ADDED : ஜன 25, 2024 10:23 AM
பார்லி தேர்தல் எதிரொலி
42 எஸ்.ஐ.,க்கள் மாற்றம்
பாராளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இதனால் காவல் துறையில் இன்ஸ்பெக்டர்கள் ஏற்கனவே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது ஒரே ஸ்டேஷனில் மூன்றாண்டுகளாக பணிபுரியும் எஸ்.ஐ.,க்கள், சொந்த தொகுதியில் பணியாற்றும் எஸ்.ஐ.,க்கள் என, 42 பேர்,ஈரோடு மாவட்டத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி காத்திருப்போர் பட்டியலில் இருந்த கணேசன், வீரப்பன்சத்திரம் ஸ்டேஷனுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். சிவகிரி தமிழ் செல்வி, சூரம்பட்டிக்கும்; அறச்சலுார் தாமோதரன், சூரம்பட்டிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் குறைதீர் கூட்டத்தில் இடமாற்றம் கோரி விண்ணப்பித்த போலீசாரையும், இடமாற்றம் செய்து எஸ்.பி., ஜவகர் உத்தரவிட்டுள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தினர்ஆர்.டி.ஓ., ஆபீசில் மனு
மக்கள் நீதி மய்யத்தின், ஈரோடு வடகிழக்கு மாவட்ட செயலாளர் சிவக்குமார் தலைமையில், கோபி ஆர்.டி.ஓ., ஆபீசில் நேற்று மனு கொடுத்தனர். மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: கோபி நகரில் நடக்கும் சாலை விரிவாக்கப்
பணியால், நகரின் முக்கிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தினசரி மார்க்கெட், எம்.ஜி.ஆர்., சிலை மற்றும் பஸ் ஸ்டாண்ட் பகுதி அருகே வாகனங்களை நிறுத்துவதால், பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. இதுகுறித்து ஏற்கனவே மனு அளித்திருந்தோம். தற்போது மீண்டும் மனு அளிக்கிறோம். விரைவான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.
நாளை மாணவர் தொழில் முனைவோர் சந்தை
பெருந்துறையில் பழனிசாமி கலை கல்லுாரி வளாகத்தில் இயங்கி வரும், ஈரோடு மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் நாளை காலை, 9:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை மாணவர் தொழில் முனைவோர் சந்தை நடக்க உள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சம்பத், மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். மாவட்ட அரசு மாதிரி பள்ளி மாணவர், பெற்றோர், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர்.
முறையாக குடிநீர் விடக்கோரிமாநகராட்சி கமிஷனரிடம் மனு
ஊராட்சிக்கோட்டை கூட்டு குடிநீர் திட்டத்தில், முறையாக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி, மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தியிடம், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க., கவுன்சிலருமான தங்கமுத்து நேற்று மனு அளித்தார். மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை அடைப்பு தொடர்பாக புகாரளிக்கப்பட்டு, ஒரு வாரத்துக்கு மேலானாலும் நடவடிக்கை எடுப்பதில்லை. கழிவுநீர் சாலையில் ஓடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அதேசமயம் பாதாள சாக்கடை திட்டத்தை தனியாருக்கு விடாமல், மாநகராட்சி ஊழியர்களை வைத்து சரி செய்ய வேண்டும். ஊராட்சிக்கோட்டை கூட்டு குடிநீர் திட்டத்தில் முறையாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.
சென்னிமலை போலீசில்காதல் ஜோடி தஞ்சம்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம், பூலவாடி பிரிவை சேர்ந்த பாத்திர வியாபாரி ஜெயபால் மகள் நிரஞ்சனா, 18; அதே பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார், 25; இருவரும் காதலித்தனர். இதையறிந்த நிரஞ்சனாவின் பெற்றோர், சென்னிமலையில் உறவினர் வீட்டுக்கு கடந்த, 19ம் தேதி அனுப்பி விட்டனர்.
