sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

செய்திகள் சில வரிகளில்... ஈரோடு

/

செய்திகள் சில வரிகளில்... ஈரோடு

செய்திகள் சில வரிகளில்... ஈரோடு

செய்திகள் சில வரிகளில்... ஈரோடு


ADDED : பிப் 04, 2024 10:20 AM

Google News

ADDED : பிப் 04, 2024 10:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

என்.எம்.எம்.எஸ்., தேர்வில்

5,955 மாணவர் பங்கேற்பு

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ, -மாணவியருக்கு, தேசிய வருவாய் வழி திறன் படிப்பு உதவி திட்ட தேர்வு (என்.எம்.எம்.எஸ்.,) மாநிலம் முழுவதும் நேற்று நடந்தது.

இதன்படி ஈரோடு மாவட்டத்தில், 26 தேர்வு மையங்களில் தேர்வு நடந்தது. மொத்தம், 6,137 பேர் விண்ணப்பித்த நிலையில், 5,955 மாணவ, -மாணவியரே தேர்வில் பங்கேற்றனர். 182 பேர் புறக்கணித்து விட்டனர். தேர்வு மையங்களை முதன்மை கல்வி அலுவலர் சம்பத்து, சி.இ.ஓ., நேர்முக உதவியாளர்கள் திம்ம ராயர், பிரகாஷ்வேல் ஆய்வு செய்தனர்.

கடைகளில் திருட்டு?

போலீஸ் விசாரணை

கோபியில், பாரியூர் சாலையில், தவிடு விற்பனை கடை, கண்ணாடி கடை, கார் ஒர்க் ஷாப், பேட்டரி கடை என நான்கு கடைகள் அடுத்தடுத்து இயங்கி வருகின்றன.

இவற்றின் கூரைகளை பிரித்து, நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் புகுந்துள்ளனர். தகவலறிந்த கோபி போலீசார் நான்கு கடைகளிலும், திருட்டு சம்பவம் ஏதேனும் நடந்துள்ளதா என விசாரிக்கின்றனர்.

வணிக வளாகத்தில்

கடை ஒதுக்கீடு ஆணை

ஈரோடு கனி மார்க்கெட் வணிக வளாகத்தில், கனி மார்க்கெட் வியாபாரிகளுக்கான கடை ஒதுக்கீட்டுக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடந்தது. மேயர் நாகரத்தினம், எம்.எல்.ஏ., இளங்கோவன் முன்னிலை வகித்தனர். இங்கு, 141 பேருக்கு கடை ஒதுக்கப்பட்டிருந்தது. அதற்கான ஆணையை வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி வழங்கி பேசினார்.

நிகழ்வில் மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், மண்டல தலைவர்கள் பழனிசாமி, சசிகுமார், சுப்பிரமணியம், தண்டபாணி, துணை ஆணையர் சரவணகுமார், மாநகர பொறியாளர் விஜயகுமார், மாநகர நல அலுவலர் பிரகாஷ் உட்பட பலர்

பங்கேற்றனர்.

கான்ஸ்டபிள் தற்கொலை

திண்டுக்கல் மாவட்டம் இடையப்பட்டியை சேர்ந்த உலகநாதன் மகன் தமிழரசன், 28; கடந்த, 2017ல், காவல்துறையில் பணியில் சேர்ந்தவர், ஓராண்டாக தாராபுரம் காவலர் குடியிருப்பில் தாயாருடன் தங்கி, கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வந்தார். நேற்று மதியம் அவரது அறைக் கதவை, தாயார் தட்டியபோது திறக்கவில்லை. இதனால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றார். மின் விசிறியில் தாயாரின் சேலையில் துாக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கினார். தாராபுரம் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பழநி ரயில் திட்டத்தை

துரிதப்படுத்த கோரிக்கை

ஈரோடு-பழநி ரயில் பாதை திட்டம் தொடர்பாக, ரயில்வே மக்கள் பணி சங்க ஆலோசனை கூட்டம், தாராபுரத்தில் நேற்று நடந்தது. ஆறுமுகம் தலைமை வகித்தார். இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டு வருவது குறித்து வருத்தம் தெரிவிக்கப்பட்டது. துரிதமாக திட்டத்தை செயல்படுத்த, அரசு முன்வர கோரிக்கை வைக்கப்பட்டது. சமூக ஆர்வலர் சிவசங்கர் உள்பட ரயில்வே மக்கள் பணிச் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

