ADDED : பிப் 18, 2024 10:26 AM
சர்க்கரை, வெல்லம்
வரத்து அதிகரிப்பு
சித்தோடு வெல்லம் சொசைட்டியில் நேற்று நாட்டு சர்க்கரை மற்றும் வெல்ல ஏலம் நடந்தது. இதில், 30 கிலோ எடையில், 3,500 நாட்டு சர்க்கரை மூட்டை வரத்தானது. ஒரு மூட்டை, 1,150 ரூபாய் முதல், 1,250 ரூபாய்; உருண்டை வெல்லம், 4,500 மூட்டை வரத்தாகி ஒரு மூட்டை, 1,180 ரூபாய் முதல், 1,280 ரூபாய் வரை விற்பனையானது. அச்சு வெல்லம், 650 மூட்டை வரத்தாகி ஒரு மூட்டை, 1,250 ரூபாய் முதல், 1,310 ரூபாய் வரை விற்பனையானது. கடந்த வாரத்தைவிட நேற்று நாட்டு சர்க்கரை, வெல்லம் வரத்து அதிகரித்தது. அதேசமயம் விலையில் மாற்றமில்லை.
தொழிற்சங்கத்தினர்
300 பேர் மீது வழக்கு
பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று முன்தினம், ஈரோட்டில் காளை மாட்டு சிலை அருகே மறியல் போராட்டம் நடந்தது. சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார். போலீஸ் அனுமதித்த மறுத்த நிலையில் மறியலில் ஈடுபட்ட சுப்பிரமணியம் உள்பட, 300 பேர் மீது சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பட்டதாரி மகன் மாயம்
காவலாளி தந்தை புகார்
ஈரோடு, கே.கே.நகர், கல்யாண சுந்தரம் வீதி, ஜெ.ஜெ.நகரில் வசிப்பவர் வேலுச்சாமி. தஞ்சை மாவட்டம் வல்லம்புதுாரை சேர்ந்தவர். ஈரோடு, அன்னை சத்யா நகரில் ஒரு கம்பெனியில் இரவு காவலாளியாக வேலை பார்க்கிறார். இவரின் மகன் ஆனந்த், 27, எம்.பி.ஏ., பட்டதாரி. தந்தையுடன் தங்கி, வேலை தேட ஒரு மாதத்துக்கு முன் ஈரோடு வந்தார். ஒரு சோப்பு கம்பெனி வேலைக்கு ஆனந்த் சென்றார். ஆனால், 10ம் தேதி வேலையில் இருந்து நின்று விட்டார். இதனால் படித்த படிப்புக்கு வேலை கிடைக்கவில்லை என்று மன உளைச்சலுக்கு ஆளானார். கடந்த, 14ம் தேதி இரவு மொபைல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு, ஆனந்த் மாயமாகி விட்டார். தந்தை வேலுச்சாமி புகாரின்படி, தாலுகா போலீசார் தேடி வருகின்றனர்.
எம்.பி., வளர்ச்சி நிதியில்
கட்டிய ரேஷன் திறப்பு
கோபி அருகே நரிக்குட்டையில், ஒன்பது லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட ரேசன் கடையை, திருப்பூர் எம்.பி., சுப்பராயன் நேற்று திறந்து வைத்தார். அதேபோல் அளுக்குளியில், 11.80 லட்சத்தில் நுாலகம், சந்திராபுரம் பஞ்., யூனியன் துவக்கப்பள்ளியில், 18.40 லட்சத்தில் கட்டிய, இரு கூடுதல் வகுப்பறை கட்டடத்தை எம்.பி., திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கோபி தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் சிறுவலுார் முருகன், காங்., வடக்கு மாவட்ட தலைவர் சரவணன், இ.கம்யூ., நிர்வாக குழு உறுப்பினர் பரமேஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
தந்தை மாயம்; மகன் புகார்
கோபி அருகே ஸ்ரீ நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம், 75; கடந்த, 13ம் தேதி வெற்றிலை, பாக்கு வாங்கி வருவதாக, அருகேயிருந்த கடைக்கு சென்றுள்ளார். ஆனால், வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. அவரின் மகன் கோபால் புகாரின்படி, கோபி போலீசார் தேடி வருகின்றனர்.
