ADDED : ஏப் 28, 2024 03:55 AM
முத்துாரில் எள் ஏலம்
காங்கேயம்: திருப்பூர் மாவட்டம் முத்துார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், எள் ஏலம் நேற்று நடந்தது. இதில், 35 விவசாயிகள், 7,518 கிலோ எள் கொண்டு வந்தனர். ஒரு கிலோ, 12௩ ரூபாய் முதல் 144.39 ரூபாய் வரை, 10.50 லட்சம் ரூபாய்க்கு விற்றது.
சொத்து வரியை செலுத்தி
ஊக்கத்தொகை பெற அறிவிப்பு
காங்கேயம்: காங்கேயம் நகராட்சியில், 18 வார்டுகள் உள்ளன. எண்ணெய் ஆலை, கைத்தறிக்கூடங்கள், அரிசி ஆலை, பனியன் கம்பெனிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்கூடங்கள் உள்ளன. இவற்றில் சொத்து வரியை முன்கூட்டி செலுத்தினால் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதன்படி நடப்பாண்டு நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை, வரும், 30ம் தேதிக்குள் செலுத்தி, 5 சதவீத ஊக்கத்தொகை அல்லது 5,௦௦௦ ரூபாய் தள்ளுபடி பெற, நகராட்சி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
வெள்ளகோவில் நகராட்சியில்
ஒரே நாளில் ரூ.1 கோடி வசூல்
காங்கேயம், ஏப். 28-
வெள்ளகோவில் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வீட்டு வரி, காலியிட வரி, சொத்துவரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வரிகளை நகராட்சி நிர்வாகம் வசூலித்து வருகிறது. இந்நிலையில் கடந்த, ௨௬ம் தேதி ஒரே நாளில், 1 கோடி ரூபாய் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. வரி வசூல் பணி மேற்கொண்ட வருவாய் ஆய்வாளர், வருவாய் உதவி ஆய்வாளர் மற்றும் நகராட்சி பணியாளர்களுக்கு கேடயம் வழங்கி, நகராட்சி கமிஷனர் வெங்கடேஸ்வரன் பாராட்டு தெரிவித்தார்.
அந்தியூரில் மாம்பழ
குடோன்களில் ஆய்வு
அந்தியூர்: அந்தியூரில் உள்ள மாம்பழ குடோன்களில், ரசாயன முறையில் மாம்பழங்களை பழுக்க வைப்பதாக, ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் சென்றது.
இதன்படி உணவு பாதுகாப்பு அலுவலர் சதீஸ்குமார், தலைமையில், எண்ணமங்கலம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ருத்ரமூர்த்தி, உள்ளிட்டோர், அந்தியூரில் உள்ள இரு மாம்பழ குடோன்கள், அதை ஒட்டியுள்ள நான்கு பழக்கடைகளில், ஆய்வு செய்தனர். செயற்கை முறையில் மாம்பழங்களை பழுக்க வைத்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். உரிமம் இல்லாமல் செயல்பட்டால் குடோன் மூடப்படும் எனவும் எச்சரித்து சென்றனர்.
தற்போது பள்ளி விடுமுறை நாட்கள் என்பதால், இனிப்பு, கார வகைகளை மாணவ, மாணவியர் விரும்பி சாப்பிடுவர். எனவே அந்தியூரில் உள்ள பேக்கரி, பலகார கடைகளிலும் உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வு செய்ய, மக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
வாலிபருக்கு கத்திக்குத்துமூன்று பேருக்கு சிறை
தாராபுரம்,: தாராபுரத்தை அடுத்த வீராட்சி மங்கலத்தை சேர்ந்தவர்கள் பாரதிராஜா, முருகானந்தம். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பாரதிராஜாவை கத்தியால் முருகானந்தம் குத்தினார். புகாரின்படி தாராபுரம் போலீசார் அவரை கைது செய்தனர்.
இந்நிலையில் முருகானந்தத்தின் உறவினர் தாமரைக்கண்ணன், 20, வீட்டுக்குச் சென்ற பாரதிராஜா உறவினர்கள் காளிதாஸ், 39, பூபதி, 21, விக்னேஷ், 30, ஆகியோர், கை மற்றும் கத்தியால் தாக்கியதில், தாமரைக்கண்ணன் பலத்த காயமடைந்தார். இதுகுறித்த புகாரில் தாராபுரம் போலீசார், மூன்று பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
வெயிலுக்கு சுருண்டு
விழுந்தவர் பலி
தாராபுரம்-
தாராபுரத்தில் வெயில் தாக்கத்தால் சாலையில் சுருண்டு விழுந்தவர் பலியானார்.
