ADDED : பிப் 01, 2024 11:23 AM
லாட்டரி சீட்டு விற்றவர் கைது
ஈரோடு பவானி மெயின் ரோடு கரிகாலன் வீதி தங்கவேல் மகன் மாதேஸ்வரன், 38. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா மற்றும் வெளி மாநில லாட்டரி சீட்டுகளின் எண்களை மொபைல் போனில் வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பி பரிசு விழும் என ஆசை வார்த்தை கூறி விற்பனை செய்து வந்தார்.
ஆனால் பரிசு விழவில்லை என பி.பெ. அக்ரஹாரம் தர்கா வீதியை சேர்ந்த ஜாகீர் உசேன், ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து மாதேஸ்வரனை கைது செய்தனர்.
அடையாளம் தெரியாதவர் சாவுஈரோடு வீரப்பம்பாளையம் பஸ் ஸ்டாப்பில் கடந்த 22ல், 60 வயது மதிக்கதக்க நபர் பேச முடியாத நிலையில் கிடந்தார்.
சிமெண்ட் கலர் காலர் இல்லாத டி-சர்ட், தாடியும், வெளுத்த முடியுடன் காணப்பட்டார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, 108 அவசரகால ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கடந்த 28 காலை 11:50 மணிக்கு இறந்தார். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை.
இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
ரூ.1.10 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை
ஈரோடு மாவட்டம் சிவகிரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு, 54 மூட்டை நிலக்கடலையை வியாபாரிகள் கொண்டு
வந்தனர்.
கிலோ நிலக்கடலை, 60.24 ரூபாய் முதல், 81.10 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 1,650 கிலோ எடையுள்ள நிலக்கடலை, 1.10 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
ரூ.4.46 லட்சத்துக்கு
பொருட்கள் விற்பனை
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி உப ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு, 15,803 தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். கிலோ தேங்காய், 24.96 ரூபாய் முதல், 28.66 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 5,191 கிலோ எடையுள்ள தேங்காய், 1. 38 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
மொத்தம், 127 மூட்டை கொப்பரை தேங்காய் கொண்டு வந்தனர். முதல் தரம் கிலோ, 86.65 ரூபாய் முதல், 93.25 ரூபாய் வரையும், இரண்டாம் தரம் கிலோ, 53.10 ரூபாய் முதல், 71.99 ரூபாய் வரையும் விற்பனையானது. மொத்தம், 3,669 கிலோ எடையுள்ள கொப்பரை தேங்காய், 3. 07 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
வளர்ச்சி திட்டப்பணிகள்
ஈரோடு கலெக்டர் ஆய்வு
கோபியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணி முதல் அரசு அலுவலகங்கள் வரை, ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேற்று ஆய்வு செய்தார்.
கோபி அருகே செங்கலரையில் உள்ள, கோபி நகராட்சியின் தலைமை நீரேற்று நிலையம், லக்கம்பட்டி டவுன் பஞ்சாயத்தில் குடிநீர் திட்டப்பணிகளை, ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேற்று ஆய்வு செய்தார். ல.கள்ளிப்பட்டி பிரிவில் உள்ள கால்நடை பராமரிப்பு துறையின் பன்முக மருத்துவமனை, கோபி நகராட்சியில் நுண் உரம் செயலாக்க மையம், மின்மயானம், கரும்பு ஒட்டுண்ணி வளர்ப்பு நிலையம், கோபி வேங்கம்மையார் துவக்கப்பள்ளி, நகரவை துவக்கப்பள்ளி, கோபி நகராட்சி மற்றும் யூனியன் ஆபீஸ்களில் ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது, கோபி ஆர்.டி.ஓ., திவ்ய பிரியதர்ஷினி, கோபி தாசில்தார் உத்திரசாமி உட்பட பலர் உடனிருந்தனர்.
சிறுபான்மை மக்கள்
நலக்குழு கருத்தரங்கம்
ஈரோட்டில், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில், கருத்தரங்கு நடந்தது.
மாவட்ட தலைவர் கே.எஸ்.இஸாரத்தலி தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் என்.முஹம்மது ஹனீபா வரவேற்றார். காசிபாளையம் டவுன் பஞ்., முன்னாள் தலைவர் துரைராஜ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் தலைவர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மகாத்மா காந்தி ரத்ததான அமைப்பின் மாநிலக்குழு உறுப்பினர் ஹாத்திம்தாய் அறிமுகம் செய்து வைத்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா, மாநில உதவி தலைவர் ப.மாரிமுத்து ஆகியோர் பேசினர்.
மாவட்ட உதவி தலைவர் ஏ.அப்துல் பாஷித் நன்றி கூறினார்.