21ல் குறைதீர் கூட்டம்
ஈரோடு மின் பகிர்மான வட்ட மின் பயனீட்டாளர் மாதாந்திர குறைதீர் கூட்டம் வரும், 21ம் தேதி காலை, 11:00 மணிக்கு மேற்பார்வை பொறியாளர் கலைசெல்வி தலைமையில் நடக்க உள்ளது.
பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம் - சேனிடோரியம், துணை மின் நிலைய வளாகத்தில் உள்ள மின்கோட்ட அலுவலகத்தில் நடக்கும் கூட்டத்தில், பெருந்துறை, வெள்ளோடு, ஈங்கூர், கொடுமணல், சென்னிமலை, கவுண்டச்சிபாளையம், குன்னத்துார், விஜயமங்கலம், பிடாரியூர், புதுப்பாளையம், பல்லக்கவுண்டன்பாளையம் பகுதி பயனீட்டாளர்கள் தங்கள் குறை, கோரிக்கைகளை மனுவாக தெரிவித்து தீர்வு பெறலாம்.
ரூ.4.80 லட்சத்தில்
வடிகால் கட்ட பூஜை
கொடுமுடி பேரூராட்சி, 12-வது வார்டுக்கு உட்பட்ட தன்னாசி கோயில் தெருவில், நமக்கு நாமே திட்டத்தில், 4.80 லட்சம் ரூபாய் மதிப்பில் வடிகால் அமைக்கும் பணி நேற்று நடந்தது. பேரூராட்சி தலைவர் திலகவதி சுப்ரமணியம், பூஜை செய்து தொடங்கி வைத்தார். துணை தலைவர் ராஜா கமால்ஹசன் முன்னிலை வகித்தார். மக்கள் பங்களிப்பு தொகை, 96 ஆயிரம் ரூபாய், அரசு நிதி, 3.84 லட்சம் ரூபாய் என, ௪.௮௦ லட்சம் ரூபாயில் பணி நடக்கிறது. இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள், மக்கள் கலந்து கொண்டனர்.
கோபியில்
புறவழிச்சாலை
அமைக்க வலியுறுத்தல்
கோபி எம்.எல்.ஏ., செங்கோட்டையன், கோபியில் நேற்று கூறியதாவது:
கோபி நகராட்சி எல்லை வரை, நான்கு வழிச்சாலை திட்டப்பணி நடக்கிறது. கோபி டவுனில் உள்ள சாலைகள் குறுகிய அளவில் உள்ளதாலும், சாலையை ஒட்டி வணிக வளாகங்கள், நீதிமன்ற கட்டடம், அரசுப்பள்ளி, அரசு அலுவலகம் உள்ளதால், சாலையை விரிவுபடுத்த இயலாத சூழ்நிலை உள்ளது. அதேசமயம் கோபியில் வரையறுக்கப்பட்ட புறவழிச்சாலை திட்டத்தை, நிறுத்தி வைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே கோபி நகர மக்களின் நலன் கருதி, கோபியில் புறவழிச்சாலை திட்டம் குறித்து மறுபரிசீலனை செய்யக்கோரி, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர், துறை முதன்மை செயலாளருக்கு வலியுறுத்தி உள்ளேன். அதுகுறித்து சட்டசபை கூட்டத்திலும் வலியுறுத்த உள்ளேன். கோபியில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அயோத்தி சென்று திரும்பிய
பக்தர்களுக்கு வரவேற்பு
அயோத்தி கோவிலுக்கு, கோவை, திருப்பூர், ஈரோட்டில் இருந்து பக்தர்கள் அதிகளவில் சிறப்பு ரயிலில் சென்ற வண்ணம் உள்ளனர்.
