/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சேட்டை மட்டுமல்ல; அறிவும் உண்டு! டீக்கடையில் நிரூபித்த ஆண் குரங்கு
/
சேட்டை மட்டுமல்ல; அறிவும் உண்டு! டீக்கடையில் நிரூபித்த ஆண் குரங்கு
சேட்டை மட்டுமல்ல; அறிவும் உண்டு! டீக்கடையில் நிரூபித்த ஆண் குரங்கு
சேட்டை மட்டுமல்ல; அறிவும் உண்டு! டீக்கடையில் நிரூபித்த ஆண் குரங்கு
ADDED : செப் 05, 2025 01:07 AM
எங்கிருந்தோ இருந்து வந்த ஒரு ஆண் குரங்கு, அலுவலக வளாகத்தில் உள்ள ஒரு டீக்கடைக்குள் புகுந்தது. மதிய நேரம் என்பதால், நான்கைந்து பேர் கடை அருகிலும், அதை ஒட்டிய பகுதியிலும் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர்.
பலகாரம் வைத்திருந்த மேஜை மீது தாவி ஏறியது. ஒரு கண்ணாடி ஜாடியின் மூடியை தினம் திறந்து மூடும் கடைக்காரர் போல் லாவகமாக திறந்தது. அதில் இருந்த பிளம்கேக்கை எடுத்து ருசித்தது. அடுத்து ஒரு பாட்டிலை திறந்து இரண்டு சாக்லெட்டை எடுத்தது. பிறகு அருகில் இருந்த ஹாட்பாக்சை திறந்து பார்த்தது. எதுவும் இல்லாததால், சமையலுக்கு நறுக்கி வைத்திருந்த வெங்காயத்தை எடுத்து தின்றது.
கேக்கும், வெங்காயமும் பொருந்தா கூட்டணியாச்சே? இதனால் வாடிக்கையாளர்களுக்கு வைத்திருந்த பாட்டிலை எடுத்து கீழே கொட்டி தண்ணீரை குடித்தது. இரு சாக்லெட்டுகளை கையில் இறுக பிடித்தபடி (காதலிக்கு பர்த்டேவாக இருக்குமோ? அதற்கு தருவதற்காக இருக்கலாமோ?) சென்றது. தோரணையை பார்த்தபோது, மீண்டும் வருவேனாக்கும் என்பது போல் இருந்தது. சரியாக, ௧௦ நிமிடத்தில் கடையில் இருந்து கிளம்பி விட்டது. மனிதனுக்கு உரிய அனைத்து புத்திசாலி குணமும் இருந்ததால், அங்கிருந்த பலரும் குரங்கை விரட்டாமல் (கடைக்காரர் உள்பட) ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.
தாலுகா அலுவலக ஊழியர்கள், இரண்டாவது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அலுவலக வளாகத்தில் வழக்கத்தை விட கூட்டம் குறைவாக இருந்தது. இதனால் குரங்காரும், எவ்வித தொந்தரவுக்கும் ஆட்படாமல், வந்தார்... தின்றார்... சென்றார்...!
குரங்கு என்றால் சேட்டை மட்டுமல்ல... புத்திசாலித்தனமும் உண்டு. நம்ம புத்திசாலித்தனமும், சேட்டையும் எங்கிருந்து வந்தது என்பதை நாம்தான், பெரும்பாலான சமயங்களில் மறந்து விடுகிறோம்.