம்பவத்தில், மதுரையை சேர்ந்த வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு, சாஸ்திரிநகர், வாய்க்கால்மேட்டில் கடந்த, 25ம் தேதி இரவு, 10:30 மணியளவில் ஒரு கும்பல் கஞ்சா போதையில் திடீரென தகராறில் ஈடுபட்டது. அக்கும்பலில் ஒருவர், காரில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, கும்பலில் இருந்த ஈரோடு, மரப்பாலத்தை சேர்ந்த நிகாத், 19, என்பவரை ஓடஓட விரட்டி வெட்டினார். சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் வந்ததால் கும்பல் ஓட்டம் பிடித்தது. காயமடைந்த நிகாத்தை மீட்ட சூரம்பட்டி போலீசர், ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில் நிகாத் மீது கஞ்சா விற்ற வழக்கும், அவரை தாக்கியவர்கள் மீதும் போலீசில் குற்ற வழக்கு இருப்பது தெரிந்தது. கஞ்சா வியாபாரம் தொடர்பான பணம் கொடுக்கல், வாங்கலில் தகராறு ஏற்பட்டது தெரிந்தது.

இது தொடர்பாக மதுரை, அருணாச்சலபுரத்தை சேர்ந்த கணேசன் மகன் கரண், 27, என்பவரை, சூரம்பட்டி போலீசார் கைது செய்தனர்.

மதுரையில் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரியும் கரண், ஈரோட்டில் உறவினர் வீட்டுக்கு வந்தபோது தகராறில் ஈடுபட்டது தெரிந்தது. அவர் மீது ஈரோடு தாலுகா, கருங்கல்பாளையம், மொடக்குறிச்சி உள்பட பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் கஞ்சா விற்பனை தொடர்பாக வழக்குகள் நிலுவையில் இருப்பதாக, போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us