கடந்த, 15ம் தேதி இரவு திருப்பூரில் இருந்து சிறப்பு ரயில் அயோத்திக்கு இயக்கப்பட்டது. இதில் ஈரோட்டில் இருந்து, 287 பேர் பயணித்தனர். நேற்று முன்தினம் இரவு ஈரோட்டில் இருந்து அயோத்திக்கு சென்ற சிறப்பு ரயிலில், 300 பேர் ஈரோட்டில் இருந்து சென்றனர். இதுவரை ஈரோட்டில் இருந்து, 2,268 பேர் ஆறு நாளில் சிறப்பு ரயிலில் சென்றுள்ளனர். இதனிடையே அயோத்தி கோவிலில் ராமரை தரிசித்து சிறப்பு ரயிலில், நேற்று மதியம் ஈரோடு ஸ்டேஷனுக்கு வந்த பக்தர்களை, தெற்கு மாவட்ட பா.ஜ.,வினர் வரவேற்றனர்.
'போதை' வாலிபர்
இருவருக்கு சிறை
வலி நிவாரணி மாத்திரைகளை, இளைஞர்கள் போதைக்கு பயன்படுத்துவதாக, கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து கருங்கல்பாளையம் கக்கன் நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகப்படும்படியாக நின்ற இருவரை பிடித்து சோதனை செய்தனர். அவர்கள் போதையில் இருப்பது தெரிந்தது. ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று நடத்திய விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த அருண், 22, மதன்குமார், 19, என தெரிந்தது. போதைக்காக வலி நிவாரண மாத்திரைகளை பயன்படுத்தியது தெரிந்தது. இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மாவட்ட சிறையில் அடைத்தனர்.
50வது வார்டில் குழாய் உடைப்பால்
ஒன்றரை மாதமாக வீணாகும் குடிநீர்
ஈரோடு மாநகராட்சி, 50வது வார்டு முத்தம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதி-1 அருகே, சென்னை பந்தல் ஸ்டோர் உள்ளது. இங்கு சாலையோர குடிநீர் குழாயில் ஒன்றரை மாதத்துக்கு முன் உடைப்பு ஏற்பட்டது. அப்போது முதல் தொடர்ந்து குடிநீர் வெளியேறி வருகிறது. தினமும் பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது. மாநகராட்சி அலுவலர்கள் யாரும் கண்டு கொள்வதாக இல்லை.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: ஒன்றரை மாதங்களாக குடிநீர் பயனின்றி வெளியேறுகிறது. மாநகராட்சி அலுவலர்கள் இந்த வழியாக சென்றாலும், அவர்கள் கண்ணில் குடிநீர் வெளியேறுவது தெரியவில்லை போலும். இனியும் மெத்தனம் காட்டாமல், உடைப்பை சரி செய்து, குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும். இவ்வாறு மக்கள் கூறினர்.
விபத்தில் வாலிபர் பலி
சேலம் மாவட்டம் மேட்டூர், கண்ணாமூச்சி அருகே மிளகாய்புதை பகுதியை சேர்ந்தவர் சாஸ்தா, 23; பார்மஸிஸ்ட் முடித்து விட்டு வீட்டில் இருந்தார். ஹோண்டா பைக்கில் அம்மாபேட்டையை அடுத்த சுள்ளிமேட்டில் உள்ள பாட்டி வீட்டுக்கு நேற்று சென்றார். ஆட்டக்காலனுார் அருகே சென்றபோது, எதிரே வந்த மற்றொரு டூவீலர் மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட சாஸ்தா பலத்த காயமடைந்தார். பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
ஜவுளி வியாபாரிகள்
28ல் கடையடைப்பு
சிறு, குறு தொழில்களுக்கான பேலன்ஸ் ஷீட் தொடர்பாக வருமான வரி சட்ட மாறுதலை ஓராண்டுக்கு ஒத்திவைக்க கோரி வரும், 28ல் கடையடைப்பு போராட்டம் நடத்துவதாக, கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேசன் தலைவர் சிதம்பர சரவணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:
இந்த சட்ட மாறுதலால், சிறுகுறு தொழில் பாதிக்கப்படும். சிறுகுறு தொழில் முனைவோர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றுவதற்கு பதில், வாழ்வாதாரத்தை அழிக்கும். வரும் மார்ச், 31ல் அமலாகும் இந்த சட்டத்தை ஓராண்டுக்கு தள்ளி வைக்க வேண்டும். இதை வலியுறுத்தி வரும், 28ல் கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சிறப்பு கிராமசபை கூட்டம்
அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் பூதப்பாடி பஞ்சாயத்தில், சிறப்பு கிராமசபை கூட்டம் நேற்று நடந்தது. பஞ்., தலைவர் முனியப்பன் தலைமை வகித்தார். சிறப்பு தணிக்கை அலுவலர் ரூபாதேவி தணிக்கை அறிக்கையை வாசித்து விளக்கினார். பஞ்., செயலர் நந்தகுமார், பணித்தள பொறுப்பாளர்கள், மக்கள் கலந்து கொண்டனர்.
