/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பு.புளியம்பட்டி சந்தையில் எகிறிய ஆடுகளின் விலை
/
பு.புளியம்பட்டி சந்தையில் எகிறிய ஆடுகளின் விலை
ADDED : அக் 25, 2024 12:57 AM
பு.புளியம்பட்டி சந்தையில்
எகிறிய ஆடுகளின் விலை
புன்செய் புளியம்பட்டி, அக். 25-
புன்செய்புளியம்பட்டி கால்நடை சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை கூடுகிறது. சந்தைக்கு,
700க்கும் மேற்பட்ட ஆடுகள் நேற்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதில், 10 கிலோ ஆடு, 8,000 முதல் 9,000 ரூபாய்; 10 கிலோ ஆட்டு கிடாய், 10 ஆயிரம் முதல், 12 ஆயிரம் ரூபாய் வரை விற்றது. தீபாவளி பண்டிகைக்காக ஆடுகளை வாங்க ஆர்வம் காட்டியதால் ஆடுகளின் விலை, 2,000 ரூபாய் முதல், 3,000 ரூபாய் வரை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். புரட்டாசி மாதத்தால் ஆடு விற்பனை மந்தமாக இருந்தது. ஐப்பசி மாதம் பிறந்ததால் கடந்த வாரம் ஓரளவுக்கு விற்பனை உயர்ந்த நிலையில், இந்த வாரம் விற்பனையும் விலையும் உயர்ந்ததால், கால்நடை வளர்க்கும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
* ஈரோடு, கருங்கல்பாளையத்தில் நேற்று நடந்த மாட்டு சந்தைக்கு, 6,000 ரூபாய் முதல், 23,000 ரூபாய் மதிப்பில், 60 கன்றுகள், 22,000 ரூபாய் முதல், 70,000 ரூபாய் மதிப்பில், 250 எருமை மாடுகள், 23,000 ரூபாய் முதல், 80,000 ரூபாய் மதிப்பில், 350 பசு மாடுகள், 75,000 ரூபாய்க்கு மேலான விலையில், 50க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த கலப்பின மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், வழக்கத்தைவிட மாடுகளை விற்கவும், வாங்கவும் அதிக வியாபாரிகள், விவசாயிகள் வந்தனர். இதனால், 90 சதவீத மாடுகள் விற்பனையாகின.