அங்கிருந்து வெளியேறிய நிரஞ்சனா, நவீன்
குமாரை திருமணம் செய்து கொண்டார். பாதுகாப்பு கேட்டு சென்னிமலை போலீஸ் ஸ்டேஷனில், இருவரும் தஞ்சம் அடைந்தனர். இருவரின் பெற்றோர்களையும் அழைத்து போலீசார் பேச்சு
வார்த்தை நடத்தினர். இதில் கணவர் வீட்டாருடன் செல்ல நிரஞ்சனா சம்மதிக்கவே, அவர்களுடன் போலீசார் அனுப்பி வைத்தனர். போலீஸ் ஸ்டேசனில் இரு வீட்டாரின் உறவினர்களும் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிக்கோயிலில்குடிநீர் தொட்டி திறப்பு
திருப்பூர் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில், பெருந்துறை ஒன்றியம் காஞ்சிக்கோயில் டவுன் பஞ்., நான்கா-வது வார்டு கரிச்சிகவுண்டன்பாளையத்தில், 16 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா நேற்று நடந்தது. எம்.பி., சுப்பராயன் தலைமை வகித்தார். டவுன் பஞ்., தலைவர் திவ்யா, தொட்டியை திறந்து வைத்தார். துணை தலைவர் செம்மலர் விஜயகுமார், செயல் அலுவலர் பாலாஜி மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
மாநகராட்சி
பள்ளி ஆண்டு விழா
ஈரோடு திருநகர் காலனி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், 12வது ஆண்டு விழா நேற்று நடந்தது. வட்டார கல்வி அலுவலர் மணிவண்ணன் தலைமை வகித்தார்.
பள்ளியின் தலைமையாசிரியை அருணா தேவி வரவேற்றார். ஆசிரியை திலகலட்சுமி ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், மண்டல தலைவர் பழனிசாமி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பழனிசாமி பங்கேற்றனர்.
சிறந்த மாணவ,- மாணவியருக்கு பாராட்டு சான்றிதழ், பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சி
நடந்தது.
வாக்காளர் தின உறுதிமொழி
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உறுதிமொழியை படிக்க, அனைத்து துறை அலுவலர்கள் உறுதிமொழியை படித்து ஏற்றனர். 18 வயதுக்கு மேற்பட்டோரை, வாக்காளர்களாக சேர்ப்பது, இறந்தவர்கள், தொகுதி மாறியவர்களின் பெயர்களை படிவம் பெற்று நீக்கம் செய்வது, பிற தொகுதிக்கு மாறியவர்களிடம் படிவம் பெற்று திருத்தம் செய்தல் போன்றவற்றை மேற்கொள்ள வலியுறுத்தினர்.
அரசு மேல் நிலைப்பள்ளிக்கு
கலையரங்கம் கட்டித்தருமாறு
எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை
ஆப்பக்கூடல் அருகேயுள்ள மூங்கில்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் ௧ படிக்கும், ௫௬ மாணவ, மாணவியருக்கு, அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது.
அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம் வழங்கினார். அப்போது பள்ளியில் கலையரங்கம் மற்றும் வகுப்பறை அமைத்து தரக்கோரி, தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள், எம்.எல்.ஏ.,விடம் மனு வழங்கினர். மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த, 2009ல் பள்ளி தரம் உயர்த்தப்பட்டது. தற்போது, 450 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
மாணவர்களின் தனித்திறமையை மேம்படுத்த, இலக்கிய மன்றம், கலைத் திருவிழா மற்றும் பள்ளி சார்பிலான விழாக்கள் நடத்த, கலையரங்கம் அமைத்து தர வேண்டும். மேலும், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு போதிய வகுப்பறை இல்லாததால், வெளியில் தரையில் அமர்ந்து கல்வி கற்கும் நிலை உள்ளது.
எனவே இவர்களுக்கு நான்கு வகுப்பறை, இரண்டு ஆய்வகம் கொண்ட கட்டடம், 30 செட் பென்ச் ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.
சென்னிமலையில் இன்று திருக்கல்யாணம்:
நாளை காலை தேரோட்டம்
சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவில், தைப்பூச தேர் திருவிழாவை ஒட்டி, கைலாசநாதர் கோவிலில் திருக்கல்யாணம் இன்று நடக்கிறது. நாளை தேரோட்டம் நடக்கிறது.