கீழ்பவானி பாசனத்துக்கு
2ம் சுற்று நீர் திறப்பு நிறுத்தம்
பவானிசாகர் அணையில் இருந்து, இரண்டாம் போக புன்செய் பாசனத்திற்கு கடந்த ஜன., 7ம் தேதி முதல் கீழ்பவானி வாய்க்காலில் சுழற்சி முறையில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதன்படி திறக்கப்பட்ட இரண்டாம் சுற்று தண்ணீர், நேற்று மாலை முற்றிலும் நிறுத்தப்பட்டது. அதேசமயம் அரக்கன்கோட்டை தடப்பள்ளி பாசனத்திற்கு 700 கன அடி தண்ணீர்; குடிநீருக்காக 100 கன அடி தண்ணீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டது. மூன்றாம் சுற்று தண்ணீர் மார்ச், 1ம் தேதி திறக்கப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சங்க மாநில செயற்குழு கூட்டம்
தமிழக டி.ஜி.பி., பங்கேற்பு
தமிழக காவல்துறை அமைச்சுப்பணியாளர் சங்கத்தின், 138வது மாநில செயற்குழு கூட்டம், ஈரோட்டில் நேற்று நடந்தது. சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் முத்துசாமி பங்கேற்றார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற டி.ஜி.பி., சங்கர் ஜிவால் பேசியதாவது:
போலீசாரின் நலன் குறித்து அனைத்து அதிகாரிகளும் பேசுகிறோம். ஆனால், போலீசாரின் நலன்கள் அமைச்சு பணியாளர்களிடம் உள்ளது. என்னை பொறுத்தவரை அரசு துறைகளில் காவல் துறை அமைச்சு பணியாளர் துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இவர்களின் பதவி உயர்வு போன்ற பல்வேறு கோரிக்கைகளை செயல்படுத்த முயற்சி செய்து வருகிறோம்.
அமைச்சுப்பணியிடங்களில் உள்ள காலிப்பணியிடம், டி.என்.பி.எஸ்.சி., மூலம் விரைவில் நிரப்பப்படும். ஈரோடு எஸ்.பி., அலுவலகம் கூடுதல் கட்டடம் கட்ட பரிந்துரைத்துள்ளனர். அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், மேற்கு மண்டல ஐ.ஜி., பவானீஸ்வரி, ஈரோடு எஸ்.பி., ஜவகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
போலீசார் இடமாற்றம்
திருப்பூர் மாநகரில், எஸ்.எஸ்.ஐ., உட்பட, 25 போலீசாரை இடமாற்றம் செய்து கமிஷனர்
உத்தரவிட்டுள்ளார்.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், போலீசார் உள்ளிட்ட அனைத்து துறையிலும் இடமாற்றம் நடந்து வருகிறது. மாநகர போலீசில் சமீபத்தில், உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
தற்போது, மூன்றாண்டுகளை கடந்து ஸ்டேஷன்களில் பணியாற்றி வரும் எஸ்.எஸ்.ஐ., ஒன்பது பேர், போலீஸ் ஏட்டு, ஆறு பேர் மற்றும் முதல் நிலை போலீசார், எட்டு பேர் என, 23 பேரை இடமாற்றம் செய்து திருப்பூர் போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிநபு உத்தரவிட்டார்.
