/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பிற மாநிலங்கள் பின்பற்றும் தமிழக திட்டங்கள்: வீட்டு வசதித்துறை அமைச்சர் பெருமிதம்
/
பிற மாநிலங்கள் பின்பற்றும் தமிழக திட்டங்கள்: வீட்டு வசதித்துறை அமைச்சர் பெருமிதம்
பிற மாநிலங்கள் பின்பற்றும் தமிழக திட்டங்கள்: வீட்டு வசதித்துறை அமைச்சர் பெருமிதம்
பிற மாநிலங்கள் பின்பற்றும் தமிழக திட்டங்கள்: வீட்டு வசதித்துறை அமைச்சர் பெருமிதம்
ADDED : மார் 07, 2024 06:48 AM
ஈரோடு : ''தமிழகத்தில், செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளதால், இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலும், இங்குள்ள திட்டங்களை அங்கு செயல்படுத்தி வருகின்றனர்,'' என, அமைச்சர் முத்துசாமி கூறினார்.
ஈரோடு மாநகராட்சி, பி.பெ.அக்ரஹாரம் பகுதியில் சாலை உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார். ஈரோடு எம்.பி., கணேசமூர்த்தி, மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதிய பணிகளை துவக்கி வைத்து, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, நிருபர்களிடம் கூறியதாவது: வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில், தமிழகத்தில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளதால், இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலும், இங்குள்ள திட்டங்களை அங்கு செயல்படுத்தி வருகின்றனர். ஈரோடு மாநகராட்சி பி.பெ.அக்ரஹாரம் பகுதியில், 35 கோடி ரூபாய் மதிப்பில் சாலைகள் அமைத்தல், சிறு பாலங்கள் கட்டுதல், மழை நீர் வடிகால் வசதி செய்தல் உள்ளிட்ட, 176 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மற்றொரு நிகழ்ச்சியில், 1,002 பேருக்கு இலவச பட்டா வழங்கப்படுகிறது.
மக்கள் வழங்கும் மனுக்களுக்கு, 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படுகிறது. அதுபோன்ற மனுக்களின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை, மக்களின் நலனை அறியவும், 'நீங்கள் நலமா' என்ற திட்டத்தை நேற்று முதல்வர் துவக்கி வைத்து, மக்களுடன் நேரடியாக பேசுகிறார். இதன் மூலம் மக்களின் குறைகள், கோரிக்கைகள் விரைவாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.இவ்வாறு கூறினார்.
மண்டல தலைவர் பழனிசாமி, கவுன்சிலர் தமிழ்பிரியன், முன்னாள் கவுன்சிலர் ராமசந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

