ADDED : அக் 16, 2026 06:54 AM
ஈரோடு:தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்கம் சார்பில், ஈரோடு திண்டலில் உள்ள துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மக்கள் நலன் கருதி காலியாக உள்ள, 1,260க்கும் மேற்பட்ட மருந்தாளுனர் பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும். அனைத்து மருத்துவமனைகள், மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்துகளை உரிய வெப்ப நிலையில் பராமரிக்கும் குளிர்பதன வசதியுடன், போதுமான இட வசதியுடன் கிடங்கு அமைக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தாளுனர் பணி என்பது மருத்துவருடன் இணைந்த பணியாகும். ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அரசாணை-82 ன் படி மருந்தாளுனர் பணி நேரம் காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை என்பதை அமலாக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். மாநில பொருளாளர் இளங்கோ தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் கதிர்வேல், செயலாளர் சண்முகம், பொருளாளர் மோகனாம்பாள் கோரிக்கை குறித்து பேசினர்.
