ADDED : ஜூலை 13, 2026 05:19 AM
ஈரோடு:ஈரோடு,
பெரிய வலசு வள்ளியம்மை வீதியை சேர்ந்த கருப்பையா மகன் சபரீஷ், 17;
கோவையில் தனியார் கல்லுாரியில் படிக்கிறார். நண்பர்களான
ஞானஸ்ரீதரன், நித்தீஷூடன் நாராயணவலசில் உள்ள பேக்கரிக்கு டீ
சாப்பிட போவது வழக்கம்.
மாணிக்கம்பாளையத்தை சேர்ந்த ரவி, 26,
அவரது அண்ணன் வசந்த், 30, நண்பர்களான பெரியவலசு கள்ளங்காட்டை
சேர்ந்த பாலாஜி, 24, தென்றல் நகரை சேர்ந்த நவீன்குமார், 24, பெரியவலசு
சுப்ரமணிய சிவா வீதி அஷ்வந்தமன், 23, ஆகியோரும் பேக்கரிக்கு
வருவது வழக்கம். இதில் ஞானஸ்ரீதரனுக்கும், வசந்த், ரவிக்கும் முன்
விரோதம் இருந்துள்ளது. கடந்த, 11ல் ஞானஸ்ரீதரனுக்கு போன் செய்த
ரவி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அதன் பின் வள்ளியம்மை வீதியில்
சபரீஷ், நித்தீஷ் பேசி கொண்டிருந்தனர். அங்கு பல்சர் பைக்கில் வந்த
வசந்த், ரவி, நவீன்குமார், பாலாஜி, அஷ்வந்தமன் ஆகியோர் ஞானஸ்ரீதரன்
குறித்து கேட்டனர்.
அப்போது ரவி தான் கொண்டு வந்த கத்தியால் சபரீஷின் கையில் வெட்டியுள்ளார்.
நித்திஷ் தப்பியோடி விட்டார். சபரீஷிற்கு இரு கையிலும் வெட்டுகாயம்
ஏற்பட்டுள்ளது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வர,
வசந்த் உள்ளிட்டோர் அங்கிருந்து தப்பியோடினர். சபரீஷ் அளித்த
புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
வசந்த், ரவி, நவீன்குமார், பாலாஜி, அஷ்வந்தமனை கைது செய்தனர். இதில்
வசந்த், பாலாஜி, நவீன்குமார் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள்,
வீரப்பன்சத்திரம் போலீசில் நிலுவையில் உள்ளதாக போலீசார்
தெரிவித்தனர்.
