/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாவட்டத்தில் களை கட்டிய ஆடிப்பெருக்கு காவிரியில் புனித நீராட குவிந்த மக்கள்
/
மாவட்டத்தில் களை கட்டிய ஆடிப்பெருக்கு காவிரியில் புனித நீராட குவிந்த மக்கள்
மாவட்டத்தில் களை கட்டிய ஆடிப்பெருக்கு காவிரியில் புனித நீராட குவிந்த மக்கள்
மாவட்டத்தில் களை கட்டிய ஆடிப்பெருக்கு காவிரியில் புனித நீராட குவிந்த மக்கள்
ADDED : ஆக 04, 2025 08:41 AM
ஆடிப்பெருக்கு விழா, தமிழகத்தில் நேற்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. ஈரோடு மாநகரில் அதிகாலை முதலே அம்மன் கோவில்களுக்கு பக்தர்கள் வரத் தொடங்கினர். ஈரோடு பெரிய மாரியம்மனுக்கு பல்வேறு திரவிய அபிஷேகம், அலங்காரம் செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல சின்ன மாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன், கொங்காலம்மன், வீரப்பன்சத்திரம் மாரியம்மன், சூரம்பட்டிவலசு மாரியம்மன், கள்ளுக்கடை மேடு பத்ரகாளியம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. திண்டல் முருகன் கோவில், ஈஸ்வரன் கோவில், பெருமாள் கோவிலிலும் சிறப்பு பூஜை நடந்தது.
காவிரி கரையில் குவிந்த மக்கள்
ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி கரைக்கு அதிகாலை முதலே மக்கள் குவிய தொடங்கினர். காவிரி தாயை வணங்கி புனித நீராடி, முன்னோர்களை வழிபட்டு படையலை ஆற்றில் விட்டனர். அதேபோல் பரிகார வழிபாடு, சப்த கன்னிமார் வழிபாடு, சுமங்கலி பெண்கள் வழிபாடு, புதுமண தம்பதி தாலி மாற்றும் சடங்கும் வழக்கமான உற்சாகத்துடன் நடந்து. காவிரி தாய்க்கு தேங்காய், வாழைப்பழம், கனிகள் மற்றும் முளைப்பாரி வைத்து வழிபட்டனர். தற்போது ஆற்றில் வெள்ளம் அதிகரித்து காணப்படுவதால், பக்தர்கள் நீண்ட நேரம் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. கடந்தாண்டை விட கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதேபோல் நட்டாற்றீஸ்வரர் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் காவிரி கரையிலும் மக்கள் திரண்டனர். புனித நீராடி வழிபட்டு சென்றனர்.களையிழந்த கூடுதுறைஆடிப்பெருக்கு விழா, பவானி கூடுதுறையில் எப்போதும் களை கட்டும். நடப்பாண்டு எதிர்பார்த்த அளவு இல்லை. மக்கள் வருகை வெகுவாக குறைந்து விட்டது. வந்திருந்த மக்கள், பக்தர்கள், காவிரி கரையோரத்தில் திருமணத் தடை, தோஷ நிவர்த்தி பரிகாரம், முன்னோர்களுக்கு திதி, பிண்டம் வைத்து வழிபட்டனர். பெண்கள் புதிதாக தாலிக்கயிறு மாற்றுதல், புதுமண தம்பதி திருமணத்தின்போது அணிந்திருந்த மாலைகளை ஆற்றில் விட்டனர். காவிரி படித்துறைகளில் பழங்கள், காய்-கனிகளை வைத்து வழிபட்டனர். பண்ணாரியில்...சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோவிலுக்கு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர். குண்டத்தில் மிளகு, உப்பு துாவி வழிபட்டனர். இதனால் கோவில் வளாகம் களை கட்டியது. பக்தர்கள் வசதிக்காக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.கோவில்களில் வழிபாடு
புன்செய்புளியம்பட்டி மாரியம்மன் கோவில், ஊத்துக்குளியம்மன், பிளேக் மாரியம்மன், காமாட்சியம்மன், சவுடேஸ்வரியம்மன், ஆதி பராசக்தியம்மன் உள்ளிட்ட அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பவானிசாகர் டணாய்க்கன் கோட்டை கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. தொட்டம்பாளையம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.
கொடிவேரி 'வெறிச்'
பவானிசாகர் அணையில் இருந்து எந்நேரத்திலும் உபரி நீர் திறக்கும் நிலை உள்ளது. இதனால் கோபி அருகேயுள்ள கொடிவேரி தடுப்பணையில், எட்டாவது நாளாக நேற்றும் பக்தர்களுக்கு தடை நீட்டிக்கப்பட்டிருந்தது. இதனால் ஆடிப்பெருக்கு நாளில் அணை வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.
-நிருபர் குழு-