ஹெல்மெட்
விழிப்புணர்வு பேரணி
தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி ஈரோட்டில் டூ-வீலர் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. ஈரோடு எஸ்.பி. ஜவகர் கொடி அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். சம்பத்நகரில் இருந்து தொடங்கிய ஊர்வலம் கலெக்டர் அலுவலகம், பெருந்துறை சாலை, அரசு மருத்துவமனை ரவுண்டானா வழியாக சவிதா சிக்னல் பகுதியில் நிறைவு பெற்றது. தன்னார்வலர்கள் ஹெல்மெட் அணிந்தபடி பைக்கில் சென்றனர். ஊர்வலத்தில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பதுவைநாதன், வெங்கட்ரமணி, சக்திவேல், ஈரோடு டவுன் டி.எஸ்.பி. ஆறுமுகம் மற்றும் வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் உள்பட பலர்
கலந்துகொண்டனர்.
'தமிழ் நிலம்' மூலம் பட்டா
கோரி விண்ணப்பிக்க அழைப்பு
தமிழகத்தில் நில அளவை மற்றும் நிலவரித்திட்ட துறை, www.tnlandsurvey.tn.gov.in மற்றும் http://www.tnlandsurvey.tn.gov.in என்ற இணைய தளத்தை என்.ஐ.சி., மூலம் உருவாக்கி உள்ளது.
அதில் பட்டா மாறுதல், 'தமிழ் நிலம்' கைபேசி செயலி இவ்விணைய தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. எங்கிருந்தும், தன் பட்டா மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் இணைய வழி சேவை, Tamil Nilam Citizen portal - http://www.tamilnilam.tn.gov.in/citizen இணைய தளத்துடன் இணைத்துள்ளது.
உட்பிரிவு, உட்பிரிவு இல்லாத பட்டா மாறுதல் கோரி வரும் விண்ணப்பங்களை உடன் செயல்படுத்த, தமிழ் நிலம் (ஊரகம் மற்றும் நகரம்) மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து புலப்படங்களிலும் அனைத்து உட்பிரிவு மாற்றங்கள் கொண்டு வர ஏதுவாக கொலாப்லேண்ட் மென்பொருள் உருவாக்கப்பட்டு, இந்த இணைய தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
பட்டா, சிட்டாவை பார்வையிடவும், சரி பார்க்கவும், அ பதிவேடு, அரசு புறம்போக்கு நில விபரம், புலப்படம், நகர நில அளவை வரைபடம் ஆகியவற்றை இலவசமாக பார்வையிட, பதிவிறக்கம், பட்டா மாறுதல் விண்ணப்ப நிலை விபரங்கள் அறிய விண்ணப்பிக்கலாம்.
ஸ்கேன் செய்யப்பட்ட கிராம வரை படங்கள் விற்பனை, தொடர்பு விளக்க பட்டியல்கள் விபரம் போன்றவற்றை பதிவிறக்கம் செய்யலாம்.
உங்களை தேடி உங்கள் ஊரில்திட்டத்தில் ஆய்வு கூட்டம்
உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில், கோபி ஆர்.டி.ஓ., ஆபீசில், அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது.
அந்த ஆய்வு கூட்டத்துக்கு பின், ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றார். பட்டா திருத்தம், நத்தம் நிறுத்த பட்டா கோருதல், வருவாய் வசூல் சட்டத்தின்படி தொகை வசூல் கோரியும், கோவில் பிரச்னை, சாலை பிரச்னை உள்ளிட்ட மனுக்களை பொதுமக்களிடம் அவர் பெற்றார். அப்போது ஈரோடு எஸ்.பி., ஜவஹர், ஈரோடு டி.ஆர்.ஓ., சாந்தகுமார், மாவட்ட வன அலுவலர் சுதாகர், கோபி ஆர்.டி.ஓ., திவ்ய
பிரியதர்ஷினி உட்பட பலர் பங்கேற்றனர்.
தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. கொடுமுடி பஸ் நிலையம் அருகில் நடந்த நிகழ்ச்சிக்கு சாலை பாதுகாப்பு உதவி கோட்டப்பொறியாளர் கதிர்வேல் தலைமை வகித்தார். உதவி கோட்டப்பொறியாளர் ரவி, உதவிப்பொறியாளர் மோகனசக்தி முன்னிலை வகித்தனர்.
சாலை விபத்தில் வாலிபர் பலி
பவானி, பிப். 1-
அம்மாபேட்டை அருகேயுள்ள நெரிஞ்சிப்பேட்டை நேருவீதியை சேர்ந்தவர் ஜாவீத் அப்துல்லா, 26; இவர், நேற்று முன்தினம், பவானியிலிருந்து சுசுகி பைக்கில் மேட்டூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். சித்தார் அருகேயுள்ள மாணிக்கம்பாளையம் பிரிவில் வந்து கொண்டிருந்தபோது, முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டர் மீது மோதினார்.
