/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாவட்டத்தில் கோலாகலமாக நடந்த பொங்கல் விழா
/
மாவட்டத்தில் கோலாகலமாக நடந்த பொங்கல் விழா
ADDED : ஜன 16, 2024 10:05 AM
ஈரோடு: பொங்கல் பண்டிகை விழா, ஈரோடு மாவட்டத்தில் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பாரம்பரிய விளையாட்டுகளும் நடந்து, விழாவை களை கட்ட செய்தது.
பொங்கல் பண்டிகை தினமான நேற்று அதிகாலை முதல், ஈரோட்டின் அனைத்து பகுதிகளிலும் வீட்டின் வாசலிலும், வளாகத்திலும், பொது வெளியிலும் பொங்கல் வைத்து பெண்கள், குழந்தைகள் உற்சாகமாக காணப்பட்டனர்.
நேற்று முன்தினம் இரவில் அனைத்து வீடுகளிலும் பிரமாண்டமான கோலம், 'ேஹப்பி பொங்கல், பொங்கல் வாழ்த்துக்கள்' என தமிழ் மற்றும் ஆங்கில வார்த்தைகளிலும், தங்கள் பெயர், உறவுகளை வரவேற்றும் கோலமிட்டிருந்தனர். பல வீடுகளில் பல வண்ணத்துடன், பூக்களை துாவியும் அலங்கரித்து வைத்திருந்தனர்.
நேற்று காலை பொங்கல் வைத்த பின், கரும்பு தோரணம் அமைத்து, வாழை இலையில் பொங்கலுடன், காய்கறிகள், பழங்கள், தேங்காய், இனிப்புகளையும் படைத்து விளக்கு மற்றும் சூரியனை வழிபட்டனர்.
ஒரே இடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள பல இடங்களில், பாடல்கள் பாடியும், விளையாடியும் உற்சாகமாக காணப்பட்டனர்.
* ஈரோடு, கருங்கல்பாளையம் கலைத்தாய் அறக்கட்டளை சார்பில் ஐந்து வகை நிலங்களை குறிக்கும் வகையில் ஐந்து பானைகளில் பொங்கல் வைத்தனர். பொங்கல் பாடல், பறையாட்டம், சிலம்பாட்டம், சாட்டை குச்சியாடட்டம், போர்ப்பறை, கரகாட்டம், ஒயிலாட்டம், கம்பு சுற்றும் நிகழ்ச்சிகளை நடத்தனர். இளவட்ட கல்லை துாக்கி, இளைஞர்கள் உற்சாகம் அடைந்தனர்.
புளியம்பட்டியில்...
புன்செய்புளியம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் நடந்த பொங்கல் விளையாட்டு போட்டிகளில், சிறுவர், சிறுமியர் ஆர்வமுடன் பங்கேற்று விளையாடினர்.
மாரியம்மன் கோவில் மைதானத்தில், உழவர் இளைஞர் மன்றத்தின், 45வது ஆண்டு விழாவை முன்னிட்டு, சிறுவர், சிறுமியருக்கு ஓட்டப்பந்தயம், பரதநாட்டியம், இசை நாற்காலி, பலுான் ஊதுதல் ஆகிய போட்டிகளும், பெரியவர்களுக்கு லக்கி கார்னர், கோலப்போட்டி, பானை உடைத்தல் ஆகிய போட்டிகளும் நடந்தன. இதேபோல் காந்திநகர், நல்லுார் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில், சிறுவர் மற்றும் பெண்களுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கோபியில்...
கோபி, பாரியூர் சாலை அருகே மேட்டுவலவு மாரியம்மன் கோவில் வீதி மக்கள் ஒன்றாக கூடி, நேற்று காலை சர்க்கரை பொங்கல் வைத்து வழிபட்டனர். கோபி போலீஸ் ஸ்டேசனில் பொங்கல் வைத்தனர்.
டி.எஸ்.பி., தங்கவேல் தலைமையில், இன்ஸ்பெக்டர் சண்முகவேலு மற்றும் போலீசார், ஒரே கலரில் வேட்டி-சட்டை அணிந்து பங்கேற்றனர்.
கோபியில் வெங்கட்ராமன் வீதியில், அ.தி.மு.க., கவுன்சிலர் சுமையாபானு தலைமையில், பொங்கல் வைத்து கொண்டாடினர்.