ADDED : மே 09, 2024 06:23 AM
ஈரோடு : வெயில் வாட்டி வதைத்து வந்த ஈரோட்டில், நேற்று திடீரென வானிலையில் மாற்றம் ஏற்பட்டு சாரல் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
ஈரோட்டில், வெயில் தாக்கம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நிலவி வருகிறது. வெப்ப அலையில் இந்தியாவிலேயே 3வது இடத்தை ஈரோடு மாவட்டம் பிடித்துள்ளது. காலை, 10:00 மணிக்கு தொடங்கும் வெயில் தாக்கமானது மாலை, 6:00 மணி வரை நீடிக்கிறது. அதன் பிறகு இரவிலும் அதன் தாக்கம் நீடித்து வருவதால் குழந்தைகள், முதியோர் என அனைத்து தரப்பினரும் கடுமையான அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எப்போது மழை பொழியும் என்ற ஏக்கத்துடன் இருந்து வந்த ஈரோடு மக்களை, மகிழ்ச்சி படுத்தும் வகையில் இரு நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் சிறிது நேரம் மழை பெய்தது. இந்நிலையில், நேற்று அதிகாலை முதலே குளிர்ந்த காற்று வீசி வந்ததோடு, திடீரென்று சிறிது நேரம் சாரல் மழை ஆங்காங்கே பெய்தது. இந்த வானிலை மாற்றத்தால் மக்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு மகிழ்ச்சியடைந்தனர்.