தாராபுரத்தில் ஐந்து சாலை சந்திப்பில், நேற்று மதியம், 12:௦௦ மணியளவில், 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், பேக்கரியில் பலகாரம் மற்றும் தேநீர் அருந்திவிட்டு, நடந்து சென்றார். பஸ் நிறுத்தம் அருகே சென்றவர், திடீரென விழுந்தார். நீண்ட நேரம் அசையாமல் கிடக்கவே, அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது, இறந்து விட்டது தெரிந்தது.
தகவலின்படி சென்ற தாராபுரம் போலீசார், உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது சட்டை பாக்கெட்டில் பழநியில் இருந்து தாராபுரம் வந்ததற்கான பஸ் டிக்கெட் இருந்தது. அவர் யார் என்பது குறித்து தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர். கடும் வெயில் தாக்கத்தால் சுருண்டு விழுந்து இறந்திருக்கலாம் எனத் தெரிகிறது.
காரில் ரேஷன் அரிசி
கடத்தியவர் கைது
ஈரோடு,-
பவானி அருகே சித்தோடு சாலையில், ஈரோடு மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். ஒரு காரில் சோதனை செய்ததில், 17 மூட்டைகளில், 850 கிலோ ரேஷன் அரிசி கடத்தி செல்லப்படுவது தெரிந்தது.
காரில் இருந்தவரிடம் விசாரித்ததில், கோபி, பாரியூர், நஞ்சகவுண்டன்பாளையம் செல்வகுமரன் தெருவை சேர்ந்த தாமோதரன், 26, என தெரிந்தது. மக்களிடம் ரேஷன் அரிசியை வாங்கி, பெருந்துறை சிப்காட் பகுதியில் தங்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்ய, காரில் கடத்தி செல்வதை ஒப்புக்கொண்டனர். தாமோதரனை கைது செய்து, ரேஷன் அரிசியுடன் காரை பறிமுதல் செய்தனர்.
மூதாட்டி தாலிக்கொடி
பறித்த இருவர் கைது
கோபி, ஏப். 28-
கவுந்தப்பாடி அருகே பெருந்தலையூரை சேர்ந்தவர் அலமேலு, 60; கடந்த, 3ம் தேதி இரவு கணவர் ஈஸ்வரனுடன், முன்பக்க கதவை திறந்து வைத்து விட்டு, வீட்டில் துாங்கி கொண்டிருந்தார். வீட்டுக்குள் புகுந்த மர்ம ஆசாமிகள், அலமேலுவின் ஐந்தரை பவுன் தாலிக்கொடியை பறித்து சென்றனர். அலமேலு புகாரின்படி கவுந்தப்பாடி போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இது தொடர்பாக சேலத்தை சேர்ந்த விஜய், 28, தாமரைச்செல்வன், 24, ஆகியோரை நேற்று கைது செய்தனர். ஐந்தரை பவுன் தாலிக்கொடியை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.
மத்தாப்பு குடோனில்
தீ; பெண் காயம்
கோபி: கோபி அருகே எலத்துாரை சேர்ந்தவர் கணேசன், 50; அதே பகுதியில் வாண வெடி மற்றும் மத்தாப்பு தயாரிக்கும் தொழில் செய்கிறார். குடோனில் எலத்துாரை சேர்ந்த பாலாமணி, 47, மத்தாப்பு தயாரிக்கும் பணியில் நேற்று மதியம் ஈடுபட்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக, மருந்து தீப்பற்றி எரிந்ததில், பாலாமணிக்கு கையில் மற்றும் முகத்தில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக கோபி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
அ.தி.மு.க., ஊராட்சி
உறுப்பினர் கைது
ஈரோடு-
மொடக்குறிச்சி போலீசார், சாவடிபாளையம் புதுார் நான்கு ரோடு அருகே நேற்று ரோந்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக நின்ற, மொடக்குறிச்சி, நன்செய் ஊத்துக்குளி, சாவடிபாளையம் புதுார், புது விநாயகர் நகரை சேர்ந்த சரவணன், 51, என்பவரின் மொபைல் போனை வாங்கி சோதனை செய்தனர். அதில் கேரள லாட்டரி எண்கள் எழுதப்பட்டு இருந்தது.
அவரிடம் இருந்த ஒரு நோட்டில் பேனாவால் எழுதப்பட்ட லாட்டரி எண்கள் இருந்தது. இதனால் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். அ.தி.மு.க,வை சேர்ந்த சரவணன், நஞ்சை ஊத்துக்குளி ஊராட்சி வார்டு உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

