/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கவனிக்க மறந்த அதிகாரிகள்; விளையாட்டு காட்டிய சுயேட்சைகள்: 10:30 மணி நேரம் தாமதமாக வெளியான வேட்பாளர் பட்டியல்
/
கவனிக்க மறந்த அதிகாரிகள்; விளையாட்டு காட்டிய சுயேட்சைகள்: 10:30 மணி நேரம் தாமதமாக வெளியான வேட்பாளர் பட்டியல்
கவனிக்க மறந்த அதிகாரிகள்; விளையாட்டு காட்டிய சுயேட்சைகள்: 10:30 மணி நேரம் தாமதமாக வெளியான வேட்பாளர் பட்டியல்
கவனிக்க மறந்த அதிகாரிகள்; விளையாட்டு காட்டிய சுயேட்சைகள்: 10:30 மணி நேரம் தாமதமாக வெளியான வேட்பாளர் பட்டியல்
ADDED : ஜன 22, 2025 07:21 AM

ஈரோடு: ஈரோடு இடைத்தேர்தலில் விபரமற்ற அதிகாரிகளாலும், விளையாட்டு காட்டிய சுயேட்சைகளாலும், இறுதி வேட்பாளர் பட்டியல், 10:30 மணி நேரம் தாமதமாக வெளியிடப்பட்டது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பு மனு வாபஸ் பெறுதல், சின்னம் ஒதுக்கி, இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று முன்தினம் மதியம் வெளியிட வேண்டும். இதன்படி மதியம், 3:00 மணிக்கு, 47 மனு ஏற்கப்பட்டு, நோட்டாவுடன், 48 வேட்பாளர் போட்டியிடுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் மணீஷ் அறிவித்தார். இதையடுத்து சின்னம் ஒதுக்கும் பணியை தொடங்கினர். தி.மு.க.,வுக்கு உதயசூரியன், நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கினர். சுயேட்சைகளில், 10 பேர் ஒரே சின்னத்தை கேட்டனர். இதனால் மற்ற வேட்பாளர்களுக்கு சின்னத்தை இறுதி செய்து, அடையாள அட்டை வழங்கினர்.
இந்நிலையில் சுயேட்சை வேட்பாளர்களான பத்மராஜன், அக்னி ஆழ்வார், நுார்முகம்மது ஆகியோர், 'கர்நாடகாவை சேர்ந்த பத்மாவதி மனுவை ஏற்று, சின்னம் ஒதுக்கக்கூடாது. கர்நாடகாவில் வாக்காளர் அட்டை உள்ளதால், தேர்தலில் அவர் போட்டியிட முடியாது' என எதிர்ப்பு தெரிவித்தனர்.
லோக்சபா, ராஜ்யசபா தேர்தலில், எந்த மாநிலத்தை சேர்ந்தவரும், எந்த மாநிலத்திலும் தேர்வு செய்யப்படலாம். ஆனால், சட்டசபை தேர்தலில் அந்தந்த மாநிலத்தில் வாக்காளராக இருந்தால்தான் போட்டியிட முடியும். இதை தேர்தல் நடத்தும் அலுவலர் மணீஷ் உள்ளிட்டோர் உறுதி செய்தனர். இதனால் பத்மாவதி தவிர மற்ற வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கி, அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை வழங்கி அனுப்பினர். ஆனால், பிரச்னை எழுப்பிய சுயேட்சைகள் மட்டும் செல்லாமல் இரவு, 10:00 மணி வரை அங்கேயே அமர்ந்தனர்.
இதனால் தேர்தல் ஆணையத்துக்கு 'பத்மாவதி மனுவை நிராகரிக்க சுயேட்சை வேட்பாளர்கள் கூறுகின்றனர்' என்று அறிக்கை அனுப்பினர். இதனால் நள்ளிரவு, 1:00 மணி வரை குழப்பம் நீடித்தது. தேர்தல் நடத்தும் அலுவலருக்கு, மனுவை நிராகரிக்க அதிகாரம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.இதனால் பத்மாவதி மனுவை, தேர்தல் நடத்தும் அலுவலர் மணீஷ் நிராகரித்து, 46 வேட்பாளர்களை கொண்ட இறுதி பட்டியலை தயார் செய்து நேற்று அதிகாலை, 1:30 மணிக்கு அனுமதி பெற்றார். அதில் திருத்தம் உள்ளதா என்பதை உறுதி செய்து நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு இறுதி அறிவிப்பு வெளியானது.
பத்மாவதி மனுவை அனுமதிக்க கூடாது என்பதை, பல மாநிலங்களில் போட்டியிட்ட பத்மராஜன், அக்னி ஆழ்வார் போன்றோர் முன்னதாகவே அறிந்திருந்தனர். ஆனால், அதிகாரிகள் என்ன செய்கிறார்கள் என்பதை பார்ப்பதற்காக, மாலை, 5:00 மணிக்கு பிரச்னையை எழுப்பியதால், மாலை, 5:00 மணிக்கு முடிய வேண்டிய அறிவிப்பு, 10:30 மணி நேரம் தாமதமாக நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு வெளியிட வேண்டிய நிலை ஏற்பட்டது.
அதிகாரிகள் மீது நடவடிக்கை?
கர்நாடகா பெண் வேட்பாளர், அவர் முன்மொழிந்த, 10 பேர், அவரது அபிடவிட்டில் கர்நாடகா நோட்டரி பப்ளிக் கையெழுத்திட்டது, அவரது வங்கி கணக்கு உள்ளிட்ட அனைத்து விபரமும் கர்நாடகாவில் உள்ளதை, தேர்தல் அலுவலர், அதிகாரிகள், தேர்தல் பார்வையாளர்கள் என அனைவரும் கவனிக்காமல் விட்டது எப்படி? என்ற கேள்வி, தேர்தல் ஆணையத்து எழுந்துள்ளது. இதனால் அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயும் என தகவல் வெளியாகி உள்ளது.