காங்கேயம், தாராபுரத்தில்அண்ணாதுரை நினைவு தினம்

தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை, 55வது நினைவு நாளையொட்டி, காங்கேயத்தில் உள்ள தி.மு.க., கட்சி அலுவலகத்தில், ஒன்றிய தி.மு.க., சார்பில் அண்ணாதுரை உருவப்படத்துக்கு, காங்கேயம் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவானந்தன் தலைமையிலான நிர்வாகிகள், மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில், அண்ணாதுரை நினைவு நாளான நேற்று, சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடந்தது. இதில் காங்கேயம் நகர தி.மு.க., செயலாளர் மேலையப்பன், சிவன்மலை ஊராட்சி தலைவர் துரைசாமி, பக்தர்கள் கலந்து கொண்டனர்.

* தாராபுரம், வடதாரையிலிருந்து, தி.மு.க. சார்பில், அமைதி ஊர்வலம் நடந்தது. பின் தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் முன்புள்ள அண்ணாத்துரை சிலைக்கு, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதேபோல் அ.தி.மு.க. மற்றும் ஓ.பி.எஸ். அணியினர், அண்ணாதுரை உருவப்படத்துக்கு, மலர் துாவி மரியாதை செய்தனர்.

ஜல்லி, எம்.சான்ட் விலையேற்றத்தால்

கட்டுமான தொழில் பாதிப்பதாக புகார்

ஈரோடு மாவட்ட சிவில் இன்ஜினியர் சங்க தலைவர் செந்தில்குமார், செயலாளர் சுரேஷ்பாபு ஆகியோர், ஈரோட்டில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

தற்போது டீசல் மற்றும் மூலப்பொருட்களின் விலை உயரவில்லை. ஆனால் ஒரு வாரத்தில் கிரஷர், ஜல்லி உற்பத்தி சார்ந்த கட்டட பொருட்களான எம்.சான்ட், பி.சான்ட், ஜல்லி விலை உயர்ந்துள்ளது. இதுவரை ஒரு கட்டடம் கட்ட சதுரடிக்கு, 2,250 ரூபாய் விலை இருந்தது. ஜல்லி, எம்.சான்ட் விலை ஏற்றத்தால் ஒரு சதுரடிக்கு மேலும், 250 ரூபாய் விலை உயர்கிறது. இதனால் வீடு கட்டுவோர் பாதிக்கப்படுவர்.

மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொறியாளர், 50க்கும் மேற்பட்ட அரசு ஒப்பந்ததாரர், 3 லட்சம் தொழிலாளர் கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விலையேற்றத்தால் அனைவரது தொழிலும் பாதிக்கும். மணலுக்கு மாற்றாக எம்.சான்ட்டை பயன்படுத்த அரசு வழிகாட்டுகிறது. அதேநேரம், இவற்றின் விலையேற்றத்தையும் கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு கூறினர்.

பவானிசாகர் எம்.எல்.ஏ.,

அண்ணாதுரைக்கு அஞ்சலி

முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின், 55வது நினைவு தினத்தையொட்டி, பவானிசாகர் தொகுதி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., பண்ணாரி தலைமையிலான கட்சியினர், புன்செய்புளியம்பட்டி நகராட்சி வளாகத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு, நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னதாக பவானிசாகர் சாலை திருவிக திடலில் இருந்து ஊர்வலமாக வந்தனர்.

மாலை அணிவித்த பின் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். இதில் நகர செயலாளர் மூர்த்தி, ஒன்றிய செயலாளர் பழனிசாமி, முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் செல்வம் மற்றும் பவானிசாகர் தொகுதி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

நாட்டு சர்க்கரை,

வெல்லம் மூட்டைக்கு ரூ.120 சரிவு

ஈரோடு மாவட்டம் சித்தோடு சொசைட்டியில், வெல்ல ஏலம் நேற்று நடந்தது. இதில், 30 கிலோ எடையில், 4,600 மூட்டை நாட்டு சர்க்கரை வரத்தானது. ஒரு மூட்டை, 1,200 ரூபாய் முதல், 1,280 ரூபாய் வரை விற்பனையானது.

