/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பரிதா பேகம் ஓட்டை வேறு யாரோ போட்டுட்டாங்க!
/
பரிதா பேகம் ஓட்டை வேறு யாரோ போட்டுட்டாங்க!
ADDED : பிப் 06, 2025 02:02 AM

ஈரோடு:ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், ஒரு பெண்ணின் ஓட்டை அவர் வரும் முன்பே மற்றொருவர் பதிவு செய்து சென்றதால், பிரச்னை எழுந்தது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி, 168 வது ஓட்டுச்சாவடியில், நேற்று பரிதா பேகம் என்ற பெண், தன் கணவருடன் ஓட்டுப்பதிவு செய்ய வந்தார்.
வரிசையில் நின்ற அவர், தனது ஓட்டை பதிவு செய்ய அறைக்கு சென்றபோது, அவரது ஆவணங்களை அதிகாரிகள் சரி பார்த்தனர். அவரது ஓட்டை அதற்கு முன்னதாகவே பதிவு செய்துவிட்டதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிர்ச்சி அடைந்த அப்பெண், ஒட்டுச்சாவடி அலுவலர்களிடம் முறையிட்டார். அவரால் ஓட்டை பதிவிட முடியாத நிலையில், அவரது கணவருக்கு ஓட்டு இருந்ததால், அவர் பதிவு செய்தார்.
பின், பரிதாபேகம் கூறுகையில், ''நான் ஓட்டு செலுத்த வந்தபோது, எனது ஆவணங்களை சரி பார்த்தனர். எனது ஓட்டை ஏற்கனவே யாரோ செலுத்தியதாக தெரிவித்தனர். நான் முறையிட்டதற்கு சரியான பதில் கூறவில்லை. எனது ஓட்டை செலுத்தியவரின் கையெழுத்தை காண்பிக்கும்படி கேட்டபோது, அதை காண்பிக்க மறுத்துவிட்டனர். ஏதோ கோல்மால் செய்துள்ளனர்,'' என்றார்.
இதுபற்றி, அதிகாரிகளிடம் கேட்க முயன்ற போது, 'அங்கிருந்த ஒரு அதிகாரி, உள்ளே செல்ல அனுமதி மறுத்ததுடன், 'சேலஞ்ச் ஓட்டு' பதிவு செய்து கொள்ளுங்கள் என்றோம். ஆனால், அவர் மறுத்துவிட்டார்' என்றார்.
அதேபோல, ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே உள்ள, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும், ஒரு பெண் ஓட்டுப்பதிவு செய்ய சென்றார். அவரது ஓட்டையும் யாரோ பதிவு செய்து விட்டதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர் கூச்சலிட்டு, வெளியே வந்ததும், செய்தியாளர்களை சந்திக்க வந்தார். அதற்குள், அவரை மீண்டும் ஓட்டுப்பதிவு அறைக்கு அழைத்துச் சென்று, ஓட்டை பதிவு செய்ய அனுமதித்தனர்.
அப்பெண், தனது விபரம் குறித்து தெரிவிக்க மறுத்துவிட்டார். ஆனால், இரண்டாவது முறையாக அவரை எவ்வாறு அனுமதித்தனர் என்பதும் குளறுபடியாகவே இருந்தது.