இதையொட்டி நாளை அதிகாலை, 3:௦௦ மணிக்கு சுவாமிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. காலை, 6:௦௦ மணிக்கு சுவாமி தேரில் எழுந்தருள, 6:20 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. நான்கு ராஜ வீதிகளில் வலம் வரும் தேர், சனிக்கிழமை மாலை நிலை சேர்கிறது. தைப்பூச விழா முக்கிய நிகழ்வான மகா தரிசனம், 30ம் தேதி நடக்கிறது அன்றிரவு நடராஜ பெருமான், சுப்பிரமணிய சுவாமி முறையே வெள்ளி விமானம், வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடக்கும்.
இதில் முருக பெருமானை தரிசிக்க, சென்னிமலை நகரில் பல லட்சம் பக்தர்கள் கூடுவார். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சரவணன் தலைமையில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
பள்ளி மாணவி மாயம்
சத்தி அருகே வரதம்பாளையத்தை சேர்ந்த கட்டட தொழிலாளி தண்டபாணி. இவரின், ௧௫ வயது மகள், தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். நேற்று முன்தினம் தலை வலிப்பதாக கூறி வீட்டில் இருந்துள்ளார்.
இந்நிலையில் வேலைக்கு சென்ற தண்டபாணி, அவரது மனைவி மாலையில் வீட்டுக்கு திரும்பியபோது, மகளை காணவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. தண்டபாணி புகாரின்படி சத்தி போலீசார் தேடி
வருகின்றனர்.
புன்செய்புளியம்பட்டியில் நாளை
இந்து முன்னணி சார்பில் மாநாடு
இந்து முன்னணி சார்பில், இந்து மக்கள் பாதுகாப்பு மாநாடு, புன்செய்புளியம்பட்டியில் நாளை நடக்கிறது. இதுகுறித்து ஈரோடு, திருப்பூர் மண்டல மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், புன்செய்புளியம்பட்டியில் நடந்தது. இதில் மாநில செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் பேசினார்.
இதையடுத்து காடேஸ்வரா சுப்ரமணியம் நிருபர்களிடம் கூறியதாவது:
அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை, தமிழக கோவில்களில் நேரலை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டதை, திமுக அரசு தடுத்து விட்டது. கடவுள் நம்பிக்கை இல்லாத தி.மு.க., அரசுக்கு, ராமர் பாடம் கற்பிப்பார். இந்துக்களை பாதுகாக்கவே இந்த மக்கள் பாதுகாப்பு மாநாடு நடக்கிறது.
இந்து மக்கள் அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கிறோம். ராமர் கோவில் கட்டப்பட்டது தொடர்பாக, தி.மு.க., மற்றும் காங்கிரஸ், மக்களை திசை திருப்ப பல்வேறு கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த பொய் பிரசாரத்தை நம்ப மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னிமலைக்கு காவடி சுமந்து
500 பக்தர்கள் பாத யாத்திரை
சென்னிமலை முருகன் கோவிலில், தைப்பூச தேர்த்திருவிழா நாளை விமரிசையாக
நடக்கிறது.
இந்நிலையில் இதில் பங்கேற்பதற்காக டி.என்.பாளையம் அருகேயுள்ள கணக்கம்பாளையம், கள்ளிப்பட்டியிலிருந்து, ௫00க்கும் மேற்பட்டோர் காவடி சுமந்து, பாதயாத்திரையாக நேற்று புறப்பட்டனர். இவர்கள் இன்று மாலை சென்னிமலை சென்றடைவர். சென்னிமலை அடிவாரத்தில் தங்கும் இவர்கள், நாளை அதிகாலை முருகனை தரிசித்து, தேரோட்டத்தை பார்த்த பிறகு ஊர்
திரும்புவர்.
பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம்
சென்னிமலை கோயிலில் திறப்பு
சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில், 1.22 கோடி ரூபாய் மதிப்பில், பக்தர்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட முடி காணிக்கை மண்டபம், பக்தர்கள் இளைப்பாறும் மண்டப திறப்பு விழா நேற்று நடந்தது. கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலையில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார்.
