மலைக்குன்றில் 2 குட்டிகளுடன் உலாவிய சிறுத்தையால் அதிர்ச்சி
மலைக்குன்றில் 2 குட்டிகளுடன் உலாவிய சிறுத்தையால் அதிர்ச்சி
ADDED : ஆக 09, 2026 05:09 AM
புன்செய்புளியம்பட்டி:மாராயிபாளையம்
மலைக்குன்றில் சிறுத்தை மட்டுமே பதுங்கி உள்ளதாக கருதப்பட்ட
நிலையில், அதனுடன் இரண்டு குட்டிகள் நேற்று மலையில் உலா வந்தது. இதனால்
மக்கள் மட்டுமின்றி வனத்துறையினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
விளாமுண்டி
வனப்பகுதியில் இருந்து வெளியேறிய இரண்டு சிறுத்தை,
புன்செய்புளியம்பட்டி அருகே மாராயிபாளையம் மலைக்குன்றில்
பதுங்கியது. ஊருக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடிய நிலையில்,
வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்தனர். இதில் கடந்த
பிப்., மாதம் ஆண் சிறுத்தை சிக்கியது. அதேசமயம் மலைக்குன்றில்
பதுங்கியுள்ள பெண் சிறுத்தை இதுவரை சிக்கவில்லை. இந்நிலையில்
மலைக்குன்றின் மீது இரண்டு குட்டிகளுடன் பெண் சிறுத்தை நேற்று
நடமாடியதை பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். வனத்துறையினர்
மெத்தனம் காட்டாமல், சிறுத்தையை குட்டிகளுடன் விரைந்து பிடிக்க,
மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து வனத்துறையினர்
கூறியதாவது: சிறுத்தையை பிடிக்க ஏற்கனவே மூன்று கூண்டு
வைக்கப்பட்டுள்ளது. குட்டிகளுடன் சிறுத்தை நடமாடியது குறித்து
மக்கள் தெரிவித்த அடிப்படையில் ஆய்வு செய்தோம்.
தானியங்கி
கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இதன் பதிவுகளை வைத்து, உயர்
அதிகாரிகளின் உரிய அனுமதி பெற்று, மயக்க ஊசி செலுத்தி பிடிக்க
நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கூறினர்.