விவசாயிகள் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக, தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் வழங்க கோரி, தாராபுரம் அருகே விவசாயிகள் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.
தாராபுரத்தை அடுத்த பெல்லம்பட்டி, மருதுார் ஆகிய இடங்களில், விவசாயிகள் தங்கள் தோட்டங்களில், கறுப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: கடந்த சட்டசபை தேர்தலின் போது, தாங்கள் ஆட்சிக்கு வந்தால், ரேஷன் கடைகளில் பாமாயிலுக்குப் பதிலாக தேங்காய் எண்ணெய் கடலை எண்ணெய் வழங்குவோம் என, தி.மு.க., வாக்குறுதி அளித்தது. ஆனால், வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
இது தொடர்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் உள்ளிட்ட விவசாயிகள், சென்னையில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், நாங்கள் கறுப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டோம். இவ்வாறு கூறினர். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க குண்டடம் ஒன்றிய செயலாளர் ராமசாமி, மாவட்ட செயலாளர் பால்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
வணிக வரித்துறை அலுவலக கட்டடங்கள் திறப்பு
ஈரோடு மாவட்டத்தில், 18.76 கோடி ரூபாயில் கட்டப்பட்ட வணிக வரித்துறை அலுவலக கட்டடங்கள், பள்ளி கட்டடங்களை முதல்வர் ஸ்டாலின், காணொலி காட்சியில் நேற்று திறந்து வைத்தார்.
இதன்படி 46 புதுாரில் இணை ஆணையர் (விற்பனை வரி) மற்றும் இணை ஆணையர் (நுண் அறிவு), துணை அலுவலகங்கள் கட்டடம், கோபி, சத்தியமங்கலத்தில் வணிக வரி அலுவலக கட்டடங்கள், மொடக்குறிச்சி யூனியன் கஸ்பாபேட்டை, லக்கம்பட்டி, அம்மாபேட்டை யூனியன் பூனாட்சியில் அரசு பள்ளி கட்டடங்கள் திறக்கப்பட்டன. 46 புதுார் இணை ஆணையர் (வணிக வரி - விற்பனை வரி) அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, அமைச்சர் முத்துசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
குரங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு
கர்நாடகா மாநிலத்தில் குரங்கு காய்ச்சல் மற்றும் குரங்கு அம்மை நோய் பரவி வருகிறது. இந்நிலையில் தமிழக - கர்நாடகா எல்லையான ஈரோடு மாவட்டம் பர்கூர், ஓசூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில், சுகாதாரத்துறையினர் இந்த நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நோய் அறிகுறி உடலில் தென்பட்டால், உடனே அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தினர்.
ஆவணங்கள் பதிவேற்ற உதவி மையம்
தொழிலாளர் நலத்துறையில், வாரிய உறுப்பினர்கள், பயன்கள் வேண்டி விண்ணப்பிக்கின்றனர். 'ஆன்லைன்' விண்ணப்பங்களை, தனியார் அமைப்பு சென்னையில் பராமரிக்கிறது. சென்னை புயல்மழை நேரத்தில், சர்வர் கோளாறு ஏற்பட்டு, அனைத்து விண்ணப்ப விவரமும் அழிந்துவிட்டதாக, தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டியிருந்தன.
நிலுவை விண்ணப்பங்களுக்கு தேவையான ஆவணங்களை, வாரிய இணையளத்தில் பதிவேற்றம் செய்யலாம் என, தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ளது.
இதன்படி, 2023 டிச., 3 ம் தேதிக்கு முன், விண்ணப்பம் செய்து, நிலுவையில் இருந்த விண்ணப்பதாரர், தங்களது ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஆவணங்களை, இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்ய, திருப்பூர் தொழிலாளர் உதவி கமிஷனர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில், உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. எனவே, உதவி மையத்தை அணுகி, ஆவணங்களை பதிவேற்றம் செய்யலாம் என, தொழிலாளர் துறை அலுவலகம் அறிவித்துள்ளது.