பக்தர்களின் வசதிக்காக, 29 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட முடி காணிக்கை மண்டபம், சக்தி மசாலா நிறுவனம் பங்களிப்பில், 93 லட்சம் ரூபாய் மதிப்பில் மலைக்கோயிலில் கட்டப்பட்ட பக்தர்கள் இளைப்பாறும் மண்டபமும் பயன்பாட்டுக்கு வந்தது. விழாவில் முடி மழிக்கும் பணியாளர்கள், ௧௧ பேருக்கு புத்தாடைகளை, அமைச்சர் சாமிநாதன் வழங்கினார். நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி, கோவில் செயல் அலுவலர் சரவணன், சக்தி மசாலா நிறுவன நிர்வாக இயக்குனர்கள் துரைசாமி, சாந்தி துரைசாமி, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் எல்லப்பாளையம் சிவக்குமார், மக்கள் கலந்து கொண்டனர்.
தொடர் விடுமுறையால் பஸ் ஸ்டாண்டில் கூட்டம்
தொடர் விடுமுறையை கொண்டாட, ஊருக்கு புறப்பட்ட மக்களால், ஈரோடு பஸ் ஸ்டாண்டில் கூட்டம் அலைமோதியது.
இன்று தைப்பூசம், நாளை குடியரசு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதை தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இதனால் பள்ளி, கல்லுாரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலர்களுக்கும் நான்கு நாள் விடுமுறை கிடைத்துள்ளது.
தொடர் விடுமுறையை கொண்டாட, சொந்த ஊர், சுற்றுலா தலங்கள், ஆன்மிக ஸ்தலங்களுக்கு குடும்பத்துடன் மக்கள் நேற்று மாலை கிளம்பினர். இதனால் ஈரோடு பஸ் ஸ்டாண்டில் மாலை, 6:30 மணி முதல் பயணிகள் கூட்டம் படிப்படியாக அதிகரித்தது. மேலும் பலர் கார்களிலும் பல்வேறு ஊர்களுக்கு குடும்பத்துடன் கிளம்பினர். இதனால் சாலைகளிலும் வாகன நெரிசல் காணப்பட்டது.
மனைவிகள் மாயம்
கணவன்கள் புகார்
ஈரோடு, வீரப்பன்சத்திரம், ஜான்சி நகரை சேர்ந்தவர் யுவராஜ். முனிசிபல் காலனியில் ஆட்டோ ஒர்க்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரின் மனைவி மைதிலி, 37; இரு குழந்தைகள் உள்ளனர். அசோகபுரம் பனியன் மார்க்கெட்டில் மைதிலி, துணிக்கடை நடத்தி வந்தார். கடந்த, 22ம் தேதி யுவராஜ் கடைக்கு சென்றபோது மைதிலி இல்லை. அவர் குறித்து தகவல் கிடைக்காததால், கருங்கல்பாளையம் போலீசில் புகார் செய்தார்.
*ஈரோடு, வைராபாளையம், கந்தசாமி வீதியை சேர்ந்தவர் மணிகண்டன். டிரில்லிங் மிஷின் ஆப்பரேட்டர். இவரின் மனைவி மைதிலி, 28; இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த, 16ம் தேதி இரவு வீட்டில் இருந்த மைதிலி மாயமானார். மணிகண்டன் அளித்த புகாரின்படி கருங்கல்பாளையம் போலீசார், மைதிலியை தேடி வருகின்றனர்.
மாநகரில் நிலாச்சோறு
திருவிழா கோலாகலம்
ஈரோடு மாவட்ட கிராமங்களில் தைப்பூசத்துக்கு, ஐந்து நாட்கள் முன்பாக, நிலவுக்கு மரியாதை செய்யும் வகையில் நிலாச்சோறு திருவிழா நடப்பது வழக்கம்.
முதல் நான்கு நாட்கள் இரவில் பெண்கள் ஒன்று கூடி முக்கிய இடத்தில் கும்மியடித்து, தாங்கள் கொண்டு வந்த உணவு பதார்த்தங்களை பங்கிட்டு உண்பர். ஐந்தாம் நாள் இரவில் திருமண நிகழ்ச்சி போல் விழா நடக்கும். இந்நிலையில் ஐந்தாவது நாளான நேற்றிரவு, ஈரோடு மாநகராட்சி கைகாட்டி வலசு, திருவள்ளுவர் காலனியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள், சிறுமிகள் நிலாச்சோறு விழா நடத்தினர். இதில் விடிய விடிய கும்மியடித்து
மகிழ்ந்தனர்.