உருண்டை வெல்லம், 4,800 மூட்டை வரத்தாகி, ஒரு மூட்டை, 1,250 ரூபாய் முதல், 1,300 ரூபாய்; அச்சு வெல்லம், 440 மூட்டை வரத்தாகி ஒரு மூட்டை, 1,280 ரூபாய் முதல், 1,340 ரூபாய் வரை விற்பனையானது. கடந்த வாரத்தைவிட நாட்டு சர்க்கரை, உருண்டை வெல்லம் வரத்து அதிகரித்தது. ஆனால், இரண்டும் மூட்டைக்கு, 120 ரூபாய் விலை சரிந்தது. அச்சு வெல்லம் மூட்டைக்கு, 90 ரூபாய் குறைந்தது.

சுதா மருத்துவமனையில்

ஆசிரியர் உடலுறுப்பு தானம்

கரூர் மாவட்டம் பவுத்திரத்தை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் பூபதி, 37; திருமணமாகி மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர். கடந்த மாதம், 29ம் தேதி திருச்செங்கோட்டில் இருந்து பரமத்தி வேலுார் சாலையில் சென்றபோது சாலை விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்தார். ஈரோட்டில் பெருந்துறை சாலையில் உள்ள சுதா பல்நோக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தாலும், மூளைச்சாவு அடைந்தார். இதனால் அவரது குடும்பத்தினர், உடலுறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். இரு கண்கள், கல்லீரல், இரு சிறுநீரகம், தோல், எலும்பு ஆகியவை நேற்று தானமாக பெறப்பட்டது. கல்லீரல் கோவை கே.ஜி., மருத்துவமனை; ஒரு சிறுநீரகம் கோவை கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனை; மற்றொரு சிறுநீரகம் ஈரோடு சுதா மருத்துவமனை; தோல் மற்றும் எலும்பு கோவை கங்கா மருத்துவமனை; கண்கள் ஈரோடு அகர்வால் மருத்துவமனைக்கும் தானமாக ழங்கப்பட்டது.

இதையடுத்து பூபதியின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு, கரூர் மாவட்ட அரசு அதிகாரிகளின் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டதாக, சுதா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் சுதாகர்

தெரிவித்தார்.

கொங்கு மாநாடு சுடர் ஓட்டம் துவக்கம்

பெருந்துறையில் இன்று நடக்கும் கொ.ம.தே.க., மாநாட்டுக்காக, ஓடாநிலையில் இருந்து கொங்கு சுடர் ஓட்டம் துவங்கியது. இதுபற்றி ஈரோட்டில் கொ.ம.தே.க.,வை சேர்ந்த நாமக்கல் எம்.பி., சின்ராஜ், நிருபர்களிடம் கூறியதாவது: பெருந்துறை அருகே கொ.ம.தே.க., கொங்கு நாடு எழுச்சி மாநாடு இன்று நடக்க உள்ளது.

தீரன் சின்னமலை சொந்த ஊரான ஓடாநிலையில் இருந்து நேற்று காலை, 7:00 மணிக்கு கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் மாணவ, மாணவியர் கொங்கு சுடர் ஓட்டம் துவங்கியது. இன்று மாநாட்டு பந்தலில், பொது செயலாளரிடம் கொங்கு சுடர் வழங்கப்படும். மாநாட்டின் நிறைவாக இன்று மாலை, 5:00 மணிக்கு கின்னஸ் சாதனை நிகழ்த்தும் வகையில், வள்ளி கும்மியாட்டம் துவங்கி இரவு, 7:30 மணி முதல், 8:00 மணிக்குள் நிறைவு செய்யப்படும். மாநாட்டில் பங்கேற்க கூட்டணி கட்சியினருக்கும் அழைப்பு வழங்கி உள்ளோம். பல லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

தென்னிந்திய கபடி போட்டி

தமிழக போலீஸ் ௨ம் இடம்

நம்பியூர் அருகே மலையப்பாளையத்தில், உதயகிரி முத்து வேலாயுதசுவாமி கோவிலில், நடப்பாண்டு தைப்பூச விழா மகா தரிசன விழாவையொட்டி, ஸ்ரீகுமரன் கபடி குழு சார்பில், தென்னிந்திய அளவிலான கபடி போட்டி நடந்தது. இதில், 48 அணிகள் பங்கேற்றன.