தெற்கு மாவட்ட பா.ஜ.,
விழிப்புணர்வு பிரசாரம்
ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜ., சார்பில், சிப்காட்டால் நிலம் நீர், காற்று மாசடைந்துள்ளதை மக்களிடம் விளக்கும் விழிப்புணர்வு பிரசாரம், பெருந்துறை, பெத்தாம்பாளையம் பிரிவு, விநாயகர் கோவில் அருகில் நேற்று மாலை நடந்தது.
மாவட்ட பொது செயலாளர் ராயல் சரவணன் தலைமை வகித்தார். பெருந்துறை நகர தலைவர் பூர்ணசந்திரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்டத் தலைவர் வேதானந்தம் கலந்து கொண்டார். சிப்காட்டின் பாதிப்புகளை விளக்கி பா.ஜ.,வினர் முழக்கமிட்டனர். பின், சிப்காட் பாதிப்புகள் விளக்கும், கோரிக்கை மனுவை வருவாய் துறையினரிடம் வழங்கினர். இதில் சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள், பா.ஜ.,வினர் கலந்து கொண்டனர்.
தென்னையில் நோய் தாக்குதல்
கள ஆய்வில் ஈடுபட்ட அமைச்சர்
வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில், தென்னையில் நோய் தாக்குதல், பூச்சி கட்டுப்பாடு, உர மேலாண்மை குறித்த வயல் மட்ட கள ஆய்வை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் காங்கேயத்தில் மேற்கொண்டார். அமைச்சருடன் தோட்டக்கலை, வேளாண்மைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தென்னையில் நோய் தாக்குதல், பூச்சி கட்டுப்பாடு, உர மேலாண்மை போன்ற விவரங்கள், வெள்ளை ஈ தாக்குதல் குறித்தும், பூச்சி மருந்துகள் உபயோகம் தவிர்த்தல், மஞ்சள் நிற பாலீத்தின் தார்களை மரத்தின் தண்டுப்பகுதியில் 6 அடி உயரத்தில் கட்ட வேண்டும். ஏக்கருக்கு 8 என்ற எண்ணிக்கையில் இருக்கவேண்டும் என்றும் விவசாயிகளுக்கு, அதிகாரிகள் விளக்கினர்.
வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அலுவலர்கள், தென்னை நோய் தாக்குதல், பூச்சி கட்டுப்பாடு, உர மேலாண்மை விவரங்களை, விவசாயிகள் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் எடுத்துரைத்தனர்.
ஆக்கிரமிப்பு அகற்றும் பணி
தற்காலிகமாக நிறுத்தம்
ஈரோட்டில் ப.செ.பார்க்கில் இருந்து மணிக்கூண்டு செல்லும் சாலை மற்றும் ஆர்.கே.வி சாலை, நேதாஜி வீதி, கொங்காலம்மன் கோவில் வீதி உள்ளிட்ட பகுதிகளில், மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கடந்த இரு நாட்களாக
ஆக்கிரமிப்பும் அகற்றும் பணி நடந்தது.
இதனால் சாலையோர வியாபாரிகள், தங்கள் வாழ்வாதாரம் பாதிப்பதாகவும், பணியில் பாரபட்சம் காட்டுவதாகவும், ஆக்கிரமிப்புகளை அகற்ற அவகாசம் வழங்க வேண்டுமென்றும் வலியுறுத்தினர். இந்நிலையில் நேதாஜி சாலையில் நேற்று நடப்பதாக இருந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடக்கவில்லை.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:தொடர்ந்து இரு நாட்களாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. இன்னும் ஒரு சில இடங்களில் ஆக்கிரமிப்பு உள்ளது. போலீஸ் பற்றாக்குறை, ஊழியர்களுக்கு தொடர் பணி உள்ளிட்ட காரணங்களால் தற்காலிகமாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. திங்கட்கிழமைக்கு மேல் மீண்டும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடக்கும்.இவ்வாறு கூறினர்.