ADDED : மே 31, 2024 03:37 AM
புளியம்பட்டி சந்தையில்
மாடுகள் விலை உயர்வு
புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி கால்நடை சந்தை நேற்றும், நேற்று முன்தினமும் நடந்தது. பரவலாக மழை பெய்துள்ளதால் கால்நடைகளை வாங்க, விவசாயிகள் ஆர்வம் காட்டினர். நேற்றைய சந்தைக்கு, 30 எருமைகள், 200 கலப்பின மாடுகள், 80 கன்றுகள் 200 ஜெர்சி மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
எருமைகள், 20-33 ஆயிரம் ரூபாய், கறுப்பு வெள்ளை மாடு, 22-43 ஆயிரம் ரூபாய், ஜெர்சி, 23-49 ஆயிரம், சிந்து, 20-44 ஆயிரம், நாட்டுமாடு, 40-76 ஆயிரம் ரூபாய் வரை, விற்றது. வளர்ப்பு கன்றுகள் 6,000 முதல், 15 ஆயிரம் வரையும் விற்பனையானது. கர்நாடக, கேரளா மாநில வியாபாரிகள் கால்நடைகளை வாங்கிச்சென்றனர்.
அதேபோல், 200க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. 10 கிலோ எடை வெள்ளாடு ஒன்று, 7,000 ரூபாய் வரை; 10 கிலோ வரையிலான செம்மறி ஆடுகள், 6,500 ரூபாய் வரை விற்றது. கடந்த வாரத்தை விட கறவை மாடுகள், 2,000 முதல், 4,000 ரூபாய் வரை விலை உயர்ந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தொழில் முன்னோடி திட்டம்
ரூ.6.38 கோடி ஒதுக்கீடு
ஈரோடு-
ஈரோடு மாவட்டத்தில் பட்டியலின மக்கள் தொழில் முனைவோராக மாற்றும், அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில், 94 பேருக்கு, 6.38 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி மாவட்ட அதிகாரிகள் கூறியதாவது: கடந்தாண்டு துவங்கப்பட்ட இத்திட்டம் மூலம், மாநில அளவில், 2,136 பயனாளிகளுக்கு வங்கிகளில் கடன் ஒப்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது. இணைய வழியாக இப்பயனாளிகளுக்கு, தொழில் முனைவு பயிற்சி வழங்கப்படுகிறது.
இத்திட்டம் மூலம், 1,303 தொழில் முனைவோர்களுக்கு, 159.76 கோடி ரூபாய் அரசு மானியமாக வழங்கி உள்ளது. இதில், 288 பெண் தொழில் முனைவோருக்கு, 33 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில், 94 பயனாளிகளுக்கு, 6 கோடியே, 38 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், 49 பேருக்கு, 3.79 கோடி ரூபாய்
விடுவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறினர்
அரசுப்பள்ளி சுற்றுசுவரை
இடித்து தள்ளிய யானைகள்
சத்தியமங்கலம்: ஆசனுார் அருகே உகினியம் மலை கிராமத்தில் அரசு துவக்கப்பள்ளி செயல் பட்டு வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய யானைகள், பள்ளி சுற்றுச்சுவரை இடித்து தள்ளின. மேலும் கழிப்பறை கதவு, மெயின் கதவு என பல இடங்களில் சேதமாகி உள்ளது. இதனால் மலை கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.
திருமணம் ஆகாத விரக்தி
வாலிபர் விபரீத முடிவு
அந்தியூர்: கள்ளக்குறிச்சி அருகே நாதம்பூரை சேர்ந்தவர் மாவீரன், 28; அதே பகுதியை சேர்ந்த சிலருடன், அத்தாணி பகுதியில், கரும்பு வெட்டும் வேலைக்கு வந்தார், நேற்று முன்தினம் வேலை முடிந்து, நண்பர்களுடன் மது
அருந்தியுள்ளார்.
அப்போது தனக்கு இன்னும் திருமணமாகவில்லை என புலம்பியுள்ளார். நண்பர்கள் சென்ற நிலையில் அப்பகுதியில் இருந்த பாக்குமரத்தில், லுங்கியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் விசாரிக்கின்றனர்.
கருணாநிதி நுாற்றாண்டு
நிறைவு விழாவில் உதவி
ஈரோடு: முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு நிறைவு மற்றும் 101வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, தி.மு.க., இளைஞரணி சார்பில் வரும் ஜூன், 3ல் பல்வேறு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இதில் சென்னிமலை சாலையில் உள்ள என்.எல்.கருணை இல்லத்தில் முதியோர்களுக்கு மதிய உணவை, மாவட்ட செயலாளரும், அமைச்சருமான முத்துசாமி தலைமை வகித்து வழங்குகிறார். இதில் அனைத்து நிர்வாகிகள் பங்கேற்க, இளைஞரணி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
போலீஸ் - பொதுமக்கள்
நல்லுறவு கூட்டம்
ஈரோடு: ஈரோடு, திருநகர் காலனியில், போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநகராட்சி கவுன்சிலர் ஜெயந்தி தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு வணிகர் நலவாரிய நிர்வாகக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
கருங்கல்பாளையம் எஸ்.ஐ., அசோகன் பேசினார். பள்ளி மாணவர்களை போதை மாத்திரை பழக்கத்துக்கு அடிமையாகாமல் கண்காணிப்பது, குற்றச்சம்பவங்களை நடக்காமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்து விளக்கி கூறினார். வியாபாரிகள், மக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
ரயிலில் மொபைல் திருடிய
இரு வாலிபர்கள் கைது
ஈரோடு: சென்னை, ராயபேட்டையை சேர்ந்தவர் கலீல் அகமது, 32; எர்ணாகுளத்தில் இருந்து சென்னைக்கு, பாட்னா விரைவு ரயில் முன் பதிவு பெட்டியில் பயணித்தார். சாம்சங் கேலக்சி-33 மொபைல் போனை சார்ஜரில் போட்டு துாங்கி விட்டார். ஈரோடு ஸ்டேஷனை அடைந்த நிலையில், கண் விழித்து பார்த்த போது மொபைல் போனை காணவில்லை.
ஈரோடு ரயில்வே போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன், 23, அவரது கூட்டாளியான ஒட்டமெத்தை, சக்திவேல், 27, ஆகியோரை கைது செய்தனர். மொபைல் போனை போலீசார் பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மாவட்ட சிறையில் அடைத்தனர்..