பணி நிரந்தரம் செய்யக்கோரி டாஸ்மாக் ஊழியர் முறையீடு
பணி நிரந்தரம் செய்யக்கோரி டாஸ்மாக் ஊழியர் முறையீடு
ADDED : நவ 24, 2026 04:48 AM
ஈரோடு; ஈரோடு மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் - சி.ஐ.டி.யு., சார்பில் மாவட்ட தலைவர் முருகையா, மாவட்ட பொதுச் செயலர் ரவிசந்திரன், சி.ஐ.டி.யு., மாவட்ட செயலர் சுப்பிரமணி ஆகியோர் ஈரோடு கலெக்டர் கந்தசாமியிடம் மனு வழங்கி கூறியதாவது:
டாஸ்மாக் மதுபான கடைகளில் பணி செய்யும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள், 2003 நவ.,ல் பணியில் சேர்ந்து, 23 ஆண்டுகள் நிறைவடைந்தும், பணி நிரந்தரமின்றி தற்காலிக தொழிலாளராக உள்ளனர்.
இவர்கள் கடந்த செப்., முதல் 30,000, 33,000 ரூபாய் என ஊதியம் பெறுகின்றனர். அதேநேரம் டாஸ்மாக் நிறுவனத்தில், 2019 ல் பணிக்கு எடுக்கப்பட்ட இளநிலை உதவியாளர்கள், 40,000 ரூபாய்க்கும் கூடுதலான ஊதியம் பெறுகின்றனர். இவர்களை போன்ற கல்வி தகுதி கொண்டு, கடைகளில் பணி செய்வோரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.கடந்த, 2018 ல் பணி நிரந்தரத்துக்காக தொடரப்பட்ட வழக்கில், கடந்த மே, 14ல் வழங்கப்பட்ட தீர்ப்பில், இவர்களை பணி நிரந்தரம் செய்தும், பணி பலன்கள் வழங்க டாஸ்மாக் நிர்வாகத்தை நீதிமன்றம் கேட்டு கொண்டது. இவ்வாறாக, 174 தொழிலாளர்களுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது.
இவர்களுக்கு பணி வழங்காமல், டாஸ்மாக் நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. நிர்வாக மேல்முறையீட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்தும், பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. பாதுகாப்பற்ற நிலையில் பணி செய்யும் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இவ்வாறு கூறினர்.