நேற்று நடந்த இறுதிப் போட்டியில் கர்நாடக மாநிலம் மங்களூரு பேங்க் ஆப் பரோடா அணி, தமிழ்நாடு காவல்துறை அணி மோதியது. இதில் மங்களூரு அணி வெற்றி பெற்று, கோப்பையை கைப்பற்றியது. தமிழ்நாடு காவல்துறை அணி இரண்டாமிடம், திருப்பூர் ஜெயசித்ரா அணி மூன்றாமிடம், தஞ்சாவூர் பிரீஸ்ட் யூனிவர்சிட்டி நான்காமிடத்தையும் பிடித்தது. முதல் பரிசாக, 75 ஆயிரம் ரூபாயுடன் கோப்பை, இரண்டாம் பரிசாக, 50,000 ரூபாய், மூன்று மற்றும் நான்காம் பரிசாக தலா, 25 ரூபாய் வழங்கப்பட்டது.

மலைப்பாதை பாறையில்

மோதி உருக்குலைந்த லாரி

பர்கூர் மலை சாலையில், வேலாம்பட்டி பிரிவில் ஒரு லாரி, பாதையோர பாறையில் மோதி, நேற்று விபத்தில் சிக்கியது. தகவலறிந்து வந்த பர்கூர் போலீசார் சென்றனர். டிரைவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். முன்னதாக டிரைவரிடம் விசாரித்ததில், சேலம் மாவட்டம் பெரியபட்டியை சேர்ந்த மூர்த்தி, 40, என்பது தெரிந்தது. நாமக்கல்லில் இருந்து மைசூருக்கு, கோழிக்கழிவை ஏற்றிச் சென்றுள்ளார். டயர் வெடித்ததில், கட்டுப்பாட்டை இழந்து, பாறையில் லாரி மோதியதாக அவர் தெரிவித்தார். இதில் லாரியின் ஒரு பகுதி உருக்குலைந்தது.

இளம் வாக்காளர்களின்

விழிப்புணர்வு மராத்தான்

லோக்சபா தேர்தலில் இளம் வாக்காளர், வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்ற மராத்தான் போட்டி, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, நடந்தது.

இணை ஆணையர் (மாநில வரி) லட்சுமி பவியா தண்ணீரு முன்னிலையில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா துவக்கி வைத்தார்.

மாநகராட்சி அலுவலகம், அரசு மருத்துவமனை சென்று மீண்டும் பேரணியாக கலெக்டர் அலுவலகம் வந்தடைந்தனர். இளம் வாக்காளர் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். 18 வயது நிரம்பியவர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் இணைத்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர். தாசில்தார் ஜெயகுமார், மாநகராட்சி நகர்நல அலுவலர் பிரகாஷ் உடனிருந்தனர்.

மின் பயனீட்டாளர்

குறைதீர் கூட்டம்

ஈரோடு மின் பகிர்மான வட்ட மின் பயனீட்டாளர் மாதாந்திர குறைதீர் கூட்டம் வரும், 7ம் தேதி காலை, 11:00 மணிக்கு நடக்கிறது.

ஈரோடு, 948 - ஈ.வி.என்., சாலையில், மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கும் கூட்டத்துக்கு மேற்பார்வை பொறியாளர் கலைசெல்வி தலைமை வகித்து, தீர்வு காண்கிறார். இதில் ஈரோடு, கருங்கல்பாளையம், மரப்பாலம், சூரம்பட்டி, ரங்கம்பாளையம், வீரப்பன்சத்திரம், சம்பத் நகர், திண்டல், அக்ரஹாரம், மேட்டுக்கடை, சித்தோடு, கவுந்தப்பாடி பகுதி பயனீட்டாளர் பங்கேற்று, குறை, பிரச்னைகளை தெரிவித்து தீர்வு பெறலாம்.






      Dinamalar
      Follow us