/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வேட்பாளருடன் சேர்ந்து பிரசாரம் செய்யாததற்கு வேறு காரணமில்லை: அமைச்சர் விளக்கம்
/
வேட்பாளருடன் சேர்ந்து பிரசாரம் செய்யாததற்கு வேறு காரணமில்லை: அமைச்சர் விளக்கம்
வேட்பாளருடன் சேர்ந்து பிரசாரம் செய்யாததற்கு வேறு காரணமில்லை: அமைச்சர் விளக்கம்
வேட்பாளருடன் சேர்ந்து பிரசாரம் செய்யாததற்கு வேறு காரணமில்லை: அமைச்சர் விளக்கம்
ADDED : ஏப் 18, 2024 07:01 AM
ஈரோடு : ''நான் சில பகுதியிலும், வேட்பாளர் சில பகுதியிலும் ஓட்டு சேகரிக்க சென்றதால், இணைந்து ஓட்டு சேகரிக்க முடியவில்லை. இதற்கு வேறு எந்த காரணமும் இல்லை,'' என, அமைச்சர் முத்துசாமி விளக்கமளித்தார்.
ஈரோட்டில் நேற்று நிருபர்களிடம், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி கூறியதாவது: மகளிர் உரிமை தொகை, இலவச பஸ் பயணம், புதுமை பெண் திட்டம், மாணவர்களுக்கு காலை உணவு போன்ற திட்டங்கள் முதல்வர் ஸ்டாலின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியது. 1.16 கோடி பேருக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்படுகிறது. கூடுதலாக விண்ணப்பித்துள்ளவர்களில் தகுதியானவர்களுக்கு, தேர்தலுக்கு பின் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும்.
சோலாரில், 20 ஏக்கரில், 60 கோடி ரூபாயில் கட்டப்படும் புதிய பஸ் ஸ்டாண்ட் அடுத்த, 2, 3 மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும். சத்தி சாலை, கனி ராவுத்தர் குளம் அருகே, 13 ஏக்கரில் புறநகர் பஸ் ஸ்டாண்ட் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். சோலாரில், 53 ஏக்கரில் காய்கறி மார்க்கெட், 30 கோடி ரூபாயில், பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் விரைவில் அமைக்கப்படும். 278 கோடி ரூபாயில், மாநகர பகுதியில் அடிப்படை கட்டமைப்பு வசதி செய்யப்படுகிறது. சி.என்.கல்லுாரியை அரசு கல்லுாரியாக்கி, வளாகத்தில் மிகப்பெரிய நுாலகம், உள் விளையாட்டு அரங்கம் அமைக்கும் சட்டசபை தீர்மானம் ஜனாதிபதி ஒப்புதலுக்காக காத்துள்ளது.
தற்போது இண்டியா கூட்டணி சார்பில், பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், 40 எம்.பி.,க்களும் தி.மு.க., கூட்டணியில் வெற்றி பெற்று டில்லி செல்லும்போது, அவற்றை நிறைவேற்ற வாய்ப்பாகும். அத்திக்கடவு - அவினாசி திட்டப்பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு தயாராக உள்ளது. உபரி நீர் வரும்போது, திறப்பு விழா நடத்தப்படும். பவானிசாகர் அணையில் நீர் இருப்பு குறைவாக உள்ளதால், கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடியாத நிலை உள்ளது. விவசாயிகள் பாதிக்கப்பட்டால், அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்.
நான் சில பகுதியிலும், வேட்பாளர் சில பகுதியிலும் ஓட்டு சேகரிக்க சென்றதால், இணைந்து ஓட்டு சேகரிக்க முடியவில்லை. இதற்கு வேறு எந்த காரணமும் இல்லை. தேர்தல் விதிமுறையை மீறி, தி.மு.க., எந்த செயலையும் செய்யவில்லை. திட்டமிட்டு சிலர், தி.மு.க.,வுக்கு அவப்பெயரை ஏற்படுத்த, தி.மு.க., தேர்தல் விதிகளை மீறியதாக சித்தரிக்க முயல்கின்றனர். இவ்வாறு கூறினார்.