இதுகுறித்து பெண்கள் கூறியதாவது: நிலாச்சோறு விழா பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் விவசாயம் செழிக்கும், மாதம் மும்மாரி மழை பெய்யும் என்பது ஐதீகம். ஜாதி, மதம், ஏழை, பணக்காரன் வித்தியாசமின்றி ஒற்றுமையை வலியுறுத்தியும் இந்த விழா நடத்தப்படுகிறது. இவ்வாறு கூறினர்.
பாரபட்சம் காட்டும் பேரூராட்சி
பா.ஜ., கவுன்சிலர் ஆர்ப்பாட்டம்
தாராபுரம் அருகே கொளத்துப்பாளையம் பேரூராட்சி அலுவலகம் முன், ஒன்றிய பா.ஜ., தலைவர் கார்த்திகேயன் தலைமையில், நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதையடுத்து பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு அளித்த பின், அவர் கூறியதாவது:
பா.ஜ.,வை சேர்ந்த நான், கொளத்துப்பாளையம் பேரூராட்சி, 14வது வார்டு உறுப்பினராக உள்ளேன். இரு ஆண்டுகளாக எனது வார்டில் எந்த பகுதியிலும் தெருவிளக்கு, சாக்கடை, சாலை வசதி செய்து தராமல், பேரூராட்சி நிர்வாகம் புறக்கணிக்கிறது. பா.ஜ., கட்சி என்பதால், பாரபட்சம் காட்டுகின்றனர். இதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டேன்.
தற்போது செயல் அலுவலரிடம் மனு தந்துள்ளேன். இதன் பிறகும் நடவடிக்கை எடுக்க விட்டால், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.
பொன்னாச்சியம்மன்
கோவிலில் தீ மிதி விழா
அத்தாணி அருகே குப்பாண்டபாளையம் வனப்பகுதியில், பிரசித்தி பெற்ற பொன்னாச்சியம்மன் கோவில் உள்ளது. கோவிலில் நடப்பாண்டு தீ மிதி மற்றும் பொங்கல் விழா கடந்த, 16ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
இந்நிலையில் நேற்று மதியம் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆண், பெண் மற்றும் சிறுவர்கள் என நுாற்றுக்கணக்கானோர் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அத்தாணி, குப்பாண்டபாளையம், கரட்டூர் மேடு சுற்று வட்டாரப்பகுதி மக்கள் கலந்து
கொண்டனர்.
பிரசன்ன வெங்கட்ரமணசுவாமி
கோவிலில் கும்பாபிஷேக விழா
காங்கேயத்தில், 1,500 ஆண்டுகள் பழமையான, பிரசன்ன வெங்கட்ரமணசுவாமி கோவில் உள்ளது.
இங்கு, 2011ல் கும்பாபிஷேகம் நடந்தது. ௧௨ ஆண்டுகளை கடந்த நிலையில், கோவிலில் கும்பாபிஷேக திருப்பணி நடந்தது.
இதையடுத்து கடந்த, 22ம் தேதி கும்பாபிஷேக நிகழ்வு, முதல் கால யாக பூஜையுடன் தொடங்கியது. நேற்று காலை ஐந்தாம் கால யாக பூஜையை தொடர்ந்து, காலை, 10:00 மணிக்கு வெங்கட்ரமணர் சுவாமி விமானம் மற்றும் அனைத்து மூர்த்திகளுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து
கொண்டனர்.
மாலையில் திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில் தமிழ் வளர்ச்சி மறறும் செய்திதுறை அமைச்சர் சாமிநாதன் கலந்து கொண்டார்.
பாலத்தில் இருந்து தவறி
விழுந்த தொழிலாளி சாவு
கோபி அருகே காசிபாளையத்தை சேர்ந்தவர் ரங்கசாமி, 32, கூலி தொழிலாளி. கடந்த, 22ம் தேதி, அதேபகுதியில் கொப்பு வாய்க்கால் கல்வெட்டு பாலத்தில் அமர்ந்திருந்தார். அப்போது நிலைதடுமாறி விழுந்ததில் தலையில் காயமடைந்தார். மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ரங்கசாமி நேற்று இறந்தார். இதுகுறித்த புகாரின்படி கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.