இதில் துாக்கி வீசப்பட்ட ஜாவீத் அப்துல்லா பலத்த காயமடைந்தார். இவரை மீட்டு ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
பவானிசாகர் அணை நீர்வரத்து
584 கன அடியாக சரிவு
பவானிசாகர் அணை நீர்மட்டம், 105 அடி, 32.8 டிஎம்சி கொள்ளளவு கொண்டது. அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள, 2 லட்சத்து, 47 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. அணையில் போதிய நீர் இருப்பு இருந்ததால் கடந்த ஜன.7 முதல், கீழ்பவானி இரண்டாம் போக புன்செய் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது. நேற்று அணைக்கு நீர்வரத்து, 584 கன அடியாக இருந்தது. மேலும் அணையில் இருந்து அரக்கன் கோட்டை தடப்பள்ளி பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டுள்ளதால், அணையின் நீர் மட்டம் சரிந்து வருகிறது.
நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம், 79.17அடி; நீர் இருப்பு, 15.2 டிஎம்சி ஆக உள்ளது. அணையில் இருந்து அரக்கன் கோட்டை தடப்பள்ளி பாசனத்துக்கு, 700 கன அடி தண்ணீரும் குடிநீர் தேவைக்காக, 100 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீர்வரத்தை விட வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.
நம்பியூரில் கேமரா பொருத்தும் பணி தீவிரம்
ஈரோடு மாவட்டம் நம்பியூர் பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். வாரச்சந்தை திடல், வணிக வளாகம் உள்ளிட்டவைகள் புதிதாக கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், பேரூராட்சி பகுதிகளில் தானியங்கி கேமரா பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதுகுறித்து நம்பியூர் பேரூராட்சி
நிர்வாகத்தினர் கூறியதாவது:
நம்பியூர் பேரூராட்சி மக்களின் பாதுகாப்பிற்காக, 60 தானியங்கி கேமரா பொருத்துவதற்கு திட்டமிடப்பட்டு தற்போது நாச்சிபாளையம், தண்டலூர் மாரியம்மன் கோவில், கொன்னமடை, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கெடாரை ரோடு, யூனியன் ஆபீஸ்ரோடு, காந்திபுரம் மேடு, போலீஸ் ஸ்டேஷன் எதிர்புறம் உள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் முக்கிய சாலைகள் சந்திக்கும் இடத்தில் என, 55 கேமராக்கள் பொருத்தப்
பட்டுள்ளன.
இவ்வாறு கூறினர்.
காங்கேயம்
நகர்மன்ற கூட்டம்
காங்கேயம் நகர்மன்ற கூட்டம் நேற்று நடந்தது. நகராட்சி தலைவர் சூரியபிரகாஷ் தலைமை தாங்கினார். நகராட்சி கமிஷ்னர் கனிராஜ், துணைத் தலைவர் கமலவேணி ஆகியோர் முன்னிலை வைத்தனர். இதில் குடிநீர் குழாய்கள் பராமரித்தல் சாலை பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான, 47 தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன. பங்கேற்ற கவுன்சிலர்கள் தங்கள் வார்டு பகுதியில் சேகரமாகும் குப்பைகளை அப்புறப்படுத்துவதில் சுகாதாரப் பணியாளர்கள் மெத்தனமாக உள்ளதாக புகார் தெரிவித்தனர். உடனடியாக குப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி தலைவர் உறுதியளித்தார். நாகராட்சி கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
பள்ளி மாணவர்கள் 'அன்பு சுவர்' திறப்பு
தாராபுரத்தில் உள்ள அரோபிந்தோ பள்ளி மாணவ, மாணவியர் சார்பில், தாராபுரம் - பொள்ளாச்சி சாலையில் உள்ள குஜராத் ஸ்வீட் ஸ்டால் முன், 'அன்பு சுவர்' அமைத்தனர்.
அதில், மாணவர்கள் தங்களது வீட்டில் பயன்பாடு இல்லாத பொருட்களை கொண்டு வந்து வைத்தனர். அதன் திறப்பு விழா, நேற்று முன்தினம் காலை, 10:00 மணியளவில், பள்ளி தாளாளர் வினிதா கோவிந்தசாமி தலைமையில் நடந்தது. பழநியை சேர்ந்த எழுத்தாளர் முத்துமாணிக்கம், 'அன்பு சுவரை' திறந்து வைத்தார்.
இந்த பொருட்கள் தேவைப்படும் பொதுமக்கள், தாமாகவே முன்வந்து எடுத்துச் செல்லலாம் என, பள்ளி முதல்வர் மகேஸ்வரி தெரிவித்தார். குஜராத் ஸ்வீட் ஸ்டால் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி உள்பட, 30க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
இந்த சம்பவம், பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை
ஏற்படுத்தியது.