/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பூந்துறை ஈஸ்வரன் கோவிலில் 23ல் கும்பாபிஷேகம்
/
பூந்துறை ஈஸ்வரன் கோவிலில் 23ல் கும்பாபிஷேகம்
ADDED : ஆக 17, 2010 03:14 AM
ஈரோடு:அவல்பூந்துறை பாகம்பிரியாள் சமேத புஷ்பவனேஸ்வரர் கோவில், அலமேலுமங்கை லட்சுமி சமேத தாமோதரப் பெருமாள் கோவில் மற்றும் அங்காளம்மன் கோவில் திருப்பணிகள் ஒரு கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு, வரும் 23ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.
ஈரோடு அருகே அவல்பூந்துறையில், சேர மன்னரால் கட்டப்பட்ட இக்கோவிலில் கடைசியாக 1990ல் கும்பாபிஷேகம் நடந்தது.
தற்போது, ஐந்து நிலை ராஜகோபுரம், துர்க்கை, தட்சிணாமூர்த்தி, சனீஸ்வரருக்கு தனி சன்னதிகள் மற்றும் நவக்கிரஹ சன்னதிகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. கோவில் பிரகாரத்தில், பக்தர்கள் நடந்து செல்லும் வகையில் சதுர கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. புஷ்பவனேஸ்வரர், பாகம்பிரியாள் சன்னதிகளில் விமானங்கள் புதுப்பிக்கப்பட்டு, வர்ணம் அடிக்கப்பட்டு, 'பளீச்' என காட்சியளிக்கின்றன. பழைய கல் தூண்கள் 'கெமிக்கல் வாஷ்' செய்யப்பட்டுள்ளன. இத்திருத்தலம் குறித்து தேவாரத்தில் வப்பு ஸ்தலமாக திருஞானசம்பந்தர், பாடியுள்ளார்.இதே வளாகத்தில் உள்ள அலமேலு மங்கை லட்சுமி சமேத தாமேதர பெருமாள் கோவிலில், தற்போது தாயார், பெருமாள் சன்னதிகள் விமானங்கள் புதுப்பிக்கப்பட்டு, முன்மண்டபத்தில் கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. அருகேயுள்ள பழமைவாய்ந்த அங்காளம்மன் கோவிலில் கர்ப்பகிரஹம், அர்த்தமண்டபம், கோபுரம் ஆகியவை புதுப்பிக்கப்பட்டு, முன் மகாமண்டபம், கன்னிமூலையில் விநாயகர் சன்னதி, சப்த கன்னிமார், இருளப்பர், பேச்சியம்மன், கருப்பணஸ்வாமிக்கு புது சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுற்றுப்பிரகாரத்தில் பக்தர்கள் நடந்து செல்லும் வகையில் சதுர கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. மூன்று கோவில்களிலும் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் நிறைவடைந்துள்ளன. வரும் 23ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.கோவிலில் 21ம் தேதி காலை 7.30க்கு மேல் கணபதிஹோமம், நவக்கிரஹ ஹோமம், தனபூஜை, மாலை 5 மணிக்கு முதல்கால யாக வேள்வி, நடக்கிறது. 22ம் தேதி காலை 9 மணிக்கு இரண்டாம்கால யாகபூஜை, மாலை 5 மணிக்கு மூன்றாம் கால யாகபூஜை நடக்கிறது.வரும் 23ம் தேதி, முதலாவதாக அங்காளம்மன் கோவிலில் அதிகாலை 4.45க்கு மேல் 5.45க்குள் மகாகும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து தாமோதர பெருமாள் கோவிலில் காலை 6 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. புஷ்பவேஸ்வரர் கோவிலில் 9 மணிக்கு மேல் 9.45க்குள் ராஜகோபுர விமானங்கள், ஸ்வாமி, அம்பாள், சண்முகர், பரிவார மூர்த்திகளுக்கு சமகால கும்பாபிஷேகம் நடக்கிறது. பின்னர் மஹாஷேகம் நடக்கிறது.திருப்பணிக்குழு தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் ஏற்பாடுகள் நடக